/tamil-ie/media/media_files/uploads/2020/10/image-26.jpg)
கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் அதிகபட்ச ஒரு நாள் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பை கேரளா பதிவு செய்தது. அந்த மாநிலத்தின் நேற்றைய பாதிப்பு, மகாராஷ்டிராவை விட அதிகமாக இருந்ததது. மார்ச் மாதத்திற்குப் பிறகு, மகாராஷ்டிராவை விட பிறிதொரு மாநிலத்தில் அதிகப்படியான தினசரி பாதிப்பு பதிவாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 24 மணிநேரத்தில் கேரளா புதிதாக 11 ஆயிரத்து 755 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது, அம்மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச உச்சநிலை இதுவாகும். கடந்த, 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவின் பாதிப்பு எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக 11,416-ஆக குறைந்தது. கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து, அம்மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு நாள் குறைந்தபட்ச பாதிப்பு இதுவாகும். இருப்பினும், கடந்த திங்கட்கிழமையன்று, குறைந்த பரிசோதனை காரணமாக 10,000-க்கும் குறைவான தினசரி பாதிப்பை அம்மாநிலம் உறுதி செய்தது.
கேரளாவில், கொரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட விகிதமும் (positivity rate), தினசரி பாதிப்பும் அதிகரித்து வருகின்றன. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20,000-ஐ விட அதிகமாக இருக்கும். அதை, 15,000 க்கும் குறைவான நிலையில் வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். நவம்பர் மாதத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம், என்று அம்மாநில சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
ஏறக்குறைய மூன்று வாரங்களாக மாநிலத்தின் கொரோனா வைரஸ் எண்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. தேசிய மட்டத்தில் அன்றாட வளர்ச்சி விகித சராசரி 1 சதவீதமாக உள்ள நிலையில், கேரளாவின் அன்றாட வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதமாக உள்ளது.
இதற்கிடையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 74, 383 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70, 53, 807-ஆக அதிகரித்துள்ளது. உலகளவில், அதிகப்படியான கொரோனா பாதிப்புகளைக் கொண்ட இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான பாதிப்பு இடைவெளி தற்போது 5 லட்சத்துக்கும் குறைவாகியது. உலகெங்கிலும், இதுவரை 37 மில்லியனுக்கும் அதிகமான (3.7 கோடி) மக்கள் கொரோனா நோய்த் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, உலகளாவிய ஐந்தில் ஒரு பங்கு கொரோனா பாதிப்புகளுக்கு இந்தியா காரணமாக உள்ளது.
நாட்டில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தாலும், வெறும் 8 நாட்களில் புதிதாக ஐந்து லட்சம் நபர்கள் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் , 74, 383 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும், 89,154 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம், தொடர்ந்து எட்டாவது நாளாக, புதிய பாதிப்புகளை விட, புதிதாக குணமடைபவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகமாக உள்ளது. இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த போக்கு வரவேற்கத்தக்க ஒன்றாகும். தொற்று பரவல் உச்சநிலையை நோக்கி நகர்வதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்
உலகின் பல பகுதிகளில், முக்கியமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியது.
உதாரணமாக, ஐக்கிய பேரரசில் (யுனைடெட் கிங்டம்), ஜூன்- ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே, நோய் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்தன( 1,000க்கும் மிகாமல் இருந்தது). ஆனால் கடந்த மாதத்திலிருந்து, மிகப்பெரிய எழுச்சி அங்கு காணப்படுகிறது. கடந்த வாரங்களில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10,000க்கும் அதிகமாக உள்ளது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி 23,000 என்ற உச்சபட்ச நிலையை அடைந்தது. ஸ்பெயின் நாட்டிலும் இதேபோன்ற போக்கு காணப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக, 10,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்படுகின்றன. இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளை விட ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், இத்தாலி நாட்டிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களில், 52,000க்கும் அதிகமான தினசரி பாதிப்பை அமெரிக்கா பதிவு செய்து வருகிறது. உலகளவில், கடந்த மூன்று நாட்களில் புதிதாக 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கர்நாடகா மாநிலத்தில், கோவிட்- 19 உறுதி செய்யப்போட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு லட்சத்தை தாண்டியது. தற்போது, இந்தியாவில் கொரோனா பாதிப்பில் 7 லட்சம் கடந்த மூன்றாவது மாநிலமாக கர்நாடகா உள்ளது.
நாட்டில் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 8,67,496 -ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நாட்டில் கொவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் வீதம் 86.17%-மாக அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.