மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலும் செவ்வாய்க்கிழமை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கியுள்ளது. நாட்டின் மொத்த கொரோனா இறப்பு விகிதத்தில் 60% மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் நிகழ்ந்துள்ளன. அகமதா பாத்தில் மீண்டும் ஒருமுறை கொரோனாவால் 19 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், அகமதாபாத்தில் மட்டும் கொரோனா பலி எண்ணிக்கை 129 ஆனது. அகமதாபத்தில் இரண்டு நாட்களுக்கு முன்புகூட இதே போல 19 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் இறந்த மொத்தம் 31 பேர்களில் 25 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் சில நாட்களுக்கு முன்னரே இறந்துவிட்டனர். ஆனால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ததில் செவ்வாய்க்கிழமை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டன. மகாராஷ்டிராவிலும் குஜராத்திலும் சேர்த்து குறைந்தது 583 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை புதிதாக 1905 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தினமும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை மற்றொரு உச்சத்தை தொட்டது. சமீபத்திய போக்குக்கு ஏற்ப, நேற்று அறிவிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் பெரும்பாலானவை ஒரு சில மாநிலங்களிலிருந்து பதிவாகியுள்ளன. பமகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், டெல்லி, தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்கள் செவ்வாய்க்கிழமை அதிகப்பட்ச நோய்த்தொற்று பதிவான மாநிலங்கள் ஆகும். நாட்டில் நேற்று மொத்தம் பதிவான புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையான 1905 நோய்த்தொற்றில் 1503 நோய்த்தொற்றுகள் இந்த 5 மாநிலங்களில் இருந்து பதிவாகி உள்ளன. இது கிட்டத்தட்ட 79 சதவீதம் ஆகும். மகாராஷ்டிராவில் மட்டும் 722 புதிய நோய்தொற்றுகள்பதிவாகியுள்ளன, குஜராத், டெல்லி மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 200 க்கு மேல் நோய்த்தொற்றுகள் பதிவாகி உள்ளன. உத்தரபிரதேசத்தில் புதிதாக 67 புதிய நோய்த்தொற்றுகள் மட்டுமே பதிவாகி ஒப்பீட்டளவில் நேற்றைய நாள் நன்றாக அமைந்தது. இதற்கு நேர்மாறாக, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களும் மிக மெதுவான விகிதத்தில் புதிய கொரோனா நோயாளிகளைக் கண்டுவருகின்றன. கடந்த 4 நாட்களில், மொத்தம் 1007 கொரோனா நோய்த்தொற்றுகளைக் கொண்ட தெலங்கானா நேற்று புதிதாக வெறும் 17 புதிய நோய்த்தொற்றுகளை மட்டுமே கண்டது. மொத்தம் 523 நோயாளிகளைக் கொண்ட கர்நாடகா, கடந்த 4 நாட்களில் 23 புதிய நோயாளிகளை மட்டுமே கண்டது. அதே நேரத்தில் கேரளா புதிதாக 28 நோயாளிகளைச் சேர்த்து மொத்தம் 485 எண்ணிக்கையை எட்டியுள்ளது. இதனிடையே, கடந்த இரண்டு வாரங்களில் சிவப்பு மண்டலத்தில் (ஹாட்ஸ்பாட்கள் என வகைப்படுத்தப்பட்ட) மாவட்டங்களின் எண்ணிக்கை 177 லிருந்து 129 ஆகக் குறைந்துவிட்ட நிலையில், ஆரஞ்சு மாவட்டங்களின் எண்ணிக்கை 207 லிருந்து 250 ஆக உயர்ந்துள்ளது. இது சில சிவப்பு மாவட்டங்கள் இப்போது ஆரஞ்சு வகைப்பாட்டிற்குள் வந்ததன் விளைவாக இருக்கலாம் என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டில் தற்போது சிகிச்சையில் உள்ள சுமார் 22,000 கொரோனா நோயாளிகளில் 80 நோயாளிகளுக்கு மட்டுமே வென்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது என்று அரசு கூறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வரை, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2.17 சதவீதம் பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். 1.29 சதவீதம் பேர் ஆக்ஸிஜன் உதவியுடன் உள்ளனர். அதே நேரத்தில் வெறும் 0.36 சதவீதம் பேருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.