கொரோனா வைரஸ் (கொவிட் -19) நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை பரிசோதிக்க தொடங்கியுள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சமீபத்திய அறிவிப்பு நம்பிக்கையை எழுப்பியுள்ளது. கடந்த சில வாரங்களாக, ரெம்டெசிவிர் என்ற மருந்தின் செயல்திறன் குறித்து சற்றே முரண்பட்ட அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. அதே நேரத்தில் கொரோனா வைரஸை மோனோக்ளோனல் வழியில் தாக்கி, நோய் பாதித்தவர்கள் உடலை சீராக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்கும் முறையை இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது.
எனவே, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உட்பட உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து தொடர்பான முக்கிய முன்னேற்றங்களை இங்கே காண்போம் .
தடுப்பூசி மருந்துகளைத் தவிர மற்ற சிகிச்சைகள் ஏதேனும் உள்ளதா ?
உலகம் முழுவதும் பல்வேறு மருந்து மற்றும் சிகிச்சை முறைகள் முயற்சி செய்யப்படுகிறது. ரெமெடிசிவிர் மருந்து மீதான உலகளாவிய ஆர்வத்தைத் தவிர, இந்தியா பிளாஸ்மா சிகிச்சை முறை பற்றியும் பேசி வருகிறது. ( பிளாஸ்மா சிகிச்சை மூலம் நோயில் இருந்து மீண்டவரிடம் இருந்து எடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு அணுக்கள், இரத்தம் செலுத்துவதைப் போன்ற முறையில், நோயாளியின் ரத்தத்தில் செலுத்தப்படும். இந்த நோய் எதிர்ப்பு அணுக்கள் வைரஸ் தாக்குதலுக்கு எதிராக தனது தாக்குதலை வீரியத்துடன் மேற்கொள்ளும்)
இருப்பினும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் இப்போதைக்கு எதுவும் இல்லை என்றும், பிளாஸ்மா சிகிச்சையும் அதில் அடங்கும் என்றும் ஏற்கெனவே இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ICMR) தெளிவுபடுத்தியுள்ளது. பிளாஸ்மா சிகிச்சை முறையும் பரிசோதனைக்குரிய சிகிச்சை முறைகளில் ஒன்றாக உள்ளது. இருந்தபோதிலும், இதை ஒரு சிகிச்சை முறையாகப் பயன்படுத்தலாமா என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இதன் செயல் திறனை மதிப்பீடு செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் சார்பில் தேசிய அளவில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. அந்த ஆய்வு முடிந்து, அறிவியல்பூர்வ ஆதாரம் கிடைக்கும் வரையில், ஆராய்ச்சி மற்றும் சோதனை அடிப்படையிலான தேவைகளைத் தவிர மற்ற வகையில் இந்த நடைமுறையைப் பயன்படுத்தக் கூடாது என்று தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. உண்மையில், பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சிக்கல்களையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆய்வு தொடர்பான விஷயங்களைத் தவிர, பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது " என்று தெரிவித்தது .
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் விதமாக மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் (உயிரணுக்களின் ஒற்றை குளோனிலிருந்து உருவாக்கப்பட்டவை) வளர்ச்சியில் இஸ்ரேல் சமீபத்தில் ஒரு “குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை” அறிவித்தது.
சிகிச்சையில்லாமல் ஒரு நோயைத் தடுப்பதன் மூலம் ஏகப்பட்ட மருத்துவ வளங்கள் சேமிக்கப்படுவதால் தடுப்பூசிகள் முக்கியமாக கருதப்படுகின்றன. தடுப்பூசிகளின் உதவியால் மட்டுமே பெரியம்மை போன்ற பயமுறுத்தும் நோய்களை நம்மால் அகற்ற முடிந்தது.
ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி மருந்து எதன் அடிப்படையில் உருவாகுகிறது?
இது முதலில் மெர்ஸ் நோயை உருவாக்கும் மற்றொரு கொரோனா வைரசை ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட மருந்தாகும். ஜென்னர் நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசிக்கு ChAdOx1 nCoV-19 என்று பெயரிட்டனர்.
ஏப்ரல் 23ம் தேதி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில்," சிம்பான்சி குரங்குகளில் நோயை ஏற்படுத்தும் அடினோ வைரசின் மற்றொரு பலவீன பதிப்பான ChAdOx1 எனும் வைரஸ் மூலம் ChAdOx1 nCoV-19 தயாரிக்கப்படுகிறது. இதன் மரபணுக்கள் மாற்றப்பட்டுள்ளதால், மனிதர்களில் வளரும் தன்மைகளை இவை இழக்கின்றன.
தற்போதைய, COVID-19 வைரசில் காணப்படும் ஸ்பைக் கிளைகோ புரோட்டீனை (SARS-CoV-2) உருவாக்க பயன்படும் மரபணு பொருளை ChAdOx1 கட்டமைப்பில் சேர்க்கப்படுகிறது. மனித உயிரணுக்களில் காணப்படும் ஏஸ் 2 (ACE2) எனும் புரதத்தை “திறக்க” இந்த ஸ்பைக் கிளைகோ புரோட்டீன் பெரிய “துடுப்பு சீட்டாக” செயல்படுகிறது.
ஸ்பைக் புரோட்டீனை முதலில் ChAdOx1 nCoV-19 க்கு வெளிப்படுத்துவதன் மூலம், நமது உடல் இந்தவகையான புரோட்டீனை விரைவாக அடையாளம் காண்கின்றது . இதனால் SARS-CoV2 உடலில் நுழைந்தவுடன், வைரசுக்கு எதிரான நோயெதிர்ப்பு தூண்டவிடப்படுகிறது. "ChAdOx1 வைரஸிலிருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் இதுவரை 320 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. உடல் அதிக வெப்பநிலை, தலைவலி போன்ற தற்காலிக பக்க விளைவுகளை ஏற்படுத்தினாலும், தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது, மற்றும் ஏற்றுக் கொள்ள கூடியது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த தடுப்பூசி கண்டரிதலில் இந்தியாவிற்கும் தொடர்பு உள்ளது. பரிசோதனைக்குத் தேவைப்படும் தடுப்பூசி மருந்துகளை தயாரிப்பதில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஒரு பங்குதாரராக செயல் படுகிறது . அந்நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், : “இங்கிலாந்தில் செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்குள் மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக வரும் என்ற எதிர்பார்ப்பில் தடுப்பூசிகளை தயாரிக்க இருக்கிறோம். இன்னும் இரண்டு/மூன்று வாரங்களில் தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று சில ஊடகங்கள் கூறுவது முற்றிலும் தவறானது. மருத்துவ பரிசோதனைகள் வெற்றி பெரும் பட்சத்தில், போதுமான அளவு கிடைக்க வேண்டிய உற்பத்தியை முடிக்கி விடலாம் என்ற முடிவு மட்டுமே தற்போது எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தது.
சோதனை முயற்சிகளின் தற்போதைய நிலை என்ன? மெர்ஸ் நோய்க்கு எதிரானஒரு தடுப்பு மருந்தாக இது உருவாக்கப்பட்டதால், மனிதர்களுக்கு பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பு அம்சங்கள் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு விட்டன. இதனால், தடுப்பூசி செயல்திறன் சோதனைகள் விலங்குகளிடம் அல்லாமல் நேரடியாக மனிதர்களிடமே நடத்தப்படுகிறது.
ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்ப்டன், லண்டன், பிரிஸ்டல் போன்ற பகுதிகளில் இருந்து 1,102 பங்கேற்பாளர்கள் சேர்க்கப்படுவார்கள். சோதனையில் மக்கள் தடுப்பூசி பிரிவு/கட்டுப்பாட்டு பிரிவு என இருவகையாக பிரிக்கப்படும்; ( பாக்டீரியாவுக்கு எதிராக பயன்படுத்த உரிமம் பெற்ற மெனக்வி தடுப்பூசியைக் கட்டுப்பாட்டு பிரிவில் உள்ள மக்களுக்கு கொடுக்கப்படும் ) .
இன்னும் எத்தனை தடுப்பூசிகள் விசாரணையில் உள்ளது?
உலகம் முழுவதும் 40 க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்து சோதனைகள் பல்வேறு வளர்ச்சி கட்டங்களில் உள்ளதாக மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆக்ஸ்போர்டு அறிவிப்பு வரும் வரை, அமெரிக்கா தேசிய சுதாதார நிறுவனத்தின் கீழ், மாடர்னா நிறுவனம் மனிதர்கள் மீது கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைச் சோதித்துப் பார்க்கும் முதல் கட்ட பணிகளை துவங்கியதாக அறிவித்த செய்த நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்தன.
அமெரிக்கா: கடந்த மார்ச் 16 அன்று அமெரிக்கா தேசிய சுகாதாரத்துறை வெளியிட்ட ஒரு அறிக்கையில் “கொரோனா வைரஸ் நோய் 2019 (கோவிட்- 19) நோய் தடுப்பு மருந்திற்கான முதற் கட்ட சோதனை சியாட்டிலிலுள்ள கைசர் பெர்மனென்ட் வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கப்பட்டதாகவும், தேசிய சுகாதார நிறுவனங்களின் ஒரு பகுதியான ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் கழகம் (NIAID) இந்த சோதனைக்கு நிதியுதவி அளிப்பதாகவும் தெரிவித்தது. மேலும், 18 முதல் 55 வயதுடைய 45 தன்னார்வலர்கள் திறந்த-லேபிள் முறையில் சுமார் 6 வாரங்களுக்கு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் . முதல் பங்கேற்பாளர் தனது சோதனை தடுப்பூசியைப் பெற்றார்" என்றும் தெரிவித்தது.
அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் மாடர்னா நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில், "குறைந்தது அடுத்த 12-18 மாதங்களுக்கு வணிக ரீதியாக தடுப்பூசி கிடைக்க வாய்ப்பில்லை. இருப்பினும், 2020ம் ஆண்டு இலையுதிர்காலத்தில் சுகாதார வல்லுநர்கள் உட்பட சிலருக்கு அவசரகால பயன்பாட்டின் கீழ், தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தது.
ஹாங் காங்: ஹாங்காங்கில் பட்டியலிடப்பட்ட பயோடெக் கன்சினோ பயோலாஜிக்ஸ் நிறுவனம் தடுப்பூசியை பரிசோதித்து வருகிறது. கடந்த வாரம் முதல் கட்ட மருத்துவ சோதனைகள் வெற்றிகரமாக, செயல்திறன் சோதனைகள் இரண்டாம் கட்டத்திற்கு நகர்வதாக அறிவித்தது. இருப்பினும், முதற்கட்ட சோதனை குறித்த தரவுகளை பொது தளத்தில் இன்னும் வெளியிடவில்லை.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசியைப் போலவே, இதுவும் ஒரு அடினோவைரஸ் சார்ந்த தடுப்பூசி எனக் கூறப்படுகிறது.
இந்த கட்டுரை ஆங்கிலத்தில் படிக்க, இங்கே கிளிக் செய்யவும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.