கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சீனாவில் முதன்முதலாக தோன்றி இருந்தாலும், தற்போது அதன் பாதிப்பு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அனைத்திலும் ஏற்பட்டுள்ளது. மத்திய , மாநில அரசுகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிமதமாக மேற்கொண்டு வருகின்றன.
இந்த தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசு இயந்திரம் மட்டும் பணியாற்றினால் போதாது. நாம் ஒவ்வொருவரும் நமது கடமையை உணர்ந்து நமது வீடு, சுற்றுப்புறம், வசிக்கும் தெரு, பகுதி உள்ளிட்டவைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது நமது ஒவ்வொருவரின் இன்றியமையாத கடமை ஆகும்.
நாம் ஒவ்வொருவரும் தமது வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டாலே, இந்த நாடே சுத்தமானதற்கு சமம். இந்த சுத்த பராமரிப்பை, நாம் நமது வீட்டிலிருந்து இன்றே துவங்குவோம்.
வீட்டை தினமும் சுத்தப்படுத்துங்கள்
இந்தியர்கள் இந்த விவகாரத்தில் பெரும் அசட்டையாகவே இருக்கிறார்கள். இதுவரை இல்லையென்றாலும், இனியாவது தினமும் வீட்டை சுத்தப்படுத்த துவங்குங்கள்.
நோய்த்தடுப்பு டிஸ்இன்பெக்டன்ட்களை உபயோகியுங்கள்
வீட்டில் உள்ள தரை உள்ளிட்ட இடங்களை நோய் உண்டாக்கும் கிருமிகளை அகற்றும் திறன் கொண்ட டிஸ்இன்பெக்டண்ட்களை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.
சோப்பு நீர் சிறந்த தேர்வு
கொரோனா வைரஸ் தடுப்புக்கு, சோப்பு நீர் மிகச்சிறந்த தேர்வு ஆகும். கைபொறுக்குமளவுக்கு அளவுக்கு உள்ள வெந்நீரை பாத்திரத்தில் எடுத்து அதனுடன் திரவ சோப்பை கலந்துகொள்ளவும், இதனை, சமையலறையின் அனைத்து இடங்களிலும் சுத்தம் செய்யவும். இந்த சோப், கொரோனா வைரசின் மேற்பரப்பில் உள்ள கொழுப்பு படலத்தை கரைத்து விடும். இதன்காரணமாக, வைரஸ் விரைவில் இறந்துவிடும்.
அதிகமாக கைபடும் இடங்களில் கவனம்
உங்களுக்கு வைரஸ் தொற்று இருக்கும் பட்சத்தில், வீட்டில் நீங்கள் தொடும் இடங்களில் அந்த வைரஸ் பரவி, அந்த இடங்களை தொடும் மற்ற உறுப்பினர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட காரணமாக அமையும். கதவு, ஹேண்டில், லைட் சுவிட்சுகள், பிரிட்ஜ், மைக்ரோவேவ் ஓவன் கதவுகள், டிராயர், மின் கேபிள், அலமாரி கதவு, டிவி, ரிமோட்கள், டைனிங் டேபிள் , டெலிபோன் ரிசீவர் உள்ளிட்ட அதிகம் நமது கைபடும் இடங்களை, நாம் டிஸ்இன்பெக்டண்ட் வைத்து தினசரி சுத்தப்படுத்த வேண்டும்.
மிஸ்டர் கிளீன் ஆக இருங்கள்
நீங்கள் எப்படி சுத்தமாக இருக்க விரும்புவீர்களோ, அதேபோல் உங்களது வீடு, சுற்றுப்புறம், தெரு, பகுதியையும் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுங்கள்.
புதிய டவல்களை பயன்படுத்துங்கள்
உங்கள் கைகளை, சோப் மற்றும் தண்ணீரால் சுத்தம் செய்த பிறகு, சுத்தமான டவலால் சுத்தம் செய்து கொள்ளுங்கள். தினமும் புதிய டவலை பயன்படுத்துங்கள். தரை உள்ளிட்ட இடங்களை சுத்தம் செய்வதற்கு முன்னர், கையுறைகளை பயன்படுத்துங்கள். பின் அவைகளை அப்புறப்படுத்துங்கள்.
வீட்டில் நுழையும் முன் : வீட்டில் நுழைவதற்கு முன் செருப்பு, ஷூ உள்ளிட்டவைகளை வெளியே கழட்டி வைத்து, பின் எந்த அவசர வேலை இருந்தாலும் அதை ஒதுக்கிவைத்து நேராக வாஷ் பேசினிற்கு சென்று, சோப், தண்ணீரை கொண்டு 20 வினாடிகள் கைகழுவ வேண்டும்.இதை இப்போது மட்டுமல்லாமல், எப்போதும் செய்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் கை கழுவும் பழக்கத்தை வழக்கப்படுத்த வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil