தலைநகர் டெல்லியில், மே 28ம் தேதி முதன்முறையாக ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக, தினமும் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், ஒரே ஒரு நாளில் மட்டும் 500க்கும் குறைவான அளவில் தொற்று கண்டறியப்பட்டிருந்தது. கடந்த புதன்கிழமை, 792 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்ததே அதிகபட்ச அளவாக இருந்தது.
டெல்லியில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 16,281 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 7,500 பேர் குணமடைந்துள்ளனர். மும்பைக்கு அடுத்து அதிக கொரோனா பாதிப்பு உள்ள நகரமாக டெல்லி விளங்குகிறது. மும்பையில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னை, அகமதாபாத், புனே உள்ளிட்ட நகரங்கள், முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.
டெல்லியில், கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு பாதிப்பு விகிதம், தேசிய சராசரியை விட குறைவாகவே உள்ளது. தேசிய அளவில் சராசரி பாதிப்பு விகிதம் 5.02 சதவீதம் என்ற அளவில் உள்ள நிலையில், டெல்லியில் இந்த விகிதம் 4.89 சதவீதமாக உள்ளது.
பீகார், அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு விகிதம், தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிப்பு விகிதம் 5.44 சதவீதமாக உள்ளது.
மே 28ம் தேதி புதிதாக 7,200 பேருக்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.65 லட்சத்தை கடந்துள்ளது.
ஹரியானா, குர்கான், பரிதாபாத், சோனிபட், ஜஜ்ஜார் பகுதிகளில் கணிசமான அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணத்தினாலேயே, தலைநகர் டெல்லியில், கொரோனா பாதிப்பு இந்தளவிற்கு அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்திலும் தற்போது தேசிய சராசரியை விட பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
மே 28ம் தேதி, ஹரியானாவில், புதிதாக 123 பேருக்கும், குர்கான், பரிதாபாத், சோன்பட் பகுதிகளில் புதிதாக 92 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டிருந்தது. இந்த பகுதிகளிலிருந்து டெல்லியை அடையும் வழிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், மக்கள், கிராமப்பகுதிகளில் உள்ள உள்வட்ட சாலைகள் மூலமாக, டெல்லியில் நுழைந்து விடுகின்றனர். இந்த வழித்தடங்களையும் மூடவேண்டும் என்று டெல்லி மக்கள், அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளாவில், மே 28ம் தேதி புதிதாக 85 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,088 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரங்களில், அங்கு பாதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வந்தவர்களுடன் நேரடி தொடர்பினாலேயே, மாநிலத்தில் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், மாநிலத்திற்கு புதிதாக வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று முதல்வர் பினராயி விஜயன், கொரோனா ஆய்வுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஒருவாரமாக அதிகரித்து வரும் நிலையில், தங்கள் மாநிலத்துக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தக்கோரி மத்திய அரசிடம் முதல்வர் எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், மத்தியபிரதேசம் ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கர்நாடகா மாநிலத்திற்கு வருபவர்கள் முதலில் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லாமல் இருந்தால் மட்டுமே, அவர்கள் தங்களது மாநிலத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த சோதனையை, விமானம் மூலமாக வரும் பயணிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இருப்பதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil