Dr AQ Khan Father of Pak bomb : 85ம் வயதில், கொரோனா தொற்று தொடர்பான உடல் நலக்கோளாறு காரணமாக இஸ்லாமாபாத்தில் உயிரிழந்தார் டாக்டர் அப்துல் காதீர் கான். பாகிஸ்தானின் அணு குண்டு தந்தை என்று போற்றப்பட்ட அவர், பாகிஸ்தான் நாடு அணு ஆயுதங்கள் தயாரிப்பதில் வெற்றி பெறுவதை தனிநபராக உறுதி செய்தவர் என்று போற்றப்பட்டவர். குறிப்பிடத்தக்க வகையில் இந்தியாவிற்கு நிகராக பாகிஸ்தானை அணு ஆயுத உற்பத்தி பிரிவில் சமமாக மாற்றியவர் அப்துல் காதீர் கான்.
தனிப்பட்ட முறையில், லாபத்திற்காக அணு ஆயுத நெட்வொர்க்கை நடத்தி பாகிஸ்தானிற்கு பெரும் அவமானத்தை அவர் கொண்டு வந்தாலும் கூட அவரின் பிம்பம் சிறிதும் இதனால் பாதிக்கப்படவில்லை. இவர் இந்தியாவின் போபாலில் 1936ம் ஆண்டு பிறந்தார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது அவருடைய குடும்பம் பாகிஸ்தானுக்கு சென்றது. ஒரு தேசபக்தராகவும், பாகிஸ்தானின் அணு ஆயுத வளங்களை கொள்ளையடிக்கவும், நாட்டை அவமதிக்கவும் சர்வதேச சதித்திட்டத்தால் பாதிக்கப்பட்டவராகவும் தான் அவர் பார்க்கப்படுகிறார்.
பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய விருதான நிஷான் – இ – இம்தியாஸ் (Order of Excellence) என்ற விருதையும், மோஹ்சின் – இ – பாகிஸ்தான் என்ற விருதையும் கொடுத்து அவரை கௌரவித்தது பாகிஸ்தான்.
ஆனால் பாகிஸ்தான் அணு சக்தி ஆணையத்தில் பணியாற்றிய அவருடைய சகாக்கள், அவருக்கான இத்தகைய அங்கீகாரத்தை கேள்வியுடன் நோக்குகிறார்கள். ஏன் என்றால் அவருடைய கல்வி தகுதி ஒரு உலோகவியல் பொறியாளராக மட்டுமே இருந்தது. மேலும் போக்ரானில் இந்தியா தனது சோதனைகளை மேற்கொண்ட பிறகு மே 1998 இல் பாகிஸ்தானின் அணுசக்தி சோதனையை மேற்கொண்ட குழுவில் அவர் இல்லை. ஆனாலும் அவர் சாகாய் தளத்தில் தான் இருந்தார் என்றும் குறிப்பிடுகின்றனர். ஆனாலும் அவருடைய உழைப்பு பாகிஸ்தானின் யுரேனியம் செறிவூட்டலை கண்டுபிடிக்க உதவியது.
அணு ஆயுத ரகசியங்களை திருடினாரா காதீர் கான்?
பிப்ரவரி மாதம் 2004ம் ஆண்டு, பாகிஸ்தான் முஷாரஃப் ஆட்சியின் கீழ் இருந்த போது, செண்ட்ரிஃபூஜெஸ் மற்றும் இதர பாகங்களை கான் லிபியா, வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்ததை ஆதாரத்துடன் வழங்கிய போது முஷாரஃப் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டார். கானை மிகவும் கடுமையாக கண்டித்தார் அவர்.
இதனை தொடர்ந்து தேசிய தொலைக்காட்சி ஒன்றில் கான், ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை அளித்தார். அதில் இந்த நடவடிக்கையை நீதியில் ஏற்பட்ட பிழை என்று கூறினார். உள்நாட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் தீவிர சர்வதேச ஆய்வுக்கு இடையே சமநிலைப்படுத்தி, முஷாரப் அவரை மன்னித்தார், ஆனால் அவரை வீட்டுக் காவலில் வைத்தார். ஆனாலும் கூட பாகிஸ்தான் தெருக்களில் இன்றும் கான் ஒரு பெரிய ஹீரோ தான். கடைகள், சந்தைகள், லாரிகள் மற்றும் ஆட்டோக்களின் பின்பக்கங்கள் என்று அனைத்து இடங்களிலும் கான் தான். கான் மீதான குற்றச்சாட்டுகள் பாகிஸ்தானை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆனால் ஆனால் கான் தனது அணுசக்தி தொழில்நுட்ப வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே மேற்கத்திய உளவுத்துறை கண்காணிப்பில் இருந்தார்.
1975ம் ஆண்டு இந்தியா தன்னுடைய முதல் அணு ஆயுதம் தொடர்பான சோதனையை நடத்தி ஒரு வருடம் ஆன போது, கான் ஹோலாந்தில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையம் ஒன்றில் ஜெர்மன் – டச்சு மொழி பெயர்ப்பாளராக பணியாற்றி வந்தார். பாகிஸ்தான் சொந்தமாக அணு ஆயுத திட்டம் ஒன்றை வைத்திருக்க வேண்டும் என்று விரும்பிய பிரதமர் ஜுல்ஃபிக்கர் அலி பூட்டோவிற்கு தன்னுடைய சேவையை வழங்கினார் கான்.
செண்ட்ரிஃபூஜெஸ் மற்றும் இதர பாகங்களை தயாரிக்கும் ப்ளூப்ரிண்ட்டுகளை அவர் திருடுகிறார் என்று டச்சு நிறுவனம் சந்தேகம் அடைந்தது. ஆனால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே அவர் பாகிஸ்தான் திரும்பிவிட்டார். 1976ம் ஆண்டு அவர் பாகிஸ்தான் அணு சக்தி ஆணையத்தில் இணைந்தார். அவர் ஒரு திருடன் என்று நெதர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
2001ம் ஆண்டு முஷாரஃபால் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார் கான். மேலும் கான் ஆராய்ச்சி ஆய்வகங்களின் தலைவரின் தலைமை ஆலோசகர் என்ற ஆறுதல் பட்டத்தை வழங்கினார். முஷாரஃப் கானின் செயல்பாடுகளில் சந்தேகம் காரணமாக இந்த நடவடிக்கையை எடுத்தார். அன்று முதல் கானுக்கு இறங்கு முகம் தான். உண்மையில் 1981ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் அணு ஆயுத முயற்சிகளை அவர் ஆளுமைப்படுத்தினார், அப்போது ராணுவ ஆட்சியாளராக இருந்த ஜெனரல் ஜியா-உல் ஹக், நாட்டில் இருக்கும் ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கு கானின் பெயரை சூட்டினார். பாகிஸ்தானின் மற்ற அணு விஞ்ஞானிகளை விட அவர் ஒரு பொது ஆளுமையாகவே வாழ்ந்து வந்தார்.
பாகிஸ்தானின் ரகசிய வெடிகுண்டு
பாகிஸ்தான் தன்னுடைய அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்வதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே அணு ஆயுதங்களை வைத்திருந்தது என்று கான் தான் முதலில் கூறினார். 1987ம் ஆண்டு மூத்த இந்திய பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் உடனான நேர்காணலில் பேசிய அவர், அமெரிக்காவுக்கு இது தெரியும். அணு ஆயுதங்களை நாங்கள் வைத்திருக்கின்றோம் என்றும் சி.ஐ.ஏ. கூறியது உண்மை தான். இது தொடர்பாக சில வெளிநாட்டு பத்திரிக்கைகளுக்கு சந்தேகம் இருந்ததும் உண்மை தான். பாகிஸ்தானால் அப்படி ஒரு குண்டை செய்ய முடியாது என்று கூறினார்கள். என்னுடைய திறன்களை அவர்கள் சோதித்தார்கள். ஆனால் எங்களிடம் இருந்தது அவர்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஏன் தன்னுடைய இத்தகைய சாதனையை தெரிவிக்கவில்லை என்று கேட்ட போது, அது அவசியமா? அமெரிக்கா வழங்கும் அனைத்து உதவிகளையும் நிறுத்துவதாக ஏற்கனவே அச்சுறுத்தி வந்தது. பாகிஸ்தான் வேண்டுமென்றே கசியவிட்ட ஒரு தகவலாக பார்த்த டெல்லி தன்னுடைய அணு ஆயுத திட்டத்தை விரிவுபடுத்தியது.
ஆகஸ்ட் 2008 ல் அதிபர் முஷாரப் பதவி விலகிய பிறகு, கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் தன்னை விடுவிக்குமாறு மனு செய்தார். அவரை விடுவிக்க புதிய PPP அரசாங்கம் ஏற்கனவே பெரும் அழுத்தத்திற்கு உள்ளானது. 2009 ஆம் ஆண்டில், நீதிமன்றம் அவரை சுதந்திரமான குடிமனாக அறிவித்தது. ஆனால், அவருக்கும் அரசுக்கும் இடையே போடப்பட்ட ரகசிய ஒப்பந்தத்தை உடைத்த பிறகே சாத்தியமானது. விவரங்களை பகிரங்கப்படுத்த நீதிமன்றம் இருதரப்பையும் தடை செய்தது. இந்த ஒப்பந்தத்தின் விவரங்கள் 2011 இல் விக்கிலீக்ஸால் கசிந்த அமெரிக்க இராஜதந்திர கேபிளில் இருந்தது. இஸ்லமாபாத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றால் அதிகாரிகளிடம் முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும், வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது, அவருடைய வீட்டிற்கு வரும் நபர்களின் பெயர்களை ஒப்படைத்தல் போன்ற நிபந்தனைகளின் பெயரில் தான் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கேபிளின் படி, அப்போதைய உள்துறை செயலாளர் கமல் ஷா, கானை பாகிஸ்தான் அரசாங்கம் இறுக்கமாக வைத்திருக்க தேவையான அனைத்து அதிகாரங்களையும் கொண்டுள்ளது என்று அமெரிக்க தூதருக்கு உறுதி அளித்தார். சட்டத்திற்கு புறம்பான வீட்டுக்காவலுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை நாடு அளித்துள்ளது என்று கூறி நீதிமன்ற உத்தரவை பாதுகாத்தார் ஷா.
வீட்டுக்காவலில் இருந்து விடுதலை அளித்த பிறகு கான் இஸ்லாமாபாத்தின் E-7 செக்டாரில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே ஒரு எதிர்பாராத செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். பிறகு பாகிஸ்தான் நாளிதழான தி நியூஸில் கட்டுரை எழுதினார். 2012ம் ஆண்டு தெஹ்ரீக்-இ-தெஹாஃபுஸ்-இ-பாகிஸ்தான் என்ற கட்சி ஒன்றையும் துவங்கினார், அவர் புகழ்பெற்றவராக இருந்த போதும் அடுத்த ஆண்டு அந்த கட்சி காணாமல் போனது.
இறுதி ஆண்டுகள்
2019ம் ஆண்டு அடிப்படை உரிமைகள் அடிப்படையில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். பாகிஸ்தான் அரசு அவரை வெளிநாடுகளுக்கு பயணிக்க அனுமதி மறுக்கிறது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் கானின் வழக்கறிஞர், நாடு கானை அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்க்கவும் கூட அனுமதிக்க மறுக்கிறது என்று கூறினார். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பட்டியலை பெற்று இந்த விவகாரத்தை உடனே சரி செய்யுங்கள் என்றார். மேலும் கான் இந்நாட்டின் உயர் விருதை பெற்றவர். அவரை முறையாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகும் இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வந்தது. அவர் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார். குணம் அடைந்து அவர் வீடு திரும்பிய போதும், அவரது நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மரணம் அடைந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil