/indian-express-tamil/media/media_files/RHlyZRk5hX5twHice5nN.jpg)
அஸ்ட்ராஜெனெகா டி.டி.எஸ்-க்கும் அதன் தடுப்பூசிகளுக்கும் இடையிலான தொடர்பை உறுதிப்படுத்தியது இதுவே முதல் முறை.
த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் அல்லது டி.டி.எஸ் உடனான த்ரோம்போசிஸ் என்பது அசாதாரணமாக குறைந்த அளவிலான பிளட்லெட்டுகள் மற்றும் ரத்தம் உறைந்து கட்டிகள் உருவாக்கம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் ஒரு மருத்துவ நிலை. அஸ்ட்ராஜெனெகா-வின் தடுப்பூசிகள் மற்றும் டி.டி.எஸ் பற்றிய கவலைகள் கடந்த காலத்திலும் எழுப்பப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்க: Covishield could cause blood clots in very rare cases, manufacturer AstraZeneca has said. What does this mean?
உலகளாவிய மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா, கோவிட்-19 க்கு எதிரான ஏ.இசட்.டி. 1222 (AZD1222) தடுப்பூசி, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற உரிமத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது. மிகவும் அரிதான நிகழ்வுகளில் பிளெட்லெட் எண்ணிக்கை குறைவு மற்றும் ரத்த உறைவை உருவாக்கலாம் என்று கூறியுள்ளது.
த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (டி.டி.எஸ்) உடன் தடுப்பூசி மற்றும் ரத்த உறைவு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை அஸ்ட்ராஜெனெகா ஒப்புக்கொண்டது. இது அசாதாரணமாக குறைந்த அளவிலான பிளேட்லெட்டுகள் மற்றும் இரத்த உறைவு உருவாக்கம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் ஒரு மருத்துவ நிலை ஆகும்.
கோவிஷீல்ட் தயாரிப்பதற்கான கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசி ஃபார்முலா புனேவை தளமாகக் கொண்ட தடுப்பூசி தயாரிப்பாளர் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII)-க்கு உரிமம் பெற்றது. இந்தியாவில் 175 கோடிக்கும் அதிகமான டோஸ் கோவிஷீல்டு நிர்வகிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்ட்ராஜெனெகா இந்த சமர்ப்பிப்பைச் செய்ய என்ன வழிவகுத்தது? தடுப்பூசிகள் மற்றும் டி.டி.எஸ் பற்றி என்ன தெரியும்? மேலும், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்கள் கவலைப்பட வேண்டுமா?
அஸ்ட்ராஜெனெகா சரியாக என்ன கூறியது?
யுனைடெட் கிங்டமில் உள்ள நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நீதிமன்ற ஆவணங்களில் டி.டி.எஸ் பற்றி அஸ்ட்ராஜெனெகா பேசியது. 2020-ம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி தொடர்பான சுகாதார உரிமைகோரல்கள் மீது மருந்து நிறுவனமான மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட தி டெலிகிராப் என்ற ஊடக அமைப்பு, “இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜேமி ஸ்காட் என்பவரால் கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் ஏப்ரல் 2021-ல் தடுப்பூசியைப் பெற்ற பிறகு, இரத்த உறைவு மற்றும் மூளையில் ரத்தப்போக்கு உருவாகிய பின்னர் நிரந்தர மூளைக் காயத்துடன் இறந்து போனார்.” என்று கூறியது.
மொத்தத்தில், “51 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் (இங்கிலாந்தில்) தாக்கல் செய்யப்பட்டுள்ளன, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் துக்கமடைந்த உறவினர்கள் 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான நஷ்டஈடு கோரியுள்ளனர்” என்று அந்த அறிக்கை கூறியது.
பிப்ரவரியில் இருந்து நீதிமன்ற ஆவணங்களில், அஸ்ட்ராஜெனெகா பொதுவான அளவில் தடுப்பூசியால் டி.டி.எஸ் ஏற்படுகிறது என்பதை மறுத்தார். இருப்பினும், மிகவும் அரிதான நிகழ்வுகளில் அதன் தடுப்பூசியின் விளைவாக டி.டி.எஸ்-ன் சாத்தியத்தை ஒப்புக் கொண்டது.
டி.டி.எஸ்-ன் அறிகுறிகள் என்ன?
மூச்சுத் திணறல், மார்பு அல்லது கைகால்களில் வலி, ஊசி போடும் இடத்திற்கு அப்பால் உள்ள பகுதியில் தோலில் சிராய்ப்பு, தலைவலி, உடல் உறுப்புகளில் உணர்வின்மை, ரத்தம் உறைதல் காரணமாக இரத்த ஓட்டத்தில் தடை போன்ற பல அறிகுறிகள் டி.டி.எஸ் உடன் தொடர்புடையவை ஆகும்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிசின் இணையதளம் கூறுகிறது, “த்ரோம்போசிஸ் நரம்புகள் மற்றும் தமனிகள் இரண்டிலும் ரத்த ஓட்டத்தைத் தடுக்கும். த்ரோம்போசிஸ் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து சிக்கல்கள் இருக்கும். பக்கவாதம், மாரடைப்பு மற்றும் தீவிரமான சுவாசப் பிரச்சனைகள் ஆகியவை மிகவும் கடுமையான பிரச்சனைகளாகும்.” என்று கூறியுள்ளது.
கொரோனா தொற்று நோய் பரவிய 4 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த கவலைகள் இப்போது ஏன் வெளிவந்துள்ளன?
இந்த கவலைகள் உண்மையில், முன்பே தெரிவிக்கப்பட்டன. ஆனால், அஸ்ட்ராஜெனெகா டி.டி.எஸ்-க்கும் அதன் தடுப்பூசிகளுக்கும் இடையிலான தொடர்பை உறுதிப்படுத்தியது இதுவே முதல் முறை.
இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசிகள் வெளியிடப்படுவதற்கு முன்பு, இந்திய அரசாங்கம் ஜனவரி 2021-ல் ஒரு உண்மைத் தாளை வெளியிட்டது. அதில் கோவிஷீல்ட் (அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசியின் இந்திய மாறுபாடு) த்ரோம்போசைட்டோபீனியா கொண்ட அதாவது, குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கையின் நிலை உள்ள நபர்களுக்கு எச்சரிக்கையுடன் கொடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பாகக் கூறியது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் ஆகியவை இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு கோவிட் தடுப்பூசிகள் ஆகும்.
பின்னர், மார்ச் 2021-ல், ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா, எஸ்டோனியா, பல்கேரியா, ருமேனியா, எஸ்டோனியா, லிதுவேனியா, லக்சம்பர்க் மற்றும் லாட்வியா ஆகிய நாடுகள், ரத்தம் உறைதல் நிகழ்வுகள் பதிவாகியதை அடுத்து, அஸ்ட்ராஜெனெகாவை பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தின.
அடுத்த மாதம், உலக சுகாதார நிறுவனம் கோவிஷீல்டு மற்றும் வாக்ஸ்ஜெவ்ரியா (அஸ்ட்ராஜெனெகா-வின் தடுப்பூசியின் மற்ற வணிகப் பெயர்) தடுப்பூசிகளுக்குப் பிறகு சில சந்தர்ப்பங்களில் டி.டி.எஸ் பதிவாகியதாகக் கூறியது.
இருப்பினும், உலக சுகாதார நிறுவனம் மேலும் கூறியது, “சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், வாக்ஸ்ஜெவ்ரியா மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுடன் டி.டி.எஸ்-ன் ஆபத்து மிகக் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. தடுப்பூசியைப் பெறும் 1 மில்லியன் பெரியவர்களுக்கு (2,50,000-க்கு 1 நிகழ்வு) ஆபத்து தோராயமாக நான்கு வழக்குகள் என்று இங்கிலாந்தின் தரவு தெரிவிக்கிறது, அதே நேரத்தில், இந்த விகிதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) 1,00,000-க்கு 1 என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரத்தம் உறைந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதா?
இந்திய அரசாங்கம் மே 2021-ல், கோவிஷீல்ட் செலுத்தத் தொடங்கியதில் இருந்து 26 சாத்தியமான த்ரோம்போம்போலிக் நிகழ்வுகள் அல்லது ரத்த நாளங்களில் உறைவு ஏற்படுவதாகக் கூறியது.
இந்தியா ஜனவரி 16, 2021 இல் தடுப்பூசிகளை வழங்கத் தொடங்கியது. அதுவரை வழங்கப்பட்ட மொத்த டோஸ்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சாத்தியமான த்ரோம்போம்போலிக் நிகழ்வுகளின் எண்ணிக்கை ஒரு மில்லியன் டோஸ்களுக்கு 0.61 கேஸ்கள் அல்லது 0.000061 சதவீதம் என்று கருதத்தொடங்கியது.
மிக சமீபத்திய தரவுகளின்படி, நோய்த்தடுப்புக்குப் பின் வரும் பாதகமான நிகழ்வுகள் பற்றிய அரசாங்கத்தின் குழு (AEFI) குறைந்தது 36 டி.டி.எஸ் நிகழ்வுகள் பரிசோதிக்கப்பட்டு, கோவிஷீல்ட் காரணமாக ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட குழுவின் கடைசி அறிக்கை, இந்த நிகழ்வுகளில் 18 இறப்புகள் பதிவாகியுள்ளன என்பதைக் காட்டுகிறது. ஏறக்குறைய இந்த டி.டி.எஸ் வழக்குகள் அனைத்தும் 2021-க்கு உட்பட்டவை, இது நாட்டில் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் ஆண்டாகும்.
மத்திய சுகாதார அமைச்சகம் இந்த நிகழ்வை‘மைனஸ்குலர்’ என்று குறிப்பிட்டது. மேலும் கோவிட்-19 காரணமாக தொற்றுநோய்களைத் தடுக்கவும் இறப்புகளைக் குறைக்கவும் மிகப்பெரிய ஆற்றலுடன் கோவிஷீல்ட் ஒரு திட்டவட்டமான நேர்மறையான நன்மை-ஆபத்து சுயவிவரத்தைத் தொடர்கிறது என்று கூறியது.
பாரத் பயோடெக் மூலம் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசியான கோவாக்ஸின் விஷயத்தில், சாத்தியமான ரத்த உறைவு நிகழ்வுகள் எதுவும் இல்லை என்று அது கூறியது.
“ஐரோப்பிய வம்சாவளியினருடன் ஒப்பிடுகையில், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய வம்சாவளியினருக்கு இந்த ஆபத்து (ரத்தம் உறைதல்) கிட்டத்தட்ட 70% குறைவு” என்று அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறியது.
2023 ஆம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனம், தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோயெதிர்ப்பு த்ரோம்போடிக் த்ரோம்போசைட்டோபீனியாவை (VITT) அதன் டி.டி.எஸ் வகைப்பாட்டில் இணைத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.