டெஸ்லா கார்களை முதலில் விற்பனை செய்யவும், சர்வீஸ் செய்யவும் அனுமதிக்காத வரை இந்தியாவில் எந்த இடத்திலும் கார் உற்பத்தி ஆலையை அமைக்க முடியாது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு குறைந்த சுங்க வரி விதிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை இருப்பதால், 2019 முதல் இந்தியாவுக்குள் டெஸ்லா நிறுவனத்தின் என்ட்ரி வெயிட்டிங்கில் உள்ளது. ஆனால், இந்த கோரிக்கைக்கு இதுவரை செவி சாய்க்காத மத்திய அரசு, முதலில் ஆலையை இந்தியாவில் அமைக்க வேண்டும் என்கிற கூற்றை முன்வைக்கின்றனர்.
மின்சார வாகனங்களுக்கு சுங்கவரி குறைக்க வேண்டும்
ட்விட்டர் பயனாளர் ஒருவர், " இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலையை எதிர்காலத்தில் அமைக்கும் திட்டம் இருக்கிறதா" என்று எலான் மஸ்கிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க், "டெஸ்லா நிறுவனத்தின் கார்களை விற்பனை செய்வதற்கும், கார்களின் சர்வீஸ்களுக்கும் அனுமதி வழங்காதவரை எந்த நாட்டிலும், எந்த இடத்திலும் டெஸ்லா நிறுவனம் தனது தொழிற்சாலையை அமைக்காது" என பதிவிட்டிருந்தார்.
முழுமையாக அசெம்பிள் செய்யப்பட்ட கார்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்கக் கோரி டெஸ்லா கடந்தாண்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.
தற்போது, இன்ஜின் அளவு, தயாரிக்கும் செலவு, காப்பீடு, சரக்கு (CIF) மதிப்பு 40,000 அமெரிக்க டாலருக்கு குறைவாகவோ அல்லது அதற்கும் அதிகமாகவோ இருக்கும் முழுமையாக அசெம்பிள் செய்யப்பட்ட கார்களை இறக்குமதி செய்திட 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சுங்க வரி விதிக்கப்படுகிறது.
அரசு முதலில் உற்பத்தி ஆரம்பிக்க வலியுறுத்தல்
கடந்தாண்டு, எலான் மஸ்க் கடிதத்தற்கு பதிலளித்த மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, "இந்தியாவில் எலான் மஸ்க் தன்னுடைய டெஸ்லா கார்களை விற்பனை செய்வதை வரவேற்கிறோம். ஆனால், எலான் மஸ்க் தன்னுடைய டெஸ்லா கார்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டும். இந்தியாவில் தயாரித்தால் மட்டுமே டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்க முடியும். சீனாவில் தயாரிக்கப்பட்ட காரை இந்தியாவில் விற்பனை செய்ய முடியாது" என்று தெரிவித்திருந்தார்.
டெஸ்லா தனது திட்டத்தில் மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கான எந்த திட்டத்தையும் விவரிக்கவில்லை என்று மூத்த அரசாங்க அதிகாரிகள் முன்னதாக தி சண்டே எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர். வரி குறைப்பு கோரிக்கை மத்திய அரசு ஆதரவு தெரிவிப்பதாக இல்லை. ஏனெனில் மற்ற நிறுவனங்களும் இதே போன்ற சலுகைகளை நாடலாம் என்று கருதப்படுகிறது.
முன்பு, இவ்விவகாரம் குறித்து பேசிய மூத்த அரசாங்க அதிகாரி, டெஸ்லா இறக்குமதிக்கான சுங்க வரி குறைப்புகளை கோருகிறது. அவர்கள் உற்பத்தி செய்ய தாரளமாக வரவேற்கப்படுகிறார்கள். ஆனால், டெஸ்லா நிறுவனம் தங்களது வாகனத்தை இந்தியாவில் எத்தனை பேர் வாங்குகிறார்கள் என்பதை முதலில் பார்க்க வேண்டும் என கூறுகிறார்கள். அதற்கு முதலில் சுங்கவரியை குறைத்து எதிர்ப்பார்த்த விற்பனை இருந்தால், ஆலையை அமைப்போம் என்கின்றனர். அது ஏழைகளுக்கான கார் அல்ல. விலை குறைந்த மின்சார வாகனத்தை தயாரிக்கவில்லை. சூப்பர் கிளாஸ் காரைத் தயாரிக்கும்போது, நாம் ஏன் சுங்கவரி குறைக்க வேண்டும் என்பதே கேள்வி என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil