தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு அரசியலமைப்பு எந்த குறிப்பிட்ட சட்டமன்ற செயல்முறையையும் வகுக்கவில்லை. அதனால், இந்த அதிகாரிகளை நியமிப்பதில் மத்திய அரசு சுதந்திரமாக உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: ECI members to have same status as SC judges: Why Govt has chosen to make U-turn on proposed Bill
இந்திய தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களின் பணி நிபந்தனைகளில் முன்மொழியப்பட்ட ஒரு முக்கிய மாற்றத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது ராஜ்யசபாவில் இருக்கும் ஒரு மசோதா, உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி அந்தஸ்தில் இருந்து கேபினட் செயலர் பதவிக்கு தேர்தல் ஆணைய உறுப்பினர்களின் அந்தஸ்தை தாழ்த்துகிறது என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா ஆகஸ்ட் 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் மழைக்காலக் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது இப்போது செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) பரிசீலனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களின் நிலையை 'மீட்டெடுக்கும்' முக்கிய திருத்தங்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த மசோதா எதைப் பற்றியது? என்ன முன்மொழிந்தது?
இந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தலைமைத் தேர்தல் ஆணையர் (சி.இ.சி) மற்றும் தேர்தல் ஆணையர்களை (இ.சி) பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழுவால் நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்க்களை நியமிப்பதற்கு அரசியலமைப்பு எந்த குறிப்பிட்ட சட்டமன்ற செயல்முறையையும் வகுக்கவில்லை. அதனால், இந்த அதிகாரிகளை நியமிப்பதில் மத்திய அரசு சுதந்திரமாக உள்ளது. பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் இந்த நியமனங்களை செய்கிறார்.
இருப்பினும், உச்ச நீதிமன்றம் தனது உத்தரவு “நாடாளுமன்றத்தால் உருவாக்கப்படும் எந்தவொரு சட்டத்திற்கும் உட்பட்டது” என்று தெளிவுபடுத்தியது. இதன் விளைவாக, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலம்) மசோதா, 2023-ஐ அரசாங்கம் கொண்டு வந்தது. இது பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை நீதிபதிக்கு பதிலாக, பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட கேபினட் அமைச்சர் அடங்கிய குழுவை முன்மொழிந்தது.
இந்த மசோதா தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு கேபினட் செயலாளரின் அதே சம்பளம், சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க முன்மொழிகிறது. இந்த மசோதா, தேர்தல் ஆணையம் (தேர்தல் ஆணையர்களின் பணி நிபந்தனைகள் மற்றும் வேலை பரிவர்த்தனை) சட்டம், 1991-க்கு மாற்றாக இருக்கும், இதன் கீழ் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியின் சம்பளம் உள்ளது.
இந்த மசோதா ஏன் விமர்சிக்கப்பட்டது?
சில எதிர்க்கட்சித் தலைவர்கள், தேர்வுக் குழுவில் உள்ள தலைமை நீதிபதிக்கு பதிலாக ஒரு கேபினட் அமைச்சரை நியமிக்கும் மசோதாவை விமர்சித்தனர் - இதன் பொருள், வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் அரசாங்கம் எல்லா நேரங்களிலும் பெரும்பான்மையைப் பெறும்.
ஆனால் தற்போதைய மற்றும் முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய பிரச்சினை இந்திய தேர்தல் ஆணையத்தின் நிலையை வெளிப்படையாகத் தரமிறக்குவதாகும்.
உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் கேபினட் செயலாளரின் சம்பளம் ஒரே மாதிரியாக இருந்தாலும், சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளில் வேறுபாடுகள் உள்ளன.
எவ்வாறாயினும், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்களின் குழு, சலுகைகள் மாற்றத்தின் காரணமாக தரமிறக்கப்படுவதை ஆட்சேபித்து அரசாங்கத்திற்கு கடிதம் எழுதுவதற்கு மாறாக அந்தஸ்து மாற்றத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து கடிதம் எழுதினர்.
இந்திய தேர்தல் ஆணையம் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தஸ்தைக் கொண்டுள்ளது என்றும் மூத்த அதிகாரிகளையும் அமைச்சர்களையும் கூட வரவழைக்க முடியும் என்றும் அவர்கள் வாதிட்டனர். இந்த அந்தஸ்தை அரசு அதிகாரி என்று மாற்றினால், அது அவர்களின் திறனை பாதிக்கும் என்று அவர்கள் வாதிட்டனர்.
இப்போது என்ன நடக்கிறது?
மார்ச் மாத உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தில் எந்தப் பணியிடமும் காலியாகாததால், உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட வழிமுறையின் மூலம் நியமனங்கள் எதுவும் செய்யப்படவில்லை. தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஓய்வு பெறும்போது, பிப்ரவரி 2024-ல் அடுத்த காலியிடம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொண்டு வரவிருக்கும் திருத்தங்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு சமமான அந்தஸ்தை மீட்டெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரால் முன்மொழியப்பட்ட திருத்தங்களின்படி, தேர்தல் ஆணையத்தின் அந்தஸ்து, உச்ச நீதிமன்ற நீதிபதியின் அந்தஸ்தைப் போலவே, அதே சம்பளம், அகவிலைப்படி மற்றும் விடுப்பு பணமதிப்பு விதிகளுடன் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“