ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்களை உருவாக்கிட ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கையை 13-லிருந்து 26-ஆக அதிகரிக்கவுள்ளது.
வரைவு அறிவிப்பின்படி, புதிய மாவட்டங்களை உருவாக்கும் நடவடிக்கையானது, சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சியின் நலனுக்காக மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐடியா திடீரென வந்ததா?
இல்லை. 2019 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு, ஒய்எஸ்ஆர்சிபி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் புதிய மாவட்டங்களை உருவாக்குவேன் என்று முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்திருந்தார்.
ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதன் மூலம் நல்ல நிர்வாகம், சேவைகள், அரசு திட்டங்களை திறம்பட வழங்குவது உறுதி என்று முதல்வர் கூறியிருந்தார்.
கடந்த வாரம் குடியரசு தின விழாவில் பேசிய அம்மாநில ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிசந்தன், புதிய திட்டங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தெலுங்கு வருடப் பிறப்பு அன்று வெளியாகும் என தெரிவித்திருந்தார்.
புதியதாக உதயமாகவுள்ள மாவட்டங்கள் விவரம்
அரசாங்கத்தின் முன்மொழிவின்படி, ஸ்ரீகாகுளம், பிரகாசம் மற்றும் நெல்லூர் மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள 10 மாவட்டங்கள் தலா இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.
விசியநகரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு மான்யம் என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்படவுள்ளது.
விசாகப்பட்டினத்தில் இருந்து அனகாபள்ளி மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகிய பெயரில் இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து காக்கிநாடா மற்றும் கோனசீமா மாவட்டங்கள் உருவாகுகின்றன.
மேற்கு கோதாவரி மாவட்டத்திலிருந்து ஏலூர் வெளியேறி, புதிய மாவட்டம் ஆகிறது.
குண்டூர் மாவட்டத்தில் இருந்து பல்நாடு மற்றும் பாபட்லா உருவாகிறது.
கர்னூல் மாவட்டம் நந்தியால் வெளியேறி, புதிய மாவட்டம் ஆகிறது.
அனந்தபூரிலிருந்து ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் உதயமாகிறது.
சித்தூர் மாவட்டத்திலிருந்து ஸ்ரீ பாலாஜி புதிய மாவட்டம் ஆகிறது.
கடப்பா மாவட்டத்தில் இருந்து அன்னமையா, புதிய மாவட்டமாக மாறுகிறது.
கிருஷ்ணா மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, `என்.டி.ஆர் மாவட்டம்’ எனப் புதிய மாவட்டத்தை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டிருப்பது, TDP கட்சியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதேபோல், பெரிய நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் மன்யம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டங்கள் முற்றிலும் பழங்குடியின மாவட்டங்களாக இருக்கக்கூடும்
ஸ்ரீ பாலாஜி மாவட்டமானது, திருமலையில் உள்ள புகழ்பெற்ற வெங்கடேஸ்வரா கோயிலையும், கோயில் நகரமான திருப்பதியையும் உள்ளடக்கியது ஆகும்.
இந்த முன்மொழிவு ஏன் விமர்சிக்கப்படுகிறது?
மனித மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் சிறந்த நிர்வாகத்திற்காக சிறிய மாவட்டங்களை அமைப்பது கொள்கையளவில் நல்ல யோசனையாக இருந்தாலும், அரசாங்கத்தின் முன்மொழிவுகளில் சிக்கல்கள் உள்ளன என்று கூறுகின்றனர்.
மனித உரிமைகள் மன்றம் கூற்றுப்படி, மாவட்டப் பிரிவினையானது, அர்த்தமுள்ள பொது விவாதத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் சரியான சிந்தனையோ அல்லது ஜனநாயக ஆலோசனையோ இல்லை என கூறினர்.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், முன்மொழியப்பட்ட மாவட்ட தலைமையகத்திற்கும் மாநிலம் முழுவதும் உள்ள பல இடங்களுக்கும் இடையே கணிசமான இடைவெளியை ஏற்படுத்தும். சில இடங்களில், மாவட்டத் தலைமையகம் மிகவும் தொலைதூரமாகவும் அணுகுவதற்கு கடினமாகவும் இருக்கலாம்.
பயண தூரங்கள் அதிகமாக இருக்கும் போது புதிய மாவட்டங்களை உருவாக்குவதன் பயன் என்ன? இந்த முறையில் புதிய மாவட்டங்கள் அமைப்பது சிறப்பான நிர்வாகத்தின் குறிக்கோளுக்கு எந்த வகையிலும் பலன் தராது. நாடாளுமன்ற தொகுதிகள் அடிப்படையில் மாவட்டங்களை மறுசீரமைப்பது முடிவு குறைபாடுடையது என குறிப்பிட்டனர்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இஏஎஸ் சர்மா, பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளை இரண்டாகப் பிரிப்பது "பழங்குடியினரின் உரிமை மீறல்" என்று வாதிட்டார்.
திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?
இது ஒரு வரைவு முன்மொழிவு என்றும், மக்கள் தங்கள் ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒரு மாதத்திற்குள் அனுப்புமாறு மாநில அரசு கூறியுள்ளது. அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்த பிறகு எல்லைகளை மறுவடிவமைப்பது குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.