தர்ம சன்சாத், மகாமண்டலேஷ்வர் என்றால் என்ன? இந்து மதத்தில் இவைகளின் பங்கு என்ன?

இந்துத்துவ தலைவர்கள் மற்றும் சாதுக்கள், தர்மத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படும் பிரச்சினைகளில் முடிவுகள் எடுக்க உருவாக்கப்பட்ட தளமாகும். முதல் விஷ்வ இந்து பரிசாத்தின் தர்ம சன்சாத் 1984ம் ஆண்டு டெல்லியில் அமைந்திருக்கும் விக்யான் பவனில் நடத்தப்பட்டது. அங்கே தான் ராமஜென்ம பூமி இயக்கம் குறித்து முதன்முறையாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

Dharma sansad and mahamandaleshwar

 Lalmani Verma 

டிசம்பர் மாதம் மூன்று நாட்கள் ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சாத் நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 16ம் தேதி அன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தர்ம சன்சாத் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ள்ளனர்.

டிசம்பர் மாதம் 17 முதல் 19 தேதி வரை குறிப்பிட்ட அமைப்புகளுடன் நடைபெற்ற உள் அரங்கு மாநாட்டில் பங்கேற்ற சில இந்துத் தலைவர்கள் சிறுபான்மையினரை குறி வைத்து வெறுப்பு மிக்க கருத்துகளை பேசியுள்ளனர்.

இப்படியான கருத்துகளை பதிவு செய்தவர்கள், நாட்டில் பல்வேறு பகுதியில் செயல்பட்டு வரும் அகராக்களின் மகாமண்டலேஷ்வர்கள் அல்லது இந்துத்துவ அமைப்புகளில் தலைவர்கள் ஆவார்கள். ஹரித்வார் தர்ம சன்சாத் நிகழ்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் யாதி நர்சிங்கானந்த் என்ற இந்துத்துவ தலைவராவார். அவர் ஜூனா அகராவின் ( Juna Akhara) மகாமண்டலேஷ்வர். சன்சாத்தில் பேசிய ப்ரபோதானந்த் கிரி மற்றும் அன்னபூர்ணா மா ஆகியோர் ஜூனா அகரா மற்றும் நிரஞ்சனி அகராவின் மகா மண்டலேஷ்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்வ இந்து பரிஷாத்தின் தர்ம சன்சாத்கள்

தர்ம சன்சாத் என்பது மத நாடாளுமன்றம் என்றே கூறலாம். இந்துத்துவ தலைவர்கள் மற்றும் சாதுக்கள், இந்து தர்மத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படும் பிரச்சினைகளில் முடிவுகள் எடுக்க உருவாக்கப்பட்ட தளமாகும். முதல் விஷ்வ இந்து பரிசாத்தின் தர்ம சன்சாத் 1984ம் ஆண்டு டெல்லியில் அமைந்திருக்கும் விக்யான் பவனில் நடத்தப்பட்டது. அங்கே தான் ராமஜென்ம பூமி இயக்கம் குறித்து முதன்முறையாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

1985ம் ஆண்டு அடுத்த தர்ம சன்சாத் உடுப்பியில் நடத்தப்பட்டு 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஒன்று ஸ்ரீ ராமஜென்மபூமி, ஸ்ரீ கிருஷ்ணஜன்மஸ்தான் மற்றும் காசி விஷ்வநாதர் கோவில்களை உடனே இந்து சமாஜ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறியது.

வி.எச்.பியின் தர்ம சன்சாத்கள் மார்கதர்ஷக் மண்டல்களால் (margadarshak mandal) நடத்தப்படுகிறது. இந்த அமைப்பு நாட்டில் உள்ள 65 முக்கிய சன்யாசிகளின் குழுவாகும். இந்து சமாஜூக்கு வழிகாட்ட வேண்டிய அவசியம் ஏற்படும் போதெல்லாம் இந்த சன்சாத்கள் நடத்தப்படுகிறது.

மார்கதர்ஷக் அமைப்பு எந்த அகராக்களில் இருந்து சன்யாசிகள் அழைக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானம் செய்கிறது. இந்த சன்யாசிகள் நேரடியாக சன்சாத்களில் பங்கேற்கின்றனர் அல்லது தங்களின் பிரதிநிதிகளை இந்த மாநாட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

வி.எச்.பியின் இணை பொது செயலாளர் சுரேந்திர ஜெய்ன் இது குறித்து கூறிய போது இதுவரை வி.எச்.பி. அமைப்பு 17 தர்ம சன்சாத்களை கூட்டியுள்ளது. இது சன்யாசிகளிடம் இருந்து ஆலோசனைகளை பெற வழக்கமாக நடைபெறும் கூட்டங்களாகும்.

இறுதியாக வி.எச்.பியின் தர்ம சன்சாத் ஹரித்வாரில் 2019ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது, அன்றைய உத்தரகாண்ட் மாநில முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத்திடம் அரசின் கட்டுப்பாடுகளில் இருந்து கோவில்களை விடுவிக்கவும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

VHP மற்றும் பிற சன்சாத்கள்

பல ஆண்டுகளில் புதிய அமைப்புகள் தங்களின் சொந்த தர்ம சன்சாத்களை அமைத்து கூட்டங்களை நடத்தினார்கள். இதற்கு விஷ்வ இந்து பரிசாத் ஒப்புதல் வழங்கியுள்ளது. முதல் தர்ம சன்சாத்தினை 1984ம் ஆண்டு விஷ்வ இந்து பரிசாத் நடத்தியது. யார் வேண்டுமானாலும் தங்களின் தர்ம சன்சாத்துகளை நடத்திக் கொள்ளலாம் என்று ஜெய்ன் கூறினார்.

புதிய மரபுகள் மற்றும் முறைகளின் வளர்ச்சி தான் இந்து தர்மத்தின் சிறப்பு. மற்ற அமைப்புகள் சன்சாத் என்ற பெயரில் கூட்டங்களை நடத்துவதால் எங்கள் அமைப்பின் புகழுக்கு ஒரு கலங்கமும் ஏற்படாது என்றும் அவர் கூறினார். ஆனாலும் கடந்த மாதம் நடைபெற்ற சன்சாத் நிகழ்வில் இருந்து தங்களின் அமைப்பை அவர் விலக்கிக் கொண்டார்.

ஹரித்வாரில் கடந்த மாதம் நடைபெற்றது விஷ்வ இந்து பரிசாத்தின் கூட்டம் இல்லை. தர்ம சன்சாத் என்ற வார்த்தைகளுக்கு நாங்கள் காப்புரிமை பெறவில்லை. மக்களுக்கு விஷ்வ இந்து பரிசாத்தின் மொழி நன்கு தெரியும். நாங்கள் இப்படியாக பேசமாட்டோம் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்று ஜெய்ன் கூறினார். யாதி நர்சிங்கானந்த் விஷ்வ இந்து பரிசாத்தின் மார்கதர்ஷக் அமைப்பில் இல்லை என்றும் வி.எச்.பியின் தளத்தில் இருந்து அவர் ஒரு போதும் பேசியது இல்லை என்றும் ஜெய்ன் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு அகராவுக்கும் சன்சாத் உள்ளன

ஜூனா அகராவின் தலைவர் ப்ரேம் கிரி மகாராஜ் தர்ம சன்சாத் என்பது மத தலைவர்களும் சாதுக்களும் நடத்தும் கூட்டம். ஒவ்வாரு அகராவும் தங்களின் அமைப்பிற்கான சன்சாத் நிகழ்வுகளை தொடர்ந்து நடத்துகின்றனர் என்றார். 200 முதல் 400 பக்தர்களை வைத்து ஒரு மகாமண்டலேஷ்வர் போதனை நடத்தினால் அதுவும் சன்சாத் நிகழ்வு தான் என்றார் அவர்.

பகவத் கீதை, ராமாயணம் மற்றும் சனாதன தர்மத்தை போதிக்கவே இத்தகைய கூட்டங்கள் நடத்தப்படுகிறது என்று நிரஞ்சனி அகராவின் செயலாளர் ரவீந்திர பூரி கூறினார். தர்ம சன்சாத் ஒரு அரசியல் தளம் அல்ல. இந்த கூட்டங்கள் எந்த ஒரு தனி நபருக்கும் எதிரானதாக இருக்கக்கூடாது. நேர்மறை எண்ணங்கள் மற்றும் செய்திகளை பரப்பும் ஒரு கூட்டமாகவே இது இருக்க வேண்டும் என்பதால் ஹரித்வாரில் நடைபெற்ற இத்தகைய கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்தார்.

அகரா அமைப்பின் தூதுவர்கள்

இந்தியாவில் உள்ள 13 அகராக்கள் சனாதன தர்மத்தை பரப்ப தங்களின் அமைப்பில் இருந்து மகாமண்டலேஷ்வர்களை பரிந்துரை செய்யும். இந்த மகாமண்டேஷ்வர்களுக்கு அகராவின் உள்கட்டமைப்பு மற்றும் நிதி தொடர்பான விவகாரங்களில் தொடர்பு இருக்காது. இது முழுக்க முழுக்க நிர்வாக குழுக்களால் நடத்தப்படும்.

மகாமண்டலேஷ்வர்களை நியமிக்க ஒவ்வொரு அகராக்களுக்கும் தங்களில் சொந்த வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். ஜூனாவில் தற்போது இருக்கும் தலைவர் புதிய தலைவரை முன்மொழியலாம். முன்மொழியப்படும் நபர் கல்வி கற்றவராக இருந்தால் மிகவும் நல்லது. சிறப்பாக பேசும் திறன் கொண்டிருந்தால் அவர் நிறைய மக்களிடம் தன்னுடைய கருத்துகளை கொண்டு போய் சேர்க்க இயலும். சத்சங்கங்களை நடத்த இயலும். பக்தர்களுக்கு வழிகாட்ட இயலும். சாஸ்திரங்கள் குறித்து அவர் நன்கு அறிந்திருக்க வேண்டும் 200 பேர் கூடியிருக்கும் அவையில் பேச மன தைரியம் கொண்டிருக்க வேண்டும் என்று ஜூனா அகராவின் தலைவர் ப்ரேம் கிரி மகாராஜ் தெரிவித்துள்ளார்.

நிரஞ்சனி அமைப்பை பொறுத்தவரையில் மகாமண்டலேஷ்வர் கல்வி கற்றிருக்க வேண்டும். சாஸ்திரங்கள் குறித்த அறிவு இருக்க வேண்டும். சனாதன தர்மத்தை போதிக்க வேண்டும் . அவருக்கென சொந்தமாக ஆசிரமம் அல்லது கல்வி நிறுவனம் இருக்க வேண்டும். அவர்கள் எங்கள் பிரதிநிதியாக சனாதன தர்மத்தை பிரச்சாரம் செய்வார்கள் மற்றும் அகாராவின் பெயரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் அவர்களுக்கு அந்த பொறுப்புகள் வழங்கப்படுகிறது என்றூ ரவீந்திர பூரி தெரிவித்தார். 100க்கும் மேற்பட்ட மகாமண்டலேஷ்வர்கள் நிரஞ்சனி அகராவிற்காக நாடு முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.

அயோத்தியில் செயல்படும் நிர்மோஹி அகாராவுடன் தொடர்புடைய ஹனுமான் கர்ஹி அமைப்பின் மஹந்த் ராம்தாஸ், தனது அகாராவில் 1,000 க்கும் மேற்பட்ட மகாமண்டலேஸ்வரர்கள் உள்ளனர், அவர்களுக்கு “ஸ்ரீ மஹந்த்” என்ற பட்டம் வழங்கப்படுகிறது என்று கூறினார். கங்கையின் முக்கியத்துவம், பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், சனாதன தர்மத்தைப் பாதுகாத்தல், பசுக்களுக்கு சேவை செய்தல், பக்தர்களுக்கு தீக்ஷை வழங்குதல், கும்பமேளாக்களில் முகாம்கள் நடத்துதல், கோவில்களின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றுதல் போன்ற பணிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்று ராம் தாஸ் கூறினார்.

கும்பமேளாவில் பேஷ்வாய் ஊர்வலத்தில் மகாமண்டலேஷ்வர்கள் பங்கேற்று சத்சங்கம் செய்வதுண்டு. நாட்டில் எந்த ஒரு நீதிமன்றத்திலும் தண்டனை அடையாத நபரையே மகாமண்டலேஷ்வரராக தேர்வு செய்யப்படுகிறார் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dharma sansad and mahamandaleshwar who they are the role they play

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express