கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவின் முதல் உள்நாட்டு தடுப்பூசியான கோவாக்சின், தேசிய வைராலஜி நிறுவனத்தின் ஆய்வுத் தரவுகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசியானது, முழு விரியன் செயலற்ற வெரோ செல்களால் பெறப்பட்ட இயங்குதள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசியானது இறந்த கொரோனா வைரஸைக் உள்ளடக்கி உள்ளது. இது மக்களை பாதிக்காது. ஆனால் நோயெதிர்ப்பு மண்டலத்தை, கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஒரு தற்காப்பு எதிர்வினை புரியும் திறனை அதிகரிக்க உதவுகிறது.
கோவாக்சின் தடுப்பூசி மருந்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளுக்காக, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு மையத்தின் ஒப்புதலைப் பெற்றது. மேலும், கொரோனா தொற்று உச்சநிலையில் இருந்ததன் காரணமாக, மருத்துவ சோதனை முறைகளின் கீழ், அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெற்றது.
கோவாக்சின் தடுப்பு மருந்தின் இடைக்கால பகுப்பாய்வு முடிவுகள் :
கோவாக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட இடைக்கால பகுப்பாய்வு முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றின் 87 அறிகுறிகளை மையமாகவும், தொற்று உச்சநிலையை அடைந்திருக்கும் சூழலில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் இதர அறிகுறிகளையும் சேர்த்து, மொத்தம் 127 அறிகுறிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதன் விளைவாக லேசான, மிதமான மற்றும் கடுமையான கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறனானது, 78 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனத்துடன் ஐசிஎம்ஆர் இணைந்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாக்சின் தடுப்பு மருந்து, கடுமையான கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களிடம், வைரஸுக்கு எதிராக 100 சதவீத செயல்திறனை கொண்டுள்ளது. இதனால், தொற்றுக்கு உள்ளானவர்களிடம் கோவாக்சின் செலுத்தப்பட்டதில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் எண்ணிக்கையானது குறைந்தது. மேலும், அறிகுறியற்ற கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான செயல்திறன் 70 சதவீதமாக இருந்ததாகவும் மூன்றாம் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், அறிகுறியற்ற தொற்றாளர்களுக்கு கோவாக்சின் செலுத்துவதால், தொற்றுப் பரவலையும் குறைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாக்சின் தடுப்பு மருந்தின் இறுதிகட்ட பகுப்பாய்வின் முழுமையான முடிவுகள் அடங்கிய அறிக்கை ஜூன் மாதத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாரத் பயோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர். ஆகியவை கோவாக்சினின் இறுதி அறிக்கை ஒரு மதிப்பாய்வு செய்யப்பட்ட வெளியீட்டிற்கு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
கோவாக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட இடைக்கால முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் கிருஷ்ணா எல்லா, ‘கடுமையான கோவிட் -19 மற்றும் அறிகுறியற்ற நோய்த்தொற்றுகளுக்கு எதிரான கோவாக்சினின் செயல்திறன் தரவு மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. இதனால், கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும், நோய் பரப்புவதையும் குறைக்க உதவும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு எதிரான கோவாக்சினின் செயல்திறன் :
ஐ.சி.எம்.ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள், மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸின் அனைத்து வகைகளையும் தனிமைப்படுத்தி வளர்த்துள்ளதாகக் கூறியுள்ளனர். மாறுபாடு அடைந்த லண்டன் மாறுபாடான பி .1.1.7, பிரேசில் மாறுபாடான.1.28.2, தென்னாப்பிரிக்க மாறுபாடான பி .1351 மற்றும் இரட்டை உருமாற்றம் அடைந்த வகையான பி .1.617 ஆகியவை இந்தியாவில் காணப்படும் கொரோனா வைரஸ் வகைகளாகும். இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் பிரேசில் வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராக கோவாக்சினின் நடுநிலைப்படுத்தல் திறனை நிரூபித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா மாறுபாட்டிற்கான தரவுகளை பகுப்பாய்வு செய்யும் போது, கோவாக்சின் தடுப்பு மருந்தானது, இரட்டை மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸுக்கு எதிராக திறம்பட செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக, தேசிய வைராலஜி நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஐ.சி.எம்.ஆர் மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றின் அயராத முயற்சியால் உண்மையிலேயே பயனுள்ள சர்வதேச தரத்திலான தடுப்பூசி உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கோவாக்சின் SARS-CoV-2 வைரஸின் பெரும்பாலான வகைகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக ஐசிஎம்ஆர் இயக்குநர் பேராசிரியர் பால்ராம் பார்கவா கூறியுள்ளார்.
இந்தியாவில் இதுவரை அளிக்கப்பட்டுள்ள மொத்த தடுப்பூசி அளவுகளில் சுமார் 1.1 கோடி கோவாக்சின் தடுப்பு மருந்தாகும். இவற்றில் 93.56 லட்சம் முதல் டோஸாக பெற்றுள்ளனர். கோவாக்சின் முதல் அளவைப் பெற்ற பிறகு 4,208 பேர், அதாவது, கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்களில் 0.04 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுது செய்யப்பட்டுள்ளதாகவும் டாக்டர் பார்கவா தெரிவித்துள்ளார்.
எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி :
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கூட்டு நிர்வாக இயக்குனர் சுசித்ரா எலா, ‘கோவாக்சினை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இந்தியாவிலும் உலக அளவிலும் மருத்துவ பரிசோதனைகள் திட்டமிடப்பட்டு, இளைய வயதினரிடையே அதன் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு திறன்ன் மற்றும் SARS-CoV- க்கு எதிரான பாதுகாப்பு ஆகியவற்றை மதிப்பீடு செய்ய இருவகைகளாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகளவில் 60 க்கும் மேற்பட்ட நாடுகள் கோவாக்சின் தடுப்பு மருந்தின் மீது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, பல நாடுகளிலிருந்து அவசரகால பயன்பாட்டு அங்கீகாரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் உள்ள ஆய்வகங்களில் ஆண்டுக்கு 700 மில்லியன் டோஸ்களை எட்டும் வகையில் திறன் விரிவாக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பாரத் பயோ டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.