பல்கலைக்கழக மானியக் குழு (UGC),மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை (CUET) அறிமுகப்படுத்தியுள்ளது. இனி, இந்த தேர்வு மூலமாக தான், நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பின் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
பொது நுழைவுத் தேர்வு ஏன்?
உயர்கல்வி ஆர்வலர்களின் சுமையைக் குறைக்க, பல அரசாங்கங்கள், பல வருடங்களாக, பல நுழைவுத் தேர்வுகளை ஒரே தேர்வாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த CUET புதிய தேர்வு கிடையாது. இது, UPA-II அரசாங்கத்தின் கீழ் 2010 இல் மத்திய பல்கலைக்கழகங்களின் பொது நுழைவுத் தேர்வாக (CUCET) அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கடந்தாண்டு வரை 14 மத்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே இதை ஏற்றுக்கொண்டதால் திட்டம் முழுமையாக அமலுக்கு வரவில்லை.
CUET என்பது CUCET இன் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் ஆகும். இதை 45 மத்தியப் பல்கலைக்கழகங்களும் பின்பற்றுவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வின் அவசியத்தை பரிந்துரைக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையின் (NEP) அறிவிப்புக்குப் பிறகு இது வந்துள்ளது.
டெல்லி பல்கலைக்கழகங்களில் இளங்கலை சேர்க்கை எப்படி இருக்கும்?
டெல்லி பல்கலைக் கழகத்தைப் பொறுத்த வரையில், கட்-ஆஃப் மதிப்பெண்கள் இனி வரலாறாக இருக்கும். கல்லூரி அல்லது திட்டத்தின் சேர்க்கையை தீர்மானிப்பதில், மாணவர்களின் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்கு எந்தப் பங்கும் இருக்காது. அவர்களது CUET மதிப்பெண்ணை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சேர்க்கை நடைபெறும். ஆனால், டெல்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகள் அல்லது எந்தவொரு மத்திய பல்கலைக்கழகமும் சேர்க்கைக்கான குறைந்தபட்ச தகுதி அளவுகோலாக 12ஆம் வகுப்பு மதிப்பெண்களைப் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இசை, ஓவியம், சிற்பம் மற்றும் நாடகம் போன்ற முக்கிய செய்முறை பகுதிகளை கொண்ட திறன் சார்ந்த படிப்புகளுக்கு, CUET உடன் இணைந்து செய்முறை தேர்வு அல்லது நேர்காணல்களை நடத்த பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்படும்.
பொறியியல், எம்பிபிஎஸ் போன்ற தொழில்முறை திட்டங்களுக்கு, மத்திய பல்கலைக்கழகங்கள் முறையே JEE (மெயின்), NEET நுழைவுத் தேர்வுகள் மூலம் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
12 ஆம் வகுப்பு போர்டு மதிப்பெண்களுக்கு வழங்கிய முக்கியத்தவத்தை மாற்றியது ஏன்?
வெவ்வேறு வாரியங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு முறைகளில் “பன்முகத்தன்மை” இருப்பதால், சேர்க்கைக்கு வாரிய மதிப்பெண்களைப் பயன்படுத்துவதை அரசாங்கம் விரும்பவில்லை.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “சில வாரியங்கள் மற்றவர்களை விட தாராளமாக மதிப்பெண்கள் வழங்குகின்றன. இது, அனைத்து வாரியங்களில் பயிலும் மாணவர்களுடன் ஒப்பிடுகையில், குறிப்பிட்ட போர்டில் பயிலும் மாணவர்களுக்கு நியாயமில்லாத கூடுதல் நன்மையாக அமைகிறது” என்றார்.
CUET தேர்வை நடத்துவது யார், எப்போது நடத்தப்படும்?
JEE (Main), UGC-NET போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA), ஜூலை முதல் வாரத்தில் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் CUET தேர்வை நடத்தவுள்ளது. கணினி அடிப்படையிலான இந்த தேர்வு, இரண்டு ஷிப்டுகளில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அஸ்ஸாமி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா , ஆங்கிலம் என 13 மொழிகளில் நடத்தப்படும். ஒரே நாளில் CUET தேர்வு நடத்தப்படுமா அல்லது பல நாள்களாக நடத்தப்படுமா என்பது தொடர்பான தெளிவான தகவல் இல்லை.
தேர்வுக்கான விண்ணப்ப தளம், ஏப்ரல் முதல் வாரத்தில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ (முதன்மை) போலல்லாமல், CUET மதிப்பெண் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழக சேர்க்கைக்கு பொதுவான கவுன்சிலிங் இருக்காது. NTA ஆல் தயாரிக்கப்பட்ட தகுதிப் பட்டியலின் அடிப்படையில் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் மாணவர்கள் சேர்க்கை செயல்முறையை வரையறுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், யுஜிசி தலைவர் எம் ஜெகதேஷ் குமார் எதிர்காலத்தில் கூட்டு கவுன்சிலிங்கை நிராகரிக்கவில்லை.
தேர்வர் எதிர்நோக்கும் பிரச்சினை என்ன?
யுஜிசி தலைவர் கூறுகையில், மூன்றரை மணி நேரம் நடைபெறும் கணினி அடிப்படையிலான இந்த நுழைவுத் தேர்வில், என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களின் அடிப்படையில் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் இடம்பெற்றிருக்கும். CUET தேர்வு அடிப்படையில் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்.
முதல் பகுதி, தேர்வர்களின் விருப்ப மொழி தொடர்பான கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அதாவது, reading comprehension, questions on vocabulary, synonyms and antonyms போன்ற கேள்விகள் இடம்பெற்றிருக்கும். 13 மொழிகளில் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால், அந்த 13 மொழியில் ஏதெனும் ஒன்றை தேர்ந்தெடுத்து, ஒரு மொழி தேர்வில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
பின்னர், அடுத்த தேர்வை பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், நேபாளி, பாரசீகம், இத்தாலியன், அரபு, சிந்தி, காஷ்மீரி, கொங்கனி, போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்பூரி, சந்தாலி, திபெத்தியன், ஜப்பானிய, ரஷ்ய மற்றும் சீன மொழி என 19 வகையான மொழிகளில் எழுத அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
CUET இன் இரண்டாம் பகுதி, தேர்வரின் குறிப்பிட்ட பகுதி சார்ந்த அறிவை சோதிக்கும். இந்தப் பிரிவில் மொத்தம் 27 பகுதிகள் உள்ளன. தேர்வு எழுதுபவர் குறைந்தப்பட்சம் ஒரு பகுதி அல்லது அதிகப்பட்சம் ஆறு பகுதிகளில் தங்களது திறனை நிரூபிக்கலாம். ஒவ்வொரு மத்தியப் பல்கலைக்கழகமும், ஒரு தேர்வர் எந்தத் படிப்பிற்கு எந்த பகுதிகளை தேர்ந்தெடுக்கலாம் என்பதைக் குறிப்பிடும்.
CUET இன் இரண்டாம் பகுதியில் வழங்கப்படும் 27 டொமைன்களானது கணக்கியல்/ புத்தக பராமரிப்பு, உயிரியல்/ உயிரியல் ஆய்வுகள்/ பயோடெக்னாலஜி, பிசினஸ் படிப்பு, வேதியியல், கணினி அறிவியல்/ தகவல் நடைமுறைகள், பொருளாதாரம்/ வணிகப் பொருளாதாரம், பொறியியல் கிராபிக்ஸ், தொழில்முனைவு, வரலாறு,ஹோம் சைன்ஸ், இந்தியாவின் பாரம்பரிய நடைமுறை, சட்டப் படிப்புகள், வணிகக் கலைகள், கணிதம், உடற்கல்வி/ என்சிசி, இயற்பியல், அரசியல், உளவியல், சமூகவியல், கற்பித்தல் திறன், விவசாயம், ஊடகம்,மாஸ் கம்யூனிகேஷன், ஆந்த்ரோபாலஜி, பைன் ஆர்ட்ஸ் / ஓவியம், கலை மற்றும் சமஸ்கிருதம் ஆகும்.
நுழைவுத் தேர்வின் மூன்றாம் பகுதியில் பொது அறிவு, நடப்பு விவகாரங்கள், பொது மனத் திறன், எண்ணியல் திறன் மற்றும் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் Arithmetic/algebra geometry/mensuration/stat போன்ற quantitative reasoning கேள்விகளும், பகுப்பாய்வு கேள்விகளும் இடம்பெற்றிருக்கும். சம்பந்தப்பட்ட தேர்வர் தகுதியானவர் என தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் விரும்பினால் மட்டுமே, அவரால் பொதுத்தேர்வில் பங்கேற்க முடியும்.
கட்டாய மொழித் தேர்வைத் தவிர, CUET இன் குறிப்பிட்ட பகுதி தேர்விலும், பொதுத் தேர்விலும் ஒரு வேட்பாளர் பங்கேற்பது, அவர் விண்ணப்பிக்கும் படிப்பு இருக்கும் மத்திய பல்கலைக்கழகம் அதை ஏற்றுக்கொள்கிறதா என்பதைப் பொறுத்தது தான்.
உதாரணமாக, ஒரு பல்கலைக்கழகம், குறிப்பிட்ட படிப்பிற்கு விண்ணப்பித்திருக்கும் மாணவரை, அதன் சேர்க்கைக்கு மொழி மற்றும் பொதுத் தேர்வுக்கு மட்டுமே பங்கேற்கும் படி சொல்லலாம்.
அதேசமயம், மற்றொரு படிப்பிற்கு கட்டாய மொழித் தேர்வு, குறிப்பிட்ட பகுதி தேர்விலும் பங்கேற்க அறிவுறுத்தலாம். எனவே, தேர்வர் முதலில் சேர விரும்பும் திட்டத்தின் தேவையை சரிபார்த்து, அதற்கேற்ப குறிப்பிட்ட பகுதி சேர்வு, மொழித் தேர்வு அல்லது தேவைப்பட்டால் பொதுத் தேர்வு கலந்துகொள்வது என்கிற காம்பினேஷனை செக் செய்ய வேண்டும்.
CUET ஏன் மத்திய பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டது?
தற்சமயம், மத்திய பல்கலைக்கழகங்களுக்கு CUET கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால், தனியார் பல்கலைக்கழகங்கள் உட்பட பிற நிறுவனங்களும் இந்த தேர்வை ஏற்றுக்கொண்டு நடத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை சேர்க்கை எப்படி?
இளங்கலைப் படிப்பைப் போலல்லாமல், மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு முதுகலை சேர்க்கைக்கு CUET கட்டாயமில்லை. ஆனால், முதுகலை சேர்க்கைக்கு CUET தேர்வை ஏற்றி நடத்திக்கொள்ளலாம் அல்லது தற்போதைக்கு தங்களது சொந்த சேர்க்கை செயல்முறையை பின்பற்றிக்கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil