இந்த மாத தொடக்கத்தில் இருந்து, புதிய கொரோனா பாதிப்புகளைத் தாண்டி, அதிக அளவிலான நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர்.
இதன் விளைவாக, ஜூலை நடுப்பகுதியில் இருந்து தற்போது தமிழகத்தில் கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை முதன் முறையாக தற்போது 50,000 க்கும் குறைவாக உள்ளது. அதிக பாதிப்பைக் கண்ட புனே நகரில் கொரோனா சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 75,000 க்கும் அதிகமாக உள்ளன.

ஆகஸ்ட் இறுதி வரை, மகாராஷ்டிராவுக்குப் பிறகு, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகளை தமிழ்நாடு கொண்டிருந்தது. கடந்த ஒன்றரை மாதங்களாக தமிழகத்தின் தினசரி கொரோனா நோய்த் தொற்று எண்ணிக்கையில் அசாதாரண நிலைத்தன்மை காணப்படுகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இன்று வரை (4 சந்தர்ப்பங்களைத் தவிர்த்து) தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5,500 - 6,000 என்ற எண்ணிக்கை வரம்பில் தான் உள்ளது. அதிலும், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு நாட்களில், தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 5,800 - 6,000 என்ற அளவில் காணப்பட்டன. பொதுவாக, நீண்ட காலம் இதுபோன்ற ஒரு நிலைத் தன்மையை யாரும் எதிர்பார்த்ததில்லை.
புதிய பாதிப்புகளுக்கு மேல் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு நல்ல போக்காக கருதப்படுகிறது. இது, நீண்ட நாட்களுக்கு தொடருமாயின், கொரோனா பெருந்தொற்று வீழ்ச்சியடையத் தொடங்குவதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம். எவ்வாறாயினும், தொற்று குறைந்ததை ஆரம்பத்திலேயே கொண்டாடக் கூடாது என்று தலைநகர் டெல்லி கற்றுத்தந்த பாடத்தையும் நாம் இங்கு உணர வேண்டும். அடுத்த சுற்று பாதிப்புகள் நமது முயற்சிகள் அனைத்தையும் வீணடிக்கும் என்பதை நாம் தற்போது டெல்லியில் நேரடியாக கற்று உணர்கின்றோம். இருப்பினும், சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைவது மூலம், மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீதான சுமைகள் நீங்கும்.

இந்த நாட்களில், தமிழகத்தில் கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. கடந்த மாத இறுதியில், தினசரி 100க்கும் மேற்பட்ட உயிரிழப்பை அரசு பதிவு செய்தது. தற்போது, இந்த எண்ணிக்கை 60 - 70 என்ற வரம்புக்குள் வந்துவிட்டது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,307-ஆக அதிகரித்துள்ளதை அடுத்து, நாட்டில் இரண்டாவது மிக அதிகமான இறப்பு எண்ணிக்கையைக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/09/corona.png)
இதற்கிடையே, உத்தரபிரதேச மாநிலத்தின் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது. அதே நேரத்தில் ராஜஸ்தான் மாநிலம் நேற்று ஒரு லட்சம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைத் தாண்டியது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றை உறுதி செய்த மாநிலங்களின் எண்ணிக்கை தற்போது 14 ஆக அதிகரித்துள்ளது. புனே, புது டெல்லி, மும்பை, பெங்களூரு, தானே, சென்னை ஆகிய ஆறு நகரங்களிலும் தொற்று எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிதாக நேற்று 94,372 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,54,357-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78,399 பேர் குணமடைந்ததையடுத்து, குணமைடைந்தோர் மொத்த எண்ணிக்கை 37,02,596-ஆக (78%) அதிகரித்துள்ளது.