Covid 19 vaccines effectiveness on serious disease death govt data Tamil News : கடந்த வியாழக்கிழமை சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தேசிய தடுப்பூசி இயக்கத்தின் நான்கு மாத தரவு, கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட பிறகு இறப்பைத் தடுப்பதில் 96.6 சதவிகிதம் செயல்திறனைக் காட்டியுள்ளது. அதாவது, மரணம் மற்றும் தீவிர நோய்களுக்கு எதிராக இந்தத் தடுப்பூசிகள் கிட்டத்தட்ட முழுமையான பாதுகாப்பை வழங்குகின்றன என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
ஏப்ரல் 18 மற்றும் ஆகஸ்ட் 15-க்கு இடையில் கோவிட் -19 தடுப்பூசியின் நிகழ் நேரத் தரவு, இரண்டாவது டோஸுக்குப் பிறகு இறப்புகளை மேலும் அதிகரிப்பதைத் தடுப்பதில் தடுப்பூசி செயல்திறனைக் காட்டியது. அதாவது, 97.5 சதவிகிதமாக இருந்தது.
மரணத்தைத் தடுப்பதில் தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த ஆரம்ப தரவுகளை வெளியிட்ட டிஜி ஐசிஎம்ஆர் டாக்டர் பல்ராம் பார்கவா, கடந்த வியாழக்கிழமை, சுகாதார அமைச்சகம் விரைவில் கோவின் தளம் மற்றும் தேசிய கோவிட் -19 சோதனையைப் பயன்படுத்தி ஐசிஎம்ஆரின் தரவுத்தளத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ் நேரத் தடுப்பூசி கண்காணிப்பு தரவை வழங்கும் என்று கூறினார்.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்கள் குறிப்பிடத்தக்கவை. நாட்டில் தகுதியுள்ள வயது முதிர்ந்தவர்களில் 58 சதவீதம் பேர் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். மேலும், 18 சதவிகிதம் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், வயது முதிர்ந்தவர்களின் கணிசமான விகிதம் கடுமையான நோய் மற்றும் இறப்பிலிருந்து பாதுகாப்பைக் கொண்டுள்ளது என்று தரவு தெரிவிக்கிறது.
"இந்த மாறுபடும் தரவு, முதல் தடுப்பூசிக்குப் பிறகும், தேசிய தடுப்பூசி இயக்கத்தில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் தீவிர நோய் மற்றும் இறப்புக்கு எதிராக 95 சதவிகிதம் வரை பாதுகாப்பை வழங்குகிறது. தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் நாம் பயன்படுத்தும் கருவிகளில், தடுப்பூசி கருவிதான் மரணத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும் மிக முக்கியமான கவசம். நீங்கள் இரண்டு டோஸ் எடுத்துக்கொண்டால், தீவிர நோய் மற்றும் மரணத்திற்கு எதிராக மொத்த பாதுகாப்பு இருக்கும் என்பதும் தெளிவாகிறது. இது சூழ்நிலையை மிகவும் வியத்தகு முறையில் மாற்றும்” என்று இந்தியாவின் கோவிட் -19 பணிக்குழுவின் தலைவர் டாக்டர் வி கே பால் கூறினார்.
"எங்களிடம் ஏராளமான தடுப்பூசிகள் உள்ளன. இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், முன் வந்து தங்கள் முதல் டோஸை பெற வேண்டும். 100 சதவிகித முதல் டோஸ் கவரேஜை நாம் இன்னும் வேகமாக அடைய வேண்டும். இது மரணங்களுக்கு எதிரான பாதுகாப்பை உறுதி செய்யும்" என்று பால் கூறினார்.
முதன்மை கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்துகொண்ட பார்கவா, தடுப்பூசி டிராக்கர் கோவிட் -19 தடுப்பூசிகள் அனைத்து வயதினருக்கும் மரணத்திற்கு எதிராகச் செயல்படுவதாகக் காட்டுகிறது என்று கூறினார். மக்கள்தொகையில் தடுப்பூசி போட்ட பிறகும் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் குறித்த தரவுகளில் ஐசிஎம்ஆர் வேலை செய்கிறது என்றும் பார்கவா கூறினார்.
"இந்த தடுப்பூசிகள் நோயை மாற்றும் தடுப்பூசிகள் தவிர நோயைத் தடுக்கும் தடுப்பூசிகள் அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே தடுப்பூசி போட்ட பிறகும் திருப்புமுனையாகத் தொற்று ஏற்படும். அதனால்தான், நாங்கள் மாஸ்க் மற்றும் கோவிட் -19 தடுப்பு வழிமுறைகளைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். நோய்த்தொற்று முறிவின் தரவை நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம்” என்று பார்கவா கூறினார்.
வியாழக்கிழமை, தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசனை நடத்துகிறது என்று பால் கூறினார். "குழந்தைகளுக்கு எப்போது தடுப்பூசி போட வேண்டும் என்பது வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் பொதுச் சுகாதார உரையாடல். ஒரு சில வரையறுக்கப்பட்ட நாடுகள் மட்டுமே குழந்தைகளுக்குத் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளன. நாம் இந்த திசையில்தான் செல்ல வேண்டும் என்று WHO-ன் பரிந்துரை எதுவும் இல்லை. ஆனால், குழந்தைகளில் சாத்தியமான பயன்பாட்டிற்காக எங்கள் தடுப்பூசிகளின் அறிவியல் சரிபார்ப்பின் திசையில் அரசாங்கம் தீவிரமாகச் செயல்படுகிறது என்பதே உண்மை" என்று பால் கூறினார்.
"சைடஸ் தடுப்பூசி ஏற்கனவே இளம் பருவத்தினருக்கு உரிமம் பெற்றுள்ளது. அதன் கையிருப்பு பற்றியும் எங்களுக்குத் தெரியும். இந்த குழுவிற்கு எப்படி, எப்போது கொடுக்க வேண்டும் என்ற கேள்விகளை எங்கள் அறிவியல் அமைப்புகள் விவாதிக்கின்றன. கோவாக்சின் சோதனைகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன் முடிவுகள் கிடைத்தபின், அந்த தடுப்பூசியும் சாத்தியமாகக் கிடைக்கும். Biological E தடுப்பூசி, 2-ம் கட்ட சோதனைகளுக்கான ஒப்புதலையும் பெற்றுள்ளது” என்று பால் மேலும் கூறினார்.
எப்படி இருந்தாலும், தற்போது குழந்தைகளின் தடுப்பூசி, அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு ஒரு தேவையாக இருக்க முடியாது என்பதை பால் எடுத்துரைத்தார்.
"உலகில் எங்கும், பள்ளிகளை மீண்டும் திறக்க, குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை. அது ஒரு அளவுகோல் அல்ல. இருப்பினும், ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். குழந்தை வைரஸை வீட்டிற்குக் கொண்டு வர வாய்ப்புள்ளதால் பெற்றோர்கள் தங்களைப் பாதுகாக்கத் தடுப்பூசி போட வேண்டும்” பால் அறிவுறுத்தினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil