Rounak Bagchi
Earths first landmass emerged in Singhbhum : 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் பெருங்கடல்களில் இருந்து தோன்றின என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தை மறுக்கும் விதமாக புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. 700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இது உருவாகியுள்ளது என்று கூறும் அந்த ஆராய்ச்சியில் சுமார் 3.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக தோன்றிய நிலபரப்பு ஜார்கண்ட் மாநிலத்தின் சிங்பம்மாக இருக்காலம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு, PNAS இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்பம்மின் மணற்கற்கள்
3.2 பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான நதி கால்வாய்கள், அலை சமவெளிகள் மற்றும் கடற்கரைகள் ஆகியவற்றின் புவியியல் கையொப்பங்களுடன் கூடிய மணற்கற்களை சிங்பம்மில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது காற்றில் வெளிப்பட்ட ஆரம்ப புவி மேலோட்டைக் குறிக்கிறது.
முதல் நிலப்பரப்பு எப்போது உருவானது என்பதற்கான பதில் இந்த வண்டல் மண் பாறைகளில் இருக்கிறது என்று இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் ப்ரியதர்ஷி சௌத்ரி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
மணற்கற்கள் என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட வகை வண்டல் பாறைகளை நாங்கள் கண்டுபிடித்தோம். அதன்பிறகு, அவற்றின் வயது மற்றும் எப்படியான ஒரு சூழலில் அது கண்டுபிடிக்கப்பட்டது என்பதை நாங்கள் ஆராய துவங்கினோம். சிறிய தாதுக்களின் யுரேனியம் மற்றும் ஈய உள்ளடக்கங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் வயதைக் கண்டறிந்தோம். இந்த பாறைகள் 3.1 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. பழைய ஆறுகள், கடற்கரைகள் மற்றும் ஆழமற்ற கடல்களால் உருவாக்கப்பட்டுள்ளன என்று கண்டறிந்தோம். இப்பகுதிகள் அனைத்தும் நிலப்பரப்பாக இருந்திருந்தால் மட்டுமே இந்த நீர் நிலைகள் இருந்திருக்க முடியும். எனவே, 3.1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிங்பம் பகுதி கடலுக்கு மேலே இருந்தது என்று நாங்கள் ஊகித்தோம் என்று சௌத்ரி கூறினார். ஆரம்பகால கண்ட நிலத்தின் திட்டுகள் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலும் உள்ளன என்றும் சௌத்ரி கூறினார்.
ஆராய்ச்சி
சிங்பம் பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் புவி மேலோட்டை உருவாக்கிய கிரானைட் கற்களை ஆய்வு செய்தனர். இந்த கிரானைட்கள் 3.5 முதல் 3.1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்குள் 35 முதல் 45 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் போது உருவானவை. அனைத்து மாக்மாவும் ஒரு தடிமனான புவி மேலோடு உருவாகும் வரை நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளாக தொடர்ந்து அணைந்தும், வெடித்தும் வந்துள்ளது இந்த எரிமலை. தடிமன் மற்றும் குறைந்த அடர்த்தி கொண்டிருந்த காரணத்தால் இவை பெருங்கடலின் மேலடுக்கில் இருந்து மிதந்து கடல்மட்டத்திற்கு மேலே உயர்ந்துள்ளது என்றும் சௌத்ரி கூறினார். கண்டங்களின் ஆரம்ப தோற்றம் ஒளிச்சேர்க்கை உயிரினங்களின் பெருக்கத்திற்கு பங்களித்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர், இது வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும். நிலம் உருவாக்கப்பட்டால் உடனே ஆழமற்ற கடல்களும் உருவாக்கப்பட்டுவிடுகிறது என்றும் சௌத்ரி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.