பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தல் : முழுமையான அலசல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நாளை நடைபெற உள்ள தேர்தலில் சுமார் 20 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

Pakistan occupied kashmir, imran khan, maryam nawas

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டமன்றத்தில் 53 இடங்கள் உள்ளன. இதில் நான்கு இடங்கள் 2019ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டவை. இங்கு 700க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 20லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

அரசியலமைப்பு நிலைப்பாடு

பாகிஸ்தானியர்கள் “ஆசாத் ஜம்மு & காஷ்மீர்” (AJK) என்று அழைக்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீர், காஷ்மீர் போருக்குப் பின்னர் 1949 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்நிறுத்தத்திற்குப் பிறகு நடைமுறைக்கு வந்தது. மேலும் பாகிஸ்தான் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது.

பாகிஸ்தானின் நிலைப்பாடு ஆக்கிரமிப்பு காஷ்மீர் தங்களது நாட்டின் ஒரு பகுதி அல்ல, ஆனால் காஷ்மீரின் “விடுவிக்கப்பட்ட” பகுதி. பாகிஸ்தானின் அரசியலமைப்பு நாட்டின் நான்கு மாகாணங்களை பட்டியலிடுகிறது. பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா.

பாகிஸ்தானின் பிரதேசங்களை பட்டியலிடும் அரசியலமைப்பின் பிரிவு 1 இல் அத்தகைய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் பாகிஸ்தானுடன் சேர்க்கப்படலாம் என கூறுகிறது.

பாகிஸ்தானின் அரசியலமைப்பில் ஜம்மு-காஷ்மீர் பற்றிய ஒரு நேரடி குறிப்பு 257 வது பிரிவில் உள்ளது. அதில் “ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் பாகிஸ்தானுடன் இணைய முடிவு செய்தால், பாகிஸ்தானுக்கும் மாநிலத்துக்கும் இடையிலான உறவு அதற்கேற்ப தீர்மானிக்கப்படும் அது அந்த மாநில மக்களின் விருப்பம்” என கூறுகிறது.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீர்பூர், முசாஃபராபாத் மற்றும் பூஞ்ச் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் 10 மாவட்டங்களை உள்ளடக்கியது. இதன் தலைநகரம் முசாஃபராபாத்.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஒரு தன்னாட்சி, சுயராஜ்ய பிரதேசமாக இருந்தாலும் பாகிஸ்தான் ராணுவமே காஷ்மீரின் அனைத்து விஷயங்களிலும் இறுதி நடுவராக உள்ளது. மேலும் அங்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. போராளிகளுக்கான பல பயிற்சி முகாம்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்தன.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிரச்சாரம் செய்யும் நபர்கள் அல்லது அரசியல் கட்சிகள் பாகிஸ்தானின் சிந்தாந்தத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தெளிவான தடை உத்தரவு உள்ளது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் இதை செய்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார். மேலும் வேட்பாளர்கள் அங்கு நுழைவதற்கு விசுவாச உறுதிமொழி வாக்குமூலத்தில் கையெழுத்திட வேண்டும்.

அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காகவும், பாகிஸ்தான் பிரதமரின் தலைமையில் பரிந்துரைக்கப்பட்ட 14 உறுப்பினர்களைக் கொண்ட அனைத்து சக்திவாய்ந்த காஷ்மீர் கவுன்சில் மூலம் பாகிஸ்தான் அரசால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நடத்தப்படுகிறது. இதில் 6 உறுப்பினர்கள் பாக். அரசால் பரிந்துரைக்கப்பட்டவர்கள். ஆசாத் காஷ்மீர் பிரதமர் உட்பட 8 பேர் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டமன்றம் மற்றும் அரசை சேர்ந்தவர்கள்.

1970 ஆம் ஆண்டில் இப்பகுதியில் முதல் நேரடித் தேர்தல் நடத்தப்பட்டன. 1974 ஆம் ஆண்டில் “ஏ.ஜே.கே” அதன் சொந்த “இடைக்கால” அரசியலமைப்பைப் பெற்றது (காஷ்மீர் பிரச்சினையின் இறுதித் தீர்வு நிலுவையில் உள்ளது), அதே ஆண்டில் பாகிஸ்தானுக்கு அதன் முதல் முழு அரசியலமைப்பு கிடைத்தது.

சட்டசபையில் உள்ள 53 இடங்களில் 45 நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கானது. அதில் 33 “ஏ.ஜே.கே” இல் உள்ள தொகுதிகளைச் சேர்ந்தவை. அதில் 12 இடங்கள் பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் உள்ள “அகதிகள் தொகுதிகள்”. இது 1947 இல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்களைக் குறிக்கும்.

சட்டசபையில் மீதமுள்ள 8 இடங்கள் நியமனம் மூலம் நிரப்பப்படுகின்றன. ஐந்து பெண்கள், ஒரு தொழில்முறை, ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து வெளிநாட்டில் குடியேறியவர் மற்றும் உலாமாவிலிருந்து ஒருவர். சட்டசபைக்கு ஐந்தாண்டு காலம் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதேசத்திற்கு ஒரு “பிரதமர்” மற்றும் “ஜனாதிபதியை” தேர்ந்தெடுக்கின்றனர்.

தேர்தல் முடிவுகள் மற்றும் முறைகள்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும், வேட்பாளர்களும் பாகிஸ்தானின் அரசியலை பிரதிபலிக்கிறார்கள். வெற்றி பெற்றவர் பொதுவாக இஸ்லாமாபாத்தில் ஆளும் கட்சியாகும், மேலும் தோல்வியுற்ற கட்சிகள் ஏஜென்சிகளை குற்றம்சாட்டும். பாகிஸ்தானிய புலனாய்வு அமைப்புகள் வெற்றி பெற்றவர்களுக்கு உதவியதாக குற்றச்சாட்டை முன் வைக்கிறது.

நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (N) இஸ்லாமாபாத்தில் ஆட்சியில் இருந்தபோது, ​​ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடைசி தேர்தல்கள் 2016ல் நடைபெற்றது. PML (N) பெரும்பான்மையை பெற்றது. ராஜா ஃபாரூக் ஹைதர் “ஆசாத் காஷ்மீர்” பிரதமராகவும், மசூத் கான் ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த முறை 2018 ல் ஆட்சிக்கு வந்த இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI), ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், PML(N) தேர்தல் பிரச்சார கூட்டங்களில் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் உரையாற்றுவது பெரும் மக்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரான பிலாவால் பூட்டோ சர்தாரியும் பல பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றியுள்ளார்.

ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்திலும், காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலைமை முக்கியமாக உள்ளது. இருப்பினும் இஸ்லாமாபாத் மற்றும் முசாபராபாத்தில் ஆளும் கட்சியின் பிரச்சாரத்தின்போது சில சிக்கல்களை சந்தித்துள்ளது.

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் படை தளபதி புர்ஹான் வானி கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடைசி தேர்தல் நடைபெற்றது. பிரதம மந்திரி நவாஸ் ஷெரீப் புர்ஹான் வானியை ஒரு “தியாகி” என்றும் இந்தியப் படைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களுடன் ஒற்றுமையுடன் தேர்தல் தினத்தை “கருப்பு நாள்” என்று அறிவித்தார், மேலும் காஷ்மீர் மக்களின் “சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு” தனது கட்சி மற்றும் அரசு ஆதரவளிப்பதாக அறிவித்தார். நவாஸ் ஷெரீப் பனாமா பேப்பர்ஸ் வழக்கு மற்றும் பிற ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்.

மத்திய அரசு 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு -காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது. தற்போது இந்தியாவின் இந்த நடடிவக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

மரியம் நவாஸ், பிலாவால் பூட்டோ சர்தாரி, இம்ரான் கான்

மரியம் நவாஸ் தனது பிரச்சார உரைகளில் “காஷ்மீரின் தற்போதைய நிலைப்பாட்டை மாற்றியமைத்து, காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு மாநிலமாக்க பாகிஸ்தான் அரசு முயற்சித்து வருகிறது” என குற்றம்சாட்டினார். திர்கோட்டில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், கான் “AJK” இல் ஒரு “கைப்பாவை பிரதமரை” போல செயல்படுவதாக விமர்சித்தார். ஆனால் “PML (N) இதை அனுமதிக்காது” என்று எச்சரித்தார். இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. PML(N) கட்சியை சேர்ந்த பிரதமர் இதே குற்றச்சாட்டை சட்டமன்றத்தில் வைத்தார்.

இந்த மாத தொடக்கத்தில் முசாபராபாத்தில் நடந்த ஒரு பேரணியில் பேசிய பிலாவல், காஷ்மீரை விற்று விடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வாக்காளர்கள் இருபுறமும் ஒரு செய்தியை அனுப்ப வேண்டும் என கூறினார்.

“காஷ்மீரை விற்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நாங்கள் கூறும்போது, ​​ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் நடப்பது எங்களுக்குத் தாங்க முடியாதது என்பதும் இதன் பொருள். தேர்தல்களில் மோடியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்ய வேண்டாம், திருமணங்களில் அவரை அழைக்க வேண்டாம் என்று நாங்கள் கூறும்போது, ​​காஷ்மீர் முஸ்லிம்களுடன் தோளோடு தோள் நிற்கிறோம், நாங்கள் மோடியை தைரியமாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்”என்று பிலாவால் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை இம்ரான் கான் தனது உரையில், காஷ்மீரை விற்றுவிட்டதாகவோ, ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் மாகாணமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவோ தன் மீது கூறும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். காஷ்மீர் மக்கள் இந்தியா அல்லது பாகிஸ்தானில் சேர விரும்புகிறார்களா என்பதை தீர்மானிப்பதை அனுமதிக்க “ஐ.நா. கட்டாய வாக்கெடுப்பு நடத்தப்படும் நாள் வரும்” என்று அவர் பேசினார், மேலும் அவர்கள் பாகிஸ்தானை தேர்வு செய்வார்கள் என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Election in pakistan occupied kashmir

Next Story
கர்நாடக அரசியலில் லிங்காயத்துகளும், பி.எஸ். எடியூரப்பாவும் முக்கியத்துவம் பெறுவது ஏன்?Lingayats and BS Yediyurappa in Karnataka politics
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com