தேசிய அளவில் அதிக அளவில் பள்ளி மாணவர் இடைநிற்றலில், அசாம் மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக மக்களவையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் குறித்த மாநில அளவிலான பட்டியலை தயாரித்துள்ளது. அதை மக்களவையில், கடந்த பிப்ரவரி 5ம் தேதி தாக்கல் செய்துள்ளது. இதில், தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மாணவர்கள், மாணவியர்கள் என எல்லா பிரிவிலும் அசாம் மாநிலம் தான் முதன்மை இடத்தைப்பிடித்துள்ளது.
2017 -18ம் கல்வியாண்டில், தொடக்கப்பள்ளிகள் பிரிவில் பள்ளி மாணவர் இடைநிற்றலில் அசாம் 10.1 சதவீத்துடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் அருணாச்சல பிரதேசம் (8.1%), மிசோராம் (8%), உத்தரபிரதேசம் (8%) மற்றும் தமிழ்நாடு ( 5.9 %) உள்ளன.
உயர்நிலைப்பள்ளிகள் பிரிவில், பள்ளி மாணவர் இடைநிற்றலில் அசாம் 33.7 சதவீதத்துடன் முதலிடத்திலும், பீகார் ( 32%), ஒடிசா (28.3%), திரிபுரா (27.2%) மற்றும் கர்நாடகா (24.3 %) உள்ளன.
தொடக்கப்பள்ளிகள்
மாணவர்கள் பிரிவில் அசாம் 11.2 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் அருணாச்சல பிரதேசம் ( 10%), மிசோராம் (8.6%), உத்தரபிரதேசம் (7.2 %) மற்றும் ஒடிசா (6 சதவீதம்) உள்ளன.
மாணவிகள் பிரிவில் 8.9 சதவீதத்துடன் அசாம் முதலிடத்தில் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் மிசோராம் (7.4 %), உத்தரபிரதேசம் (7.1 சதவீதம்), அருணாச்சலபிரதேசம் (6.1 சதவீதம் மற்றும் தமிழ்நாடு ( 6 சதவீதம்) உள்ளன.
உயர்நிலைப்பள்ளிகள்
மாணவர்கள் பிரிவில் 32.1 சதவீதத்துடன் அசாம் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பீகார் (30.3 %), ஒடிசா (28.7%), திரிபுரா (27.1 %) மற்றும் கர்நாடகா (26.4%) உள்ளன.
மாணவிகள் பிரிவில் 35.2 சதவீதத்துடன் அசாம் முதலிடத்தில் உள்ளது. பீகார் (33.7 %), ஒடிசா (27.8 %), திரிபுரா (27.3 %) மற்றும் மத்தியபிரதேசம் (24.2%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பள்ளி மாணவர் இடைநிற்றலுக்கு வறுமை மற்றும் பொருளாதார காரணங்கள், உடல்நலம் இன்மை, குழந்தைகளை மற்ற வேலைகளில் பணியமர்த்துதல் உள்ளிட்டவைகள் காரணங்களாக சொல்லப்பட்டு வருகின்றன.