scorecardresearch

Explained : பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் இந்தியா ஏன் சேரவில்லை?

நரேந்திர மோடி : காந்தியின் வார்த்தையும்,  எனது சொந்த மனசாட்சியும்  இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் சேர என்னை அனுமதிக்கவில்லை

Explained : பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் இந்தியா ஏன் சேரவில்லை?
rcep,rcep 2019,rcep meeting 2019 rcep benefits,rcep summit 2019,rcep news

குறிப்பிடத்தக்க நிலுவையில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (ஆர்.சி.இ.பி.) கையெழுத்திடுவதை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட மற்ற 15 நாடுகளும் 2020 ம் ஆண்டில், இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயார இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு  ஒப்பந்தம் (RCEP) என்பது 16 நாடுகளுக்கு இடையிலுள்ள  ஒரு வர்த்தக ஒப்பந்தமாகும். அதில் 10 ஆசியான் அமைப்பு  உறுப்பினர்களும், இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, கொரியா, ஜப்பான், நியூசிலாந்து போன்ற இதர 6 நாடுகளும் இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.

ஆசியான் அமைப்பு உறுப்பினர்கள் :  புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம். இந்தியா போன்ற இதர ஆறு நாடுகள் ஆசியான் அமைப்புடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் 16 நாடுகளுக்கு இடையே  ஒரு “ஒருங்கிணைந்த சந்தையை” உருவாக்குவது. அதாவாது, ஒவ்வொரு நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களும், சேவைகளும் தங்கு தடையுமின்றி மற்ற 15 நாடுகளிலும்  கிடைக்க வழி செய்வது.

இந்தக் கூட்டு ஒப்பந்தம், உலகளவில் “மிகப்பெரிய” பிராந்திய வர்த்தக ஒப்பந்தமாக கருதப்படுகிறது . உலக மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமான மக்கள் இந்த 16 நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். ஒட்டுமொத்த  உலக ஏற்றுமதியில் கால்வாசி பங்கு,  இந்த நாடுகளின் மூலம் தான் நடைபெறுகின்றது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% (மதிப்பு) இந்த 16 நாடுகளின் பங்களிப்பாகும்.

2019 நவம்பருக்குள் இந்தக் கூட்டு ஒப்பந்தத்தின் விவரங்களை திர்மானித்து விட வேண்டும் என்ற இலக்கோடு, கடந்த 2013 ம் ஆண்டு முதலே இந்த 16 நாடுகளும் பேச்சுவார்த்தைகள்  நடத்திவந்தன.

 

என்ன பிரச்சினை?

இந்தியாவைத் தவிர அனைத்து நாடுகளும், தற்போது முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள இருபது  அத்தியாயங்களையும், சுதந்திரமான சந்தை அணுகல் பற்றிய  சிக்கல்களையும் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்துவிட்டன.   இதனால், இந்த நாடுகள் 2020ம் ஆண்டில் உடன்படிக்கைக்குத் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் “அடிப்படையான பிரச்சினைகள், தீர்க்கப்படாமல் இருப்பதால்” இந்தியா நேற்று இந்த ஒப்பந்தத்தில் இருந்து  பின்வாங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், ” நாடுகளுக்கிடையே சிறப்பான ஒருகிணைப்பு, தடையற்ற சமமான வர்த்தகம் என்ற அடிப்படை கோட்பாடோடு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கூட்டு ஒப்பந்தம் தற்போது அந்த எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை”  என்று கூறினார்

அனைத்து இந்தியர்களும் பெறக்கூடிய நலன்களையும்  இந்தக் கூட்டு  ஒப்பந்தத்தோடு நான் அளவிடும்போது, எனக்கு எந்த சாதகமான பதிலும்  கிடைக்கவில்லை. எனவே, காந்திஜியின் வார்த்தையும், எனது சொந்த மனசாட்சியும்  என்னை இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கவில்லை, ”என்று அவர் திங்களன்று பாங்காக்கில் நடந்த 3 வது விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்த உச்சி மாநாட்டில் கூறினார்.

 

இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ : 

தற்போதுள்ள ஒப்பந்தத்தின் உள்ள சிக்கல்கள் என்ன ?

தற்போதுள்ள ஒப்ந்தத்தின் விளைவாக, சீனாவில் இருந்து மிகவும் மலிவு விலையில் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் என்ற பயம்  இந்தியாவிடம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சீன பொருட்கள் இறக்குமதி ஆகும்போது, உடனடியாக அந்த பொருட்களின் மீது இறக்குமதி வரி விதிக்கப்படும் செயல்முறையை இந்த ஒப்பந்தத்திற்குள் கொண்டுவரவேண்டும்  என்ற இந்தியாவின் கோரிக்கை இடம் பெற வில்லை.

இந்தியா, சீனாவிடம் இருந்து சந்தை அணுகல், மற்றும்  வரியில்லாத தடைகள் போன்றவைகளில் அதிக உத்திரவாதத்தை எதிர்பார்க்கிறது. சமீப காலமாகவே,  வரி இல்லாமல் மற்றத் தடைகளின் மூலம் இந்தியாவின் ஏற்றுமதியை சீனா வளரவிடவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கம்பெனிகள், சிவில் சமூகம் மற்றும் அரசியல் எதிர்க்கட்சியின் கவலைகள் என்ன?

கூட்டு ஒப்பந்தத்தில் இருக்கும் நாடுகளில் இருந்து மலிவான பொருட்கள் காரணமாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி படுத்துவிடும், என்று இந்தியா தொழில் முதலாளிகள்  வாதிட்டனர். உதாரணமாக, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இருந்து இருக்குமது செய்யும் பால் மூலமாக இந்தியாவின் பால் உற்பத்தியில் ஈடுபடும் மக்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .  எஃகு மற்றும் ஜவுளி துறைகளும் இதே கதிதான்.

சிவில் சமூக அமைப்புகளும், வர்த்தக வல்லுநர்களும் இந்தக் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் பெறக்கூடிய லாபங்கள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இடதுசாரிக் கட்சிகள், ஆர்.எஸ்.எஸ்ஸின் சுதேசி ஜாக்ரான் மன்ச் போன்றோரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தாலும், இந்தக் கூட்டு ஒப்பந்தத்தை தொடங்கிய  முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பல தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை தற்போது  தவிர்க்கும்படி அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டிருக்கின்றனர் .

பணமதிப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் போன்ற நடவடிக்கைகள் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பிறகு, இந்த கூட்டு ஒப்பந்த நடவடிக்கையில் ஈடுபடுவது தற்கொலைக்கு சமமானது என்று  காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சனிக்கிழமை இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் சேருவது நாட்டின் பொருளாதாரத்திற்கு “பெரிய அடியை” ஏற்படுத்தும் என்று கூறினார்.  இந்த நடவடிக்கை “விவசாயிகள், கடைக்காரர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சொல்லப்படாத கஷ்டங்களை ஏற்படுத்தும்” என்று சோனியா காந்தி விவரித்தார்.

வரும் காலம்: 

இந்தியாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளும் பேச்சுவார்த்தை விதிமுறைகளில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக் கொண்டதால், அவர்கள் இந்தியாவை நிர்பந்திக்க  முயற்சிப்பார்கள். அவர்களுது முயற்சிகள் பயனளிக்கிறதா    என்பதை பொருத்து தான் பார்க்க வேண்டும்.

அனைத்து பங்கேற்பு நாடுகளும் இந்த நிலுவையில் உள்ள சிக்கல்களை பரஸ்பர திருப்திகரமான முறையில் தீர்க்க ஒன்றிணைந்து செயல்படுவார்கள். இவர்கள் பேசித் தீர்க்கும் விதத்தில் தான் இந்தியாவின் எதிர் காலம் இருக்கும்”  என்று பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் உறுப்பினர்களின் கூட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Due to significant outstanding issues india will not joint rcep agreement