Advertisment

மஹாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே கட்சித் தாவல் தடைச் சட்டம் பாய்வதில் இருந்து தப்பிக்கலாம் ஏன்?

கட்சித் தாவல் தடுப்புச் சட்டம், ஒரு கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு தாவும் தனி எம்.பி/எம்.எல்.ஏ.க்களை தண்டிக்கும். ஆனால், கட்சியில் ஒரு அணியாக மாறுவது என்றால் என்ன? தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்கு? கட்சித் தாவல் தடைச் சட்டம் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்கிறதா?

author-image
WebDesk
New Update
maharashtra shiv sena crisis, maharashtra crisis, shiv sena, eknath shinde, மஹாராஷ்டிரா, ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தாவல் தடைச் சட்டம், anti defection law explained, Tamil indian express

கட்சித் தாவல் தடுப்புச் சட்டம், ஒரு கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு தாவும் தனி எம்.பி/எம்.எல்.ஏ.க்களை தண்டிக்கும். ஆனால், கட்சியில் ஒரு அணியாக மாறுவது என்றால் என்ன? தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்கு? கட்சித் தாவல் தடைச் சட்டம் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்கிறதா?

Advertisment

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான அதிருப்தி தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, தன்னுடன் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதிருப்தி அணியில் 55 உறுப்பினர்களைக் கொண்ட சிவசேனா சட்டமன்றக் கட்சியின் 33 எம்எல்ஏக்களும், மாநில அரசுக்கு ஆதரவளிக்கும் 7 சுயேட்சைகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பின்படி, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை பெறாமல் தப்பிப்பதற்கு, அதிருப்தி அணியில் அந்த கட்சியின் மொத்த எம்.எல்.ஏ.க்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுபினர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

287 உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஏக்நாத் ஷிண்டேவின் அதிருப்திக்கு முன், சிவசேனாவுக்கு 55 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 53 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் 44 எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணியின் எம்.எல்.ஏ.க்களின் பலத்தை 152 ஆக உயர்த்தியுள்ளனர்.

கட்சித் தாவல் தடைச் சட்டம் என்றால் என்ன, அதன் நோக்கம் என்ன?

கட்சித் தாவல் தடுப்புச் சட்டம், ஒரு கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு தாவும் தனி எம்.பி/எம்.எல்.ஏ.க்களை தண்டிக்கும். இது எம்.பி/எம்.எல்.ஏ.க்கள் அணி வேறு அரசியல் கட்சியில் சேர (அதாவது இணைவதற்கு) கட்சித் மாறியதற்காக தண்டனையை நடைமுறைப்படுத்தாமல் இருக்க அனுமதிக்கிறது. மேலும், கட்சியில் இருந்து விலகும் சட்டமன்ற உறுப்பினர்களை ஊக்குவிப்பதற்காகவோ அல்லது கட்சி மாறியவர்களை ஏற்றுக்கொண்டதற்காகவோ இந்த சட்டம் அரசியல் அரசியல் கட்சிகளுக்கு அபராதம் விதிக்காது.

1985-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, நாடாளுமன்றம் இந்த விதிகளை அரசியலமைப்பில் பத்தாவது அட்டவணையில் சேர்த்தது.

கட்சித் தாவலில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களை தடுப்பதன் மூலம் அரசாங்கங்களில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதே கட்சி மாறுதல் தடுப்புச் சட்டத்தின் நோக்கமாகும். 1967 பொதுத் தேர்தலுக்குப் பிறகு கட்சித் தாவிய எம்.எல்.ஏ.க்களால் பல மாநில அரசாங்கங்கள் கவிழ்ந்ததின் எதிரொலியாக இந்த சட்டம் அமைந்தது.

கட்சியின் ஒரு அணியாக மாறுவது என்றால் என்ன? தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்கு? இந்த சட்டம் மூன்று வகையான காட்சிகளை உள்ளடக்கியுள்ளது.

ஒன்று, ஒரு அரசியல் கட்சியின் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அந்தக் கட்சியின் உறுப்பினர் பதவியை தானாக முன்வந்து கைவிடுவது அல்லது கட்சியின் விருப்பத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களிப்பது.

பத்தாவது அட்டவணையில், கட்சியின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 1/3-க்கும் குறைவானவர்கள் பிரிந்தால் அல்லது ஒரு சட்டமன்றக் கட்சியின் 2/3-க்கும் குறைவான எம்.எல்.ஏ.க்கள் வேறு அரசியல் கட்சியுடன் இணைந்தால், அந்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடு இருந்தது.

2003 இல் செய்யப்பட்ட திருத்தத்தைத் தொடர்ந்து, மூன்றில் ஒரு பங்குக்கு குறைவான எம்.எல்.ஏ.க்கள் பிரிந்தால் தகுதி நீக்கம் செய்வதற்கான பிரிவு மட்டும் நீக்கப்பட்டது.

சுயேட்சை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி/எம்.எல்.ஏ. பின்னர் ஒரு கட்சியில் சேரும்போது இரண்டாவது சூழ்நிலை எழுகிறது.

மூன்றாவது சூழ்நிலை நியமன சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புடையது. நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் விஷயத்தில், அவர்கள் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் ஒரு அரசியல் கட்சியில் சேரலாம், அதற்கு பிறகு சேர முடியாது என்று இந்த சட்டம் குறிப்பிடுகிறது.

இந்தச் சூழ்நிலைகளில் ஏதேனும் சட்டத்தை மீறினால், ஒரு சட்டமன்ற உறுப்பினர் கட்சித் தாவலில் ஈடுபட்டதற்காக தண்டிக்கப்படுவார். சட்டமன்றத்தின் தலைமை அதிகாரம் மிக்கவர்கள் (சபாநாயகர், தலைவர்) இது போன்ற வழக்குகளில் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவர்களாக உள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை அதிகாரம் உள்ள சபாநாயகர் முடிவுகளை உயர் நீதித்துறையில் எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கட்சித் தாவல் தடைச் சட்டம் அரசாங்கங்களின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ததா என்றால்
முற்றிலும் இல்லை.

அரசியல் கட்சிகள், எம்.எல்.ஏ.க்களை தங்களுடைய விசுவாசத்தை மாற்றிக்கொள்வதையோ அல்லது போட்டிக் கட்சி தொடங்குவதையோ அல்லது தங்கள் கட்சியின் எதிர் பிரிவினரால் இழுக்கப்படுவதையோ தடுக்க, அவர்களை அடிக்கடி ரிசார்ட்டுகளில் தனிமைப்படுத்துகின்றன. சமீபத்திய உதாரணங்கள் ராஜஸ்தான் (2020), மகாராஷ்டிரா (2019), கர்நாடகா (2019 மற்றும் 2018), மற்றும் தமிழ்நாடு (2017).

தற்போது மகாராஷ்டிரா விவகாரத்தில், ஏக்நாத் ஷிண்டேவின் எம்.எல்.ஏ.க்கள் முதலில் குஜராத் மற்றும் அஸ்ஸாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இரு மாநிலங்களும் பாஜக ஆளும் மாநிலங்கள் ஆகும்.

அரசியல் கட்சிகள் கட்சித் தாவல் தடை சட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவும் முடிகிறது.

2019 ஆம் ஆண்டு கோவாவில், 15 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 10 பேர் தங்கள் சட்டமன்றக் கட்சியை பாஜகவுடன் இணைத்தனர். அதே ஆண்டில், ராஜஸ்தானில், 6 பி.எஸ்.பி எம்எல்ஏக்கள் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தனர். சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் 15 எம்.எல்.ஏ.க்களில் 10 பேர் பாஜகவில் இணைந்தனர்.

இந்த சட்டத்தை மேம்படுத்த ஏதேனும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதா?

இந்த சட்டம் பற்றி கருத்து கூறுபவர்கள் சிலர், இந்த சட்டம் தோல்வியுற்றதாகக் கூறி அதை நீக்குவதற்கு பரிந்துரைத்தனர்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசுகளை காப்பாற்ற மட்டுமே இது பொருந்தும் என முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம், கட்சித்தாவல் வழக்குகளில் முடிவெடுக்கும் அதிகாரமாக இருக்க வேண்டும் - பெரும்பாலும் பாரபட்சமான முறையில் செயல்படும் தலைமை அதிகாரிகள் முடிவெடுப்பவர்களாக இருக்கக்கூடாது என்று பரிந்துரைத்துள்ளது.

கட்சித் தாவல் மனுக்களை குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் விசாரிக்க வேண்டும் என்று சிலர் வாதிட்டனர். கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றம், கட்சியில் இருந்து பிரிவது தொடர்பான வழக்குகளை விரைவாகவும், பாரபட்சமின்றியும் தீர்த்து வைப்பதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு சுயாதீன தீர்ப்பாயத்தை நாடாளுமன்றம் அமைக்க வேண்டும் என்று கூறியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Maharashtra Shiv Sena
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment