செப்டம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் இருந்து துபாயில் தரை இறங்கிய விமானத்தில், பயணி ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 15 நாட்களுக்கு துபாயில் தரை இறங்க தடை விதிக்கப்படுவதாக அந்நாடு தெரிவித்தது.
இதே காரணத்திற்காக ஹாங்காங் அரசாங்கம் கடந்த மாதம் ஏர் இந்தியா விமானத்திற்கு தடை விதித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடை காலத்தில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்கள் வந்தே பாரத் திட்டம் மூலம் சிறப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாடு விமான நிறுவனங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வரை வெளியுறவுத்துறை துறை அமைச்சகம் அளித்த தகவல் படி, இந்தியர்களை தாய்நாடு அழைத்து வர 5,817 விமானங்கள் இயக்கப்பட்டன.
எப்போது நிறுத்தப்பட்டன?
செப்டம்பர் 18 வெள்ளிக்கிழமை முதல் அக்டோபர் 2 என மொத்தம் 15 நாட்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் அனைத்து விமான நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
விமான சேவைகளை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், நோய்த் தொற்று கண்டறியப்பட்ட பயணியின் மருத்துவ செலவுகள்/ மற்றும் பிற பயணிகள் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கவைக்கப்பட்ட செலவுகள் போன்ற அனைத்தையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்ள துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் உத்தரவிட்டது.
முன்பதிவு செய்த பயணிகளின் நிலை?
தடை விதிக்கப்பட்டுள்ளதால், தனது விமானங்களை அடுத்த 15 நாட்களில் துபாய்க்கு செல்லத் திட்டமிடப் பட்டிருந்த அனைத்து விமானங்களும் ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்தது.
"துபாய் விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவையை இயக்க, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க விரிவான வழிமுறைகளை சமர்ப்பிக்குமாறு கோரப்படுவீர்கள்," என்று துபாய் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தனது அறிவிப்பில் தெரிவித்தது.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்