இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் 26 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்த எண்ணிக்கையை விட 71 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த தொற்றுகளில் செப்டம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 6 லட்சம் மகாராஷ்டிராவில் இருந்து பதிவாகியதில் ஆச்சரியமில்லை. அதே சமயம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் தலா 2.6 லட்சம் பங்களிப்பு செய்துள்ளன. தமிழ்நாடு, உத்தரபிரதேசம், டெல்லி, கேரளா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் செப்டம்பர் மாதத்தில் அவர்களின் மொத்த தொற்று எண்ணிக்கை குறைந்தது 1 லட்சமாவது உயர்ந்துள்ளன.
இந்த காலகட்டத்தில் 12 மாநிலங்கள் அவற்றின் மொத்த தொற்று எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளன. செப்டம்பர் மாதத்தில் வேகமாக தொற்று அதிகரித்த இரு மாநிலங்களான கேரளா மற்றும் சத்தீஸ்கரில் மிகப் பெரிய அளவில் தொற்று உயர்வு பதிவாகியுள்ளது. சத்தீஸ்கரில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த 1 மாதத்தில் 3 மடங்காக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் இது 31,000ஆக இருந்தது. இப்போது 1.1 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
தற்போது வேகமாக தொற்று அதிகரித்து வரும் மாநிலமாக உள்ள கேரளாவில் தொற்று எண்ணிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் சுமார் 75,000 ஆக இருந்த நிலையில் இப்போது 1.96 லட்சமாக அதாவது 160 சதவீதம் அதிகரித்துள்ளது. கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களில் பெரிய அளவில் தொற்று அதிகரிப்பு நடந்துள்ளது. அந்த சமயத்தில் கேரளா ஒரு நாளைக்கு 4,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. உண்மையில், புதன்கிழமை, கேரளாவில் 8,800க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகியுள்ளன. கடந்த 1 வாரத்தில், அம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 48,000 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மற்றும் பீகார் மாநிலங்கள் செப்டம்பர் மாதத்தில் மிகச்சிறிய அளவில் தொற்று அதிகரித்த மாநிலங்களக உள்ளன. இந்த இரண்டு மாநிலங்களிலும் இந்த மாதம் முழுவதும் தொற்றுகள் குறைந்து வருகின்றன. அவற்றின் தற்போதைய வளர்ச்சி விகிதம் 1 நாளைக்கு 1 சதவீதத்திற்கு குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை 40 சதவீதத்திற்கும் குறைவாகவே அதிகரித்து 4.28 லட்சத்திலிருந்து 5.97 லட்சமாக உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பில், ஒரு பெரிய எழுச்சிக்கான அறிகுறிகளைக் காட்டிய பீகார் மாநிலம், செப்டம்பர் மாதத்தில் அதன் தொற்று எண்ணிக்கையை 34 சதவீதம் அதிகரித்து 1.36 லட்சத்திலிருந்து 1.82 லட்சமாக உயர்த்தியுள்ளது. பீகார் விரைவான ஆன்டிஜென் பரிசோதனைகளை அதிகம் நம்பியிருந்தாலும், தமிழகம் மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்களும் பரிசோதனைகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதற்கு மந்தநிலை நேரடியாக காரணமாக இருக்க முடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இன்னும் பல பரிசோதனைகளை மேற்கொண்டுள்ள ஒரு மாநிலமாவது ஒரே மாதிரியான மந்தநிலையைக் காட்டவில்லை. உத்தரபிரதேசம் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளை நடத்தியுள்ளது. ஆனால், இதில் பெரும்பாலானவை பீகாரைப் போலவே விரைவான ஆன்டிஜென் பரிசோதனையால் கண்டறியப்பட்டவை. இது ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனைகளைப் போல துல்லியமாக கருதப்படவில்லை. உண்மையில், புதன்கிழமை, உத்தரப் பிரதேசத்தில் பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. அம்மாநிலம் ஒவ்வொரு நாளும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்து வருகிறது. பெரும்பாலான நாட்களில் மகாராஷ்டிராவில் இந்த எண்ணிக்கை இரு மடங்காகும். உத்தரபிரதேசத்தில் தொற்று எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 73 சதவீதம் அதிகரித்து, 2.3 லட்சம் அதிகரித்து இப்போது கிட்டத்தட்ட 4 லட்சமாக உள்ளது.
செப்டம்பர் மாதத்தில் 33,000க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு இறப்புகள் பதிவாகியுள்ளன. ஒரு நாளைக்கு 1,000க்கும் அதிகமான இறப்புகள் பதிவாகி உள்ளன.
நாடு முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 87,000 புதிய தொற்றுகள் புதன்கிழமை பதிவாகியுள்ளன. மொத்த உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 63.12 லட்சமாக உள்ளது. இவர்களில் 52.73 லட்சத்துக்கும் அதிகமானோர் அல்லது 83.5 சதவீதம் பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 98,000க்கும் அதிகமாகி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.