நாட்டில் 15 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாடுமுழுவதும் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கிடையில், காலாவதியான தடுப்பூசிகளை சிறார்களுக்கு செலுத்திவிட்டனர் என்ற தகவல் பரவ தொடங்கி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த தகவலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது. காலாவதியான தடுப்பூசிகள் பயன்படுத்தப் படுவதாக கூறப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. கோவாக்சின் தடுப்பூசி காலாவதியாகும் காலம் ஒன்பது மாதங்களில் இருந்து, 12 மாதங்களாக முறையான ஆய்வுக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் நீட்டிக்கப்பட்டது.
இந்த பிரச்சனை ஏன் வந்தது?
நவம்பரில் காலாவதியாகவிருந்த தடுப்பூசிகளை சிறார்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக பலர் சுட்டிக்காட்டியதை அடுத்து பதட்டம் ஏற்பட்டது. ஆனால், இந்த தடுப்பூசிகளின் ஆயுட் காலம் நவம்பர் மாதத்திலேயே ஒன்பது மாதங்களிலிருந்து 12 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை பயன்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லை என் மத்திய அரசு தரப்பில் விளக்கப்பட்டது.
தடுப்பூசி உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்ட ஸ்திரத்தன்மை ஆய்வுத் தரவுகளின் விரிவான பகுப்பாய்வு அடிப்படையில் தான், தேசிய கட்டுப்பாட்டாளர், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அல்லது CDSCO மூலம் தடுப்பூசியின் ஆயுட் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கோவாக்சின் காலாவதி தேதி ஏன் நீட்டிக்கப்பட்டது?
கோவாக்ஸின் உற்பத்தியாளரான பாரத் பயோடெக் நிறுவனம் சமர்ப்பித்த கூடுதல் "நிலைத்தன்மை தரவு" அடிப்படையில் CDSCO கோவாக்சின் ஆயுட் காலத்தை அதிகரித்தது.
ஆயுட் காலம் நீட்டிப்பால், மருத்துவமனையில் காலவாதியாகும் காலத்தை நெருங்கி கொண்டிருந்த தடுப்பூசிகள் வீணாவதை தடுத்திட முடியும். 15-18 வயதுக்குட்பட்ட 10 கோடி பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடுவதற்கு 20 கோடி தடுப்பூசிகள் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் 'நிலைத்தன்மை', ஆயுள் காலம்' என்றால் என்ன?
தடுப்பூசிகள் என்பது புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், லிப்பிடுகள், செயலிழந்த வைரஸ்கள் அல்லது துணைப்பொருட்களின் கலவையாகும். இவை நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசியின் மருத்துவ செயல்திறனை மேம்படுத்திட பணியாற்றுகின்றன. ஒட்டுமொத்தமாக தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கின்றன.
மற்ற மருந்துப் பொருட்களைப் போலவே, தடுப்பூசிகளுக்கும் காலாவதியாகும் காலம் உற்பத்தியாளரால் தீர்மானிக்கப்பட்டு ஒழுங்குமுறை அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படுகிறது. ரசாயன எதிர்வினைகள் மற்றும் செயல்திறனை இழப்பதால் தடுப்பூசியின் ஆயுட் காலம் காலப்போக்கில் குறைகிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஸ்திரத்தன்மை என்பது ஒரு தடுப்பூசியின் ரசாயன, நுண்ணுயிரியல், உயிரியல் பண்புகளை ஆயுட் காலம் முழுவதும் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் தக்கவைத்துக்கொள்ளும் திறன் ஆகும்.
பேக்கேஜிங் மற்றும் சேமிப்பக நிலைமைகளின் கீழ் அதன் ஆயுட் காலம் மற்றும் பயன்பாட்டு காலத்தை வரையறுக்க தடுப்பூசியின் நிலைத்தன்மை குறித்த தகவல்களைப் பெறுவதற்காக தொடர்ச்சியான சோதனைகள் நடத்தப்படுகின்றன.
ஸ்திரத்தன்மை ஆய்வுகளானது மூன்று குறிக்கோள்களுடன் நடத்தப்படுகிறது. முதலாவது, ஆயுட் காலம் மற்றும் சேமிப்பு நிலைமைகளை தீர்மானிக்க நடத்தப்படுகிறது.
இரண்டாவது, தடுப்பூசி ஒப்புதல் அளிக்கப்பட்டு வணிக ரீதியாக சந்தைப்படுத்தப்படும் போது, அதன் நிலைத்தன்மையை கண்காணிக்கிறது.
மூன்றாவதாக, WHO வழிகாட்டுதல்களின்படி, வெவ்வேறு செயல்முறைகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் ஒப்பீட்டை நிரூபிப்பதன் மூலம் உற்பத்தி மாற்றங்களை ஆதரிக்க ஸ்திரத்தன்மை ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
ஆயுட் காலம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
தயாரிப்பை வெவ்வேறு வெப்பநிலைகளில் வெவ்வேறு காலங்களுக்குச் சேமித்து அதன் செயல்திறனைச் சோதிப்பதன் மூலம் ஆயுட் காலம் கணக்கிடப்படுகிறது என்று முன்னணி வைராலஜிஸ்ட் டாக்டர் ஷாஹித் ஜமீல் கூறினார்.
குறிப்பிட்ட தயாரிப்பை பல்வேறு வெப்பநிலைகளில் சேமித்து வைத்துவிட்டு, அவ்வப்போது தயாரிப்பில் ஏதேனும் மாறுதல் நடைபெற்றுள்ளதாக என்பதை கண்காணித்து, காலாவதி தேதி முடிவு செய்யப்படுகிறது.
தயாரிப்பு நிலையானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் கால அளவு அதன் ஆயுட் காலம் என்று கருதப்படுகிறது. தயாரிப்பின் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு பல்வேறு உயிர்வேதியியல் வழிகள் உள்ளன என்று முன்னணி நோயெதிர்ப்பு நிபுணர் டாக்டர் வினீதா பால் கூறினார்.
WHO வழிகாட்டுதல்களின்படி, தடுப்பூசி ஆயுட் காலம் என்பது, தடுப்பூசிகளை வெவ்வேறு காலங்களில் சேமிக்கப்பட்டு, நிலைத்தன்மை ஆய்வுகள் மூலம் பல பேட்ச்களாக அதன் ஆயுட் காலம் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு பேட்ச்களின் ஆயுட் காலம் மூலம் காலவாதி தேதி முடிவு செய்யப்படுகிறது.
டாக்டர் ஜமீல் கூறுகையில், தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, சிறிய விலங்குகளுக்கு செலுத்துவதன் மூலம் ஆன்டிபாடிகளை உருவாக்கும் திறன் சேமிப்பு நேரம் மற்றும் வெப்பநிலையுடன் குறைகிறதா என்பதை மதிப்பாய்வு செய்து கணக்கிடப்படுகிறது. காலாவதி தேதி என்பது குறிப்பிட்ட நாளை தாண்டிய பிறகு, தடுப்பூசி முந்தையதைப் போல நோய் எதிர்ப்பு சக்தியை வழங்காது. குறைவான அளவில் வழங்கிட நேரிடலாம் என்றார்.
ஆப்பிரிக்காவிற்கான WHO பிராந்திய அலுவலகம் மே மாதம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, " தடுப்பூசியின் ஆயுட் காலம், கொடுக்கப்பட்ட சேமிப்பு வெப்பநிலையில் தடுப்பூசி எவ்வளவு காலம் அதன் ஆற்றலையும் நிலைத்தன்மையையும் தக்க வைத்துக் கொள்கிறது என்பதன் பிரதிபலிப்பாகும். தடுப்பூசியின் ஒவ்வொரு பேட்சின் காலவாதி தேதியை முடிவு செய்ய, ஆயுட் காலம் உதவுகிறது. காலாவதி தேதிகள் தடுப்பூசியின் பாதுகாப்பை பாதிக்காது. மாறாக தடுப்பூசி வழங்கும் ஆற்றல் அல்லது அளவுடன் தொடர்புடையது" என குறிப்பிடப்பட்டிருந்தது.
தேதி நீட்டிப்பு Covaxinக்கு அளிக்கப்பட்ட சிறப்புச் சலுகையா?
நிச்சயம் இல்லை. முன்னதாக பிப்ரவரி மாதத்தில் கோவிஷீல்டின் ஆயுட் காலம் 9 மாதங்களில் இருந்து12 மாதமாக CDSCO உயர்த்தியது. தேதி நீட்டிப்பை பெற, தடுப்பூசியின் தயாரிப்பாளர்கள் அதன் நிலைத்தன்மையை நீண்ட காலத்திற்கு தக்கவைத்துக்கொள்வதற்கான தரவைச் சமர்ப்பிக்க வேண்டும். தரவுகளில் திருப்தி அடைந்தால், தேதி நீட்டிப்பை செய்ய முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.