கொரோனா வைரஸ், சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இந்தியாவிலும் இதன் பாதிப்பை குறைக்கும்பொருட்டு, அன்லாக் 1.0 என்ற பெயரில் சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில், கொரோனா தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அவைகள் பொருளாதாரத்தை மீண்டும் முன்னேற்றப்பாதைக்கு கொண்டு வர என்னென்ன திட்டங்களை கையாள உள்ளன என்பதை இங்கு காண்போம்.
சிங்கப்பூர்
சிங்கப்பூர் நாட்டில், ஜூன் 19ம் தேதி முதல் இரண்டாம் கட்ட மறுதிறப்புக்கான நடவடிக்கைகள் துவங்கப்பட உள்ளன. இதில் பெரும்பாலான வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் சமூக நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில், கொரோனா பாதிப்பு அபாயம் நீங்கியுள்ள நிலையிலும், ஆங்காங்கே புதிய தொற்றுக்கள் காணப்பட்டு வருவதால், முழுமையான தளர்வுகளுக்கு இன்னும் சிறிதுகாலம் காத்திருக்க வேண்டும்.
5 நபர்கள் சேர்ந்து இருக்கலாம், ஆனால், அவர்களுக்குள் 1 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும். அத்தகைய சூழல் இல்லாதபட்சத்தில், ஒரு குழுவுக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையே 1 மீட்டர் இடைவெளி கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை விடுதிகள், கோல்ப் மைதானங்கள், உணவகங்கள் உள்ளிட்டவைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு டேபிளில் 5 பேர் மட்டுமே உட்கார அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருத்துவசேவைகள் வழங்கும் இடங்களில், பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அலுவலகம் செல்லும் நிலை வந்தால், அனைவரும் ஒரேநேரத்தில் செல்வது தடை செய்யப்பட்டு பல்வேறு வேலைநேரங்களை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளியிடங்களில் செல்பவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், ஜூன் 29ம் தேதி முதல் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவைகளில் நீண்ட வரிசைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மத விழாக்களுக்கு தடை நீடிக்கிறது, திருமணம், இறுதிச்சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 20 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பார்கள் , இரவு விடுதிகள், சினிமா, தியேட்டர்கள், லைப்ரரிகள், அருங்காட்சியகங்களுக்கு தடை நீடிக்கிறது. வயது அதிகமானவர்கள், வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதன் காரணத்தினால், பல்வேறு நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் திறக்கப்பட உள்ளன. அருங்காட்சியகங்கள், ஜூலை 6ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன
பள்ளிகள் ஜூன் 22 முதல் திறக்கப்பட உள்ளன. மதவிழாக்களுக்கு தடைநீடிக்கிறது
செங்கேன் நாடுகளுக்கு பயணம் செய்ய தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனில் இல்லாத நாடுகளுக்கு செல்ல ஜூலை 1 முதல் அனுமதி அளிக்கப்பட உள்ளது.
மார்ச் மாதம் நடைபெற வேண்டிய முனிசிபல் தேர்தல், வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் முற்றிலுமாக கொரோனா தொற்று ஒழிக்கப்பட்டு விட்டதாக தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
40 ஆயிரம் அமரும்வகையிலான ஸ்டேடியங்களில் 10 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இறுதிச்சடங்குகளுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் விலக்கிக்கொள்ளப்படுகின்றன. இரவுவிடுதிகளுக்கான தடைகள் தொடர்கின்றன,
சினிமாக்கள், தியேட்டர்கள் 100 பேர் உடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான்
ஜப்பானில் முழுமையாக கொரோனா தொற்று ஒழிக்கப்பட்டு விட்டநிலையில், பார்கள், உணவகங்கள் நள்ளிரவு வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. பொதுநிகழ்ச்சிகளில் ஆயிரம் பேர் வரை கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
லைப்ரரிகள், அருங்காட்சியகங்கள், செயல்பட துவங்கியுள்ளன. ஜிம்கள், தியேட்டர்கள் செயல்பட உள்ளன.
நேரடி இசை நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்குகளுக்கான தடை தொடர்கிறது. தலைநகர் டோக்கியோவில் உள்ள யோமியுரிலாண்ட் பொழுதுபோக்கு பூங்காவின் சில பகுதிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Explained: How economies are reopening around the world