மத்திய அரசு லோக்சபாவில் மின்சார சட்டத் திருத்த மசோதா 2022-ஐ திங்கள்கிழமை தாக்கல் செய்தது. விரைவில் இந்த மசோதா கூட்டணி கட்சிகளுடன் விரிவான ஆலோசனைக்காக எரிசக்திக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களின்படி, மொபைல் மற்றும் இணைய சேவை வழங்குநர்கள் போல, மின்சாரம் வழங்குபவர்களையும் தேர்வு செய்யலாம் என்ற வாய்ப்பை நுகர்வோருக்கு அரசாங்கம் அளிக்கிறது. மாநிலப் பயன்பாடுகள் இழப்பில் இருந்து வெளிவரவும், சரியான நேரத்தில் மின் கட்டணத்தைச் செலுத்த உதவவும், சரியான நேரத்தில் போதுமான கட்டணத் திருத்தங்களுக்களை செய்யும் ஏற்பாடும் இதில் உள்ளது.
மின்சார சட்டத்திருத்த மசோதா என்ன முன்மொழிகிறது?
மத்திய அமைச்சரவை நுகர்வோருக்காக, கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்த மசோதாவான மின்சாரச் சட்டத்தின் 42 மற்றும் 14வது பிரிவுகளில் திருத்தம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. இதனால், மின்சார விநியோகத்தில் போட்டியை ஏற்படுத்துவதன் மூலம், தொலைபேசி அல்லது இணைய சேவை வழங்குனர்களை தேர்வு செய்வதைப் போல, மின்சார சேவை வழங்குபவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மின்சார சட்டத்திருத்த பிரிவு 14, பாகுபாடற்ற திறந்த அணுகல் விதிகளின் கீழ் அனைத்து உரிமதாரர்களும் விநியோக நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவதை எளிதாக்கும். அதே நேரத்தில், பிரிவு 42 விநியோக உரிமதாரர்களுக்கு விநியோக நெட்வொர்க்கிற்கு பாரபட்சமற்ற திறந்த அணுகலை எளிதாக்கும் என்று கூறுகிறது.
இந்த சட்டத்தின் 62வது பிரிவு திருத்தத்துடன் கூடிய இந்த மசோதா, மின் விநியோக நிறுவனங்களின் கொள்ளை விலையைத் தவிர்க்கவும், நுகர்வோரைப் பாதுகாக்கவும் பொருத்தமான கமிஷன் மூலம் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டண உச்சவரம்புகளை கட்டாயமாக நிர்ணயம் செய்ய வழிவகை செய்கிறது.
மேலும், மின் உற்பத்தியாளர்களுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துவதற்கு போதுமான பணத்தை மாநில மின் பயன்பாடுகளுக்கு வழங்க உதவும். சரியான நேரத்தில் கட்டண திருத்தங்களை உறுதி செய்வதற்கான பல விதிகளை இந்த திருத்த மசோதா கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையானது, மின் உற்பத்தி நிறுவனங்களுக்குப் பணம் செலுத்துவதில் விநியோக நிறுவனங்களால் மீண்டும் மீண்டும் வரும் பிரச்சனையைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த சட்டத்தின் பிரிவு 166-இல் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் மூலம் இந்த மசோதா பணம் செலுத்தும் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்தவும், கட்டுப்பாட்டாளர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கவும் முயற்சி செய்கிறது. “இந்த சட்டத்தில் ஒழுங்குமுறை பொறிமுறையை வலுப்படுத்துவதும், விநியோக உரிமதாரர்களின் மேம்பட்ட பெருநிறுவன நிர்வாகத்தின் மூலம் நிர்வாக சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதும் அவசியமாகிவிட்டது” என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
மின்சார சட்டத் திருத்த மசோதா ஏன் எதிர்க்கப்படுகிறது?
இந்த மசோதாவின் விதிகளை எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் பல எதிர்க்கின்றன. மின்சாரம் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த மசோதாவை ஆபத்தானது என்று ட்வீட் செய்து “இது ஒரு சில மின் விநியோக நிறுவனங்களுக்கு பயனளிக்கும்” என்று கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “மின்சார சட்டத் திருத்த மசோதா இன்று மக்களவையில் கொண்டு வரப்படுகிறது. இந்த சட்டம் மிகவும் ஆபத்தானது. இதன் மூலம், நாட்டில் மின்சார பிரச்னை மேம்படுவதற்கு பதிலாக, மேலும் தீவிரம் அடையும். மக்களின் துன்பம் அதிகரிக்கும். ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே பயனடையும். இதை அவசர அவசரமாக கொண்டு வர வேண்டாம் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.’ என்று வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தபோது, சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு அட்டைகளைக் காட்டி, காகிதங்களைக் கிழித்து, காற்றில் வீசியதால், அவையில் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ், திமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இந்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியது. அதே நேரத்தில், பாஜகவுடன் நட்புறவாகக் கருதப்படும் கட்சிகளான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, மற்றும் பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் விரிவான ஆலோசனைகளை வலியுறுத்தியுள்ளன. மசோதாவை அறிமுகப்படுத்துவதை எதிர்த்த புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் என்.கே. பிரேமச்சந்திரன், முன்மொழியப்பட்ட சட்டத்தின் விதிகள் கூட்டாட்சிக் கட்டமைப்பிற்கு எதிரானது என்று கூறினார்.
“அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை இயல்புகள் மற்றும் அடிப்படை அம்சங்கள் திருத்தப்படவோ அல்லது மாற்றப்படவோ கூடாது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு நிலைப்பாடு. ஆனால், நாட்டின் அரசியலமைப்பின் கூட்டாட்சி அமைப்பு, இந்திய ஒன்றியத்தின் குறிப்பிட்ட மாநிலங்களால் மாற்றப்பட்டு வருகிறது, அது கவனத்தில் கொள்ளப்படவில்லை” என்று அவர் கூறினார். இந்த மசோதா குறித்து மத்திய அரசு மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். பிரேமச்சந்திரன், மின்சாரம் பொதுப் பட்டியலின் கீழ் வரும் என்றும், மாநிலங்களைக் கலந்தாலோசிப்பது மத்திய அரசின் கண்டிப்பான கடமை அல்லது கட்டாயக் கடமை என்றும் கூறினார். பொதுப்பட்டியல் யூனியன் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு அதிகார வரம்பைக் கொண்டிருக்கும் விஷயங்களைக் கொண்டுள்ளது.
இந்தத் திருத்தங்கள் எப்படி உதவும்?
அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்களைப் பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், பல்வேறு மாநில மின் விநியோக நிறுவனங்கள் (டிஸ்காம்கள்) மின் உற்பத்திக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துவதற்கு போதுமான ஆதாரங்களைத் திரட்ட முடியவில்லை. சமீபத்திய அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களின் டிஸ்காம்கள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த நிலுவைத் தொகையில் சுமார் 57 சதவீதத்தை செலுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து, உத்தரபிரதேசம், ஜம்மு & காஷ்மீர், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று பாஜக ஆளும் மாநிலங்கள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த நிலுவைத் தொகை ரூ.114,222 கோடியில் 26 சதவீதம் ஆகும்.
மார்ச் 31, 2022 வரை புதுப்பிக்கப்பட்ட அரசு புள்ளிவிவரங்களின்படி, மாநிலங்கள் டிஸ்காம்களுக்கு சேவைகளுக்காக ரூ. 62,931 கோடியும், அவர்கள் அறிவித்த இலவசங்களுக்கு ரூ.76,337 கோடியும் செலுத்த வேண்டியுள்ளது.
டிஸ்காம்களுக்கு பணம் செலுத்தத் தவறிய மாநிலங்களில், தெலங்கானா 11,915 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், மகாராஷ்டிரா 9,131 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. 18,946 கோடி ரூபாய்க்கு டிஸ்காம்களுக்கு மானியம் செலுத்தாத மாநிலங்களில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் முன்னணியில் உள்ளது. மத்தியப் பிரதேசம் (ரூ. 16,240 கோடி) இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் மூன்று மாநிலங்கள் சேர்ந்து ரூ. 65,041 கோடி செலுத்த வேண்டிய நிலையில், அடுத்த மூன்று பாஜக ஆளும் மாநிலங்கள் மொத்தத் தொகையில் ரூ. 29,280 கோடி பாக்கி வைத்துள்ளன என்று பிராப்தி (செனரேட்டர்களின் விலைப்பட்டியலில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்கான மின் கொள்முதலில் செலுத்துதல் மற்றும் பகுப்பாய்வு) புள்ளிவிவரங்களின்படி ஜூலை 31 வரை, 2022 தகவல்கள் உள்ளது.
கட்டணத் திருத்தம் குறித்த கோரிக்கைகளை ஏற்கும் வகையில், கட்டுப்பாட்டாளருக்கு அதிகாரம் அளிப்பதுடன், மின்சாரத்திலும், அரசின் இலவசங்கள் நேரடிப் பலன் பரிமாற்றம் மூலம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.