டெல்லி இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 2வது நகரமாக மாறியுள்ளது. இதனிடையே, ஒடிசா கடந்த மூன்று வாரங்களில் ஒவ்வொரு நாளும் 3,000க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து வருகிறது.
எதிர்பார்த்தபடி, டெல்லி தினசரி கொரோனா வைரஸ் தொற்று கண்டறிவதில் ஒரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. டெல்லியில் புதன்கிழமை 4,000க்கும் மேற்பட்ட தொற்றுகள் கண்டறியப்பட்டன. கடைசியாக டெல்லி ஜூன் 23ம் தேதி இந்த அளவுக்கு அருகே சென்றது. அப்போது டெல்லியில் 3,900 புதிய தொற்றுகள் பதிவானது.
ஒரே நாளில் நாடு முழுவதும் 95,000 தொற்றுகள் கண்டறியப்பட்டதையடுத்து, டெல்லியில் தினசரி தொற்று புதிய உச்சத்தை அடைந்தது. இறப்பு எண்ணிக்கை 1,172 ஆக பதிவானது.
அதேசமயம், டெல்லி இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 2வது நகரமாக மாறியது. கடந்த வார இறுதியில் புனே 2 லட்சத்தை எட்டியது. தற்செயலாக, புனே புதன்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 5,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகளை பதிவு செய்தது.
டெல்லியின் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் அடைந்த புதிய உச்சத்துக்கு கடந்த சில நாட்களாக சோதனை எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு உதவியுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் புதன்கிழமை 54,000க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுதான் டெல்லியின் மிக அதிகபட்ச பரிசோதனை எண்ணிக்கை ஆகும். இது டெல்லியில் ஒரு வாரத்திற்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்ட எண்ணிக்கையைவிட 2 மடங்கு அதிகம் ஆகும். இருப்பினும், பரிசோதனைகளின் முடிவுகள், குறிப்பாக ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனைகள் அனைத்தும் ஒரே நாளில் வரவில்லை என்பதால், புதன்கிழமை பதிவான தொற்று அதிகரிப்புக்கு நேரடியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை நேரடி காரணமல்ல. இருப்பினும், பரிசோதனைகள் தொடர்ந்து இதே அளவில் இருப்பதால், வரும் நாட்களில் கண்டறியப்படும் தொற்றுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இதற்கு முன்பு டெல்லியில் சுமார் 4,000 புதிய தொற்றுகள் பதிவானபோது, ஜூன் 23 அன்று, டெல்லிய்ல் 14,000 முதல் 18,000 மாதிரிகள் வரை பரிசோதனைகள் செய்யப்பட்டிருந்தன.
டெல்லியில் கொரோனா இறப்பு எண்ணிக்கையில், தற்போதைய நிலைமையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் டெல்லியில் ஒவ்வொரு நாளும் 60 முதல் 70 வரை கொரோனா இறப்புகள் பதிவாகின்றன. ஜூலை முதல் வாரத்தில் ஒரு நாள் இறப்பு எண்ணிக்கை 80ஐ தொட்டது. ஆனால், அதற்குப் பிறகு இறப்பவர்களின் எண்ணிக்கையில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உண்மையில், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், இறப்பு எண்ணிக்கை சில நாட்களில் ஒற்றை இலக்கங்களில் சரிந்தது. கடந்த சில வாரங்களாக, டெல்லியில் ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 கொரோனா பாதிப்பு இறப்புகள் பதிவாகின்றன. இருப்பினும் இந்த வார தொடக்கத்தில் 3 நாட்களில் இந்த இறப்பு எண்ணிக்கை 25ஐ தாண்டியது.
இதனிடையே ஒடிசா நாட்டில் அதிகபட்ச தொற்றுகள் கொண்ட முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் அசாமை முந்தியுள்ளது. ஒடிசா கடந்த ஒன்றரை மாதங்களில் ஏராளமான தொற்று எண்ணிக்கைகளை சீராக கூட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த 3 வாரங்களில், அது ஒவ்வொரு நாளும் 3,000க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்து வருகிறது. நாளொன்றுக்கு 3 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி விகிதத்துடன், ஒடிசா தற்போது முதல் 10 மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வருகிறது.
ஒடிசாவில் உள்ள குர்தா மாவட்டம், கஞ்ஜம் மாவட்டத்தை முறியடித்து இப்போது மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மாறியுள்ளது. அந்த மாவட்டத்தில் 23,000க்கும் அதிகமான தொற்றுகளைக் கொண்டுள்ளது. கட்டாக், புவனேஸ்வர் ஆகிய மண்டலங்கள் இப்போது 12,000க்கும் குறைவான தொற்றுகளைக் கொண்டுள்ளன. உண்மையில் கஞ்ஜம் மாவட்டத்தின் நிலைமை இப்போது ஒடிசாவின் கொரோனா வெற்றிக் கதையாக காட்டப்படுகிறது. பரிசோதனை அதிகரிப்பு, பயனுள்ள தொடர்புத் தடமறிதல் மூலம் சரியான நேரத்தில் தலையீடு செய்வது, ஆகியவற்றால் ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த நிலைமையை கணிசமாக மாற்றியமைத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.