இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் 'மதசார்பற்ற' மற்றும் 'சோசலிச' ஆகிய சொற்கள் சேர்க்கப்பட்டது குறித்த அரசியல் விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், ஆர்.எஸ்.எஸ் தலைவர் தத்தாத்ரேய ஹோசபலே, மத்திய அமைச்சர்கள் ஷிவ்ராஜ் சிங் சவுகான், ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் அவசரகாலத்தின் போது செய்யப்பட்ட இந்தத் திருத்தத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். எனினும், கடந்த கால நீதிமன்றத் தீர்ப்புகளும், நாடாளுமன்ற விவாதங்களும் 42வது அரசியலமைப்பு திருத்தத்தை எப்போதும் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
1976 ஆம் ஆண்டில், 42வது அரசியலமைப்பு திருத்த சட்டம் மூலம் முகவுரையில் 'சோசலிச' மற்றும் 'மதசார்பற்ற' ஆகிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. இதே திருத்தத்தின் மூலம் அடிப்படை கடமைகளும் அரசியலமைப்பில் இணைக்கப்பட்டன. 1977 இல் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி தலைமையிலான அரசு, 1978 இல் 44வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அவசரகாலத்தின் போது செய்யப்பட்ட பல திருத்தங்களை ரத்து செய்தது. இதன் மூலம் சிவில் உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டன, நீதித்துறை மறுஆய்வு அதிகாரங்கள் மீண்டும் வழங்கப்பட்டன மற்றும் பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது. ஆனால், முகவுரையில் செய்யப்பட்ட மாற்றங்களையும், அடிப்படை கடமைகளின் சேர்க்கையையும் ஜனதா அரசு தக்கவைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 2024 இல், அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, முகவுரை திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை தள்ளுபடி செய்தது. அந்தத் தீர்ப்பில், "இந்தச் சொற்கள் பரவலான அங்கீகாரத்தை பெற்றுள்ளன. 'இந்திய மக்களாகிய நாம்' இவற்றின் அர்த்தத்தை எந்த சந்தேகமும் இல்லாமல் புரிந்து கொண்டுள்ளோம்" என்று அமர்வு குறிப்பிட்டது.
"முகவுரையில் சேர்க்கப்பட்ட இந்த அம்சங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் பின்பற்றும் சட்டங்களை அல்லது கொள்கைகளை கட்டுப்படுத்தவோ அல்லது தடுக்கவோ இல்லை. அத்தகைய நடவடிக்கைகள் அடிப்படை மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை அல்லது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறாத பட்சத்தில் இது பொருந்தும். எனவே, ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்த்து கேள்வி எழுப்ப நியாயமான காரணம் இல்லை" என்று தீர்ப்பு கூறியது.
'சோசலிச' மற்றும் 'மதசார்பற்ற' என்ற சொற்கள் 42வது திருத்தத்தின் மூலம் முகவுரையில் சேர்க்கப்படுவதற்கு முன்னரே, 1973 ஆம் ஆண்டின் கேசவானந்த பாரதி வழக்கில் 13 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மதசார்பின்மை என்பது அரசியலமைப்பின் ஒரு அடிப்படைக் கட்டமைப்பு அம்சமாகும் என்றும், அதை அகற்ற முடியாது என்றும் தீர்ப்பளித்தது. "மதம் என்ற ஒரே காரணத்திற்காக எந்தவொரு குடிமகனையும் பாகுபாடு காட்டாத அரசின் மதசார்பற்ற தன்மையை ஒருபோதும் அகற்ற முடியாது" என்று அத்தீர்ப்பு கூறுகிறது.
1980 ஆம் ஆண்டின் மற்றொரு முக்கிய தீர்ப்பான மினிர்வா மில்ஸ் வழக்கில், அவசரகாலத்தின் போது செய்யப்பட்ட மேலும் பல அரசியலமைப்பு திருத்தங்கள் விவாதிக்கப்பட்டன. அப்போது நீதிமன்றம், "சோசலிசம்" என்பது அரசியலமைப்பு வகுத்தவர்களின் லட்சியக் கோட்பாடாகும் என்று அங்கீகரித்தது. இது அரசியலமைப்பின் நான்காம் பாகத்தை மேற்கோள் காட்டியது.
"நாம் ஒரு சோசலிச அரசாக நம்மை அமைத்துக் கொள்ளத் தீர்மானித்தோம். இது நமது மக்களுக்கு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை உறுதிப்படுத்தும் கடமையை கொண்டிருந்தது. எனவே, எட்டப்பட வேண்டிய சோசலிச இலக்கை குறிப்பிடும் அரசு கொள்கைகளின் வழிகாட்டு நெறிமுறைகளை உள்ளடக்கிய நான்காம் பாகத்தை நமது அரசியலமைப்பில் சேர்த்தோம்" என்று அத்தீர்ப்பு குறிப்பிட்டது.