By: WebDesk
Updated: October 21, 2020, 07:06:41 AM
Amitabh Sinha
கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 46,790 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவில்புதிய பாதிப்புகள் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழே குறைவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் கடந்த ஜூலை 28ம் தேதி அன்று, புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 47, 703 ஆக இருந்தது.
ஒவ்வொரு வாரமும் திங்களன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைவாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகும். இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில், பாதிப்பு எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட மிக குறைவான அளவிலேயே உள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 10 முதல்11 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 8.59 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
இருந்தாலும், தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 8-9 லட்சமாக இருந்த காலத்தின், 60,000 க்கும் மேற்பட்ட தொற்றுகளை இந்தியா கண்டறிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. வேறு விதமாக கூற வேண்டுமெனில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 45,000-50,000 என்ற வரம்பில் இருந்த போது, தினசரி பரிசோதனைகள் எண்ணிக்கை 4-5 லட்சம் என்ற அளவில் தான் இருந்தது.
புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருவதால், இரண்டரை மாதங்களுக்குப் பின், உலகளவில் அதிகளவு பாதிப்பை பதிவு செய்வதை இந்தியா தவிர்த்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக, இந்தியாவை விட அதிக தொற்று பாதிப்புகளை அமெரிக்கா பதிவு செய்து வருகிறது. ஐரோப்பாவின் பல நாடுகளிலும் புதிய பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன.
இதற்கிடையே, மத்திய அரசு நியமித்த நிபுணர் குழு, இந்தியாவில் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்கனவே உச்சம் அடைந்து காணப்படுகிறது என்றும் இப்போது அது வீழ்ச்சியடைந்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அதன் பரவல் முடிவடையும் என்றும் கூறியது.
ஐ.ஐ.டி கான்பூர் பேராசிரியரும், நிபுணர் குழு உறுப்பினருமான மனிந்திர அகர்வால், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில்,” அமெரிக்கா, ஐரோப்பாவைப் போன்று இந்தியாவிலும் இரண்டாவது அலை பரவல் ஏற்படும் என்று உறுதியிட்டு சொல்ல முடியாது. ஆனால் மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மற்றும் அடிக்கடி கை கழுவுவது போன்ற கொரோனா நடைமுறையை பின்பற்றுவது முக்கியமாகும். மேலும், எதிர்வரும் குளிர்காலம் மற்றும் நீண்ட பண்டிகைக் காலங்களில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருந்தால், நோய்த் தொற்று பரவலை முன்க்கூட்டியே கட்டுக்குள் கொண்டு வர முடியும்” என்று தெரிவித்தார்.
திங்களன்று, மகாராஷ்டிராவில் கொரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை 6,000 க்கும் குறைவான பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இதற்கு முன் கடந்த ஜூலை 8ம் தேதி அன்று, புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 6, 000க்கும் குறைவாக காணப்பட்டது. எவ்வாறாயினும், இந்தியாவின் தினசரி பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மேலும், சமீபத்திய நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை பதிவு செய்து வந்த கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் திங்களன்று கொரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்டது. ஆனால், அதன்பிறகு புதிதாக கொரோனா தொற்றுவோர் எண்ணிக்கை அங்கு குறையத் தொடங்கியது. இந்தியாவின் மொத்த பாதிப்புகளில், 20 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் மகாராஷ்டிராவில் காணப்படுகிறது. மேலும், தற்போதைய புதிய பாதிப்புகளில் ஆறில் ஒரு பங்கை அம்மாநிலம் பங்களிக்கிறது.
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 67 லட்சத்தை(67,33,328) கடந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் குணடைந்தவர்களுக்கு இடையேயான வித்தியாசம் இன்று 59,84,790 ஆக உள்ளது. இதனால் குணமடைந்தோர் வீதம் 88.63% மாக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து 17- வது நாளாக கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை புதிய பாதிப்புகளை விட அதிகமாக உள்ளன.
மற்றொரு சிறப்பம்சமாக, சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் 10%-க்கும் கீழ் குறைந்துள்ளது. நாட்டில் தற்போது கொவிட் பாதிப்பு 7.5 லட்சத்துக்கும் (7,48,538) கீழ் உள்ளது. இது மொத்த பாதிப்பில் 9.85 சதவீதமாகும்.