Cricket news in tamil: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா மைதானத்தில், நேற்று புதன் கிழமை முதல் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. சுமார் 1,10,000 இருக்கைகளை கொண்ட இந்த மைதானத்தின் பெயர் மொட்டேரா அல்லது சர்தார் படேல் என்பதிலிருந்து நரேந்திர மோடி மைதானம் என்று போட்டி ஆரம்பமாகும் முன்னர் மாற்றம் செய்யப்பட்டது.
கிரிக்கெட் மைதானங்களுக்கு கிரிக்கெட் வீரர்களின் பெயர் இடாமல், அரசியல் தலைவர்கள் மற்றும் தனி நபர்களின் பெயர்களை வைத்துப்பது இது ஒன்றும் புதிதல்ல. இது போன்று நிறைய மைதானங்களின் பெயர் அரசியல் தலைவர்களின் மற்றும் தனிநபர்களின் பெயர்களை தாங்கி உள்ளன. அவைகளை பற்றி கீழே சுருக்கமாக காணலாம்.
மொட்டேரா மைதானத்தின் பெயர் மாற்ற காரணம் என்ன?
"சர்தார் படேல் மைதானம் என்று அழைக்கப்பட்ட மைதானம், இனி நரேந்திர மோடி மைதானம் என்று அழைக்கப்படும்" என்று கூறி மைதானத்தை திறந்து வைத்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். அதோடு அங்கு இருந்த விளையாட்டு வளாகத்திற்கு சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு வளாகம் என்று பெயரிட்டும் திறந்து வைத்தார்.
சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு வளாகம் என்று பெயரிடப்படவுள்ள விளையாட்டு வளாகத்தில், கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, கபாடி, குத்துச்சண்டை மற்றும் புல்வெளி கொண்ட டென்னிஸ் மைதானம் உள்ளிட்ட 20 மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு பகுதி தான் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம்.
"இந்த கிரிக்கெட் மைதானம் பிரதமர் மோடியின் கனவு திட்டம். எனவே அவரது பெயரை வைத்துள்ளோம்” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா திறப்பு விழாவின் போது கூறியிருந்தார்.
“இந்த மைதானம் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது கருத்துருவாக்கப்பட்டது. அப்போது அவர் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக செயல்பட்டுக் கொண்டிருந்தார்" என்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கூறியிருந்தார்.
கடந்த காலங்களில் மைதானத்தின் பெயர், அந்த நபர்கள் வாழும் போதே பெயர் சூட்டப்பட்ட சம்பவங்கள் நடந்து உள்ளதா?
ஆம். மும்பையின் பிராபோர்ன் மற்றும் வான்கடே மைதானத்தின் பெயர் அந்த நபர்கள் வாழும் போதே பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதே போன்று தான் நவி மும்பையின் டி ஒய் பாட்டீல் மைதானம், பெங்களூரின் எம் சின்னசாமி மைதானம், மற்றும் சென்னையின் எம் எ சிதம்பரம் மைதானம்.
அதோடு 2015 -ம் ஆண்டு மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானதின், அப்போதைய பஞ்சாப் கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த ஐ.எஸ்.பிந்த்ராவின் பெயர் சூட்டப்பட்டது
இந்தியாவில் ஏதேனும் கிரிக்கெட் மைதானங்களுக்கு கிரிக்கெட் வீரர்களின் பெயர் சூட்டப்பட்டு உள்ளதா?
முதல் தர மற்றும் சர்வதேச போட்டிகளை நடத்திய ஒரு கிரிக்கெட் மைதானத்திற்கு கூட கிரிக்கெட் வீரர்களின் பெயர் சூட்டப்படவில்லை. ஆனால் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நிர்வாகிகள், இசைக்கலைஞர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் பொது மேலாளர்கள் போன்றோரை கவுரவிக்கும் விதமாக பல கிரிக்கெட் மைதானங்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் முதல் தர மற்றும் சர்வதேச போட்டிகளை நடத்தாத இரண்டு கிரிக்கெட் மைதானங்களுக்கு ஹாக்கி வீரர்களின் பெயரிடப்பட்டுள்ளது. குவாலியரில் உள்ள கேப்டன் ரூப் சிங் மைதானம் மற்றும் லக்னோவின் கே டி சிங் பாபு மைதானம்.
மற்ற எந்தெந்த மைதானங்கள் இந்த பட்டியலில் உள்ளது?
ஒன்பது மைதானங்களுக்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயரிடப்பட்டுள்ளது. இவற்றில் எட்டு மைதானங்கள் (புது தில்லி, சென்னை, கொச்சி, இந்தோர், கவுகாத்தி, மார்காவோ, புனே மற்றும் காசியாபாத்) உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தியுள்ளன.
தலா மூன்று மைதானங்களுக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி (கவுகாத்தி, புது தில்லி மற்றும் விஜயவாடா) மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி (ஹைதராபாத், டெஹ்ராடூன் மற்றும் கொச்சி) பெயரிடப்பட்டுள்ளது.
தலா இரண்டு மைதாங்களுக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் (நடான் மற்றும் லக்னோ) மற்றும் சர்தார் படேல் (வால்சாத் மற்றும் அகமதாபாத், புதன்கிழமை மறுபெயரிடப்படுவதற்கு முன்பு வரை) பெயரிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு புதுடெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்திற்கு, முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் மறுபெயரிடப்பட்டது.
கோழிக்கோட்டில் உள்ள ஈ.எம்.எஸ் மைதானம், கம்யூனிஸ்ட் தலைவரும் கேரளாவின் முன்னாள் முதல் முதலமைச்சருமான இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்டின் பெயரிடப்பட்டுள்ளது.
மற்ற துறைகளைச் சேர்ந்த தனிநபர்களின் பெயரிடப்பட்ட மைதாங்களும் உள்ளன.
அதில் இரண்டு இரண்டு ஹாக்கி மைதானங்கள் முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மேஜர் தியான் சந்த் பெயரையும், மற்றும் ஒரு கால்பந்து மைதானம் முன்னாள் கேப்டன் பைச்சுங் பூட்டியாவின் பெயரையும் தாங்கியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.