குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூலை 18ஆம் நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டார்.
இதில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூலை 21) எண்ணப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை விட அதிக வாக்குகள் பெற்று திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் பழங்குடியின சமூகத்திலிருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் முதல் பெண் திரௌபதி முர்மு ஆவார்.
கல்லூரிக்குச் சென்ற முதல் பெண்
64 வயதான திரௌபதி முர்மு 1958ஆம் ஆண்டு ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள உபர்பேடா என்ற கிராமத்தில் பிறந்தவர். பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த முர்மு, பள்ளி பருவத்தை முடித்து ரமாதேவி மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்தார். உபர்பேடாவில் இருந்து கல்லூரிக்குச் சென்ற முதல் பெண் திரௌபதி முர்மு ஆவார். கல்லூரி படிப்பை முடித்த முர்மு, ராய்ராங்பூரில் உள்ள ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மையத்தில் ஆசிரியராக பணியாற்றினார்.
அரசியல் பயணம்
முர்மு,1997ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு ராய்ரங்பூர் நகர் கவுன்சிலரானார். 2000, 2004ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு இரண்டு முறை எம்எல்ஏ ஆனார். நவீன் பட்நாயக்கின் பிஜேடி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியில் முர்மு அமைச்சராக பணியாற்றினார்.
வணிகம் மற்றும் போக்குவரத்துதுறை, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக பதவி வகித்தவர். ஒடிசாவின் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது 58 போக்குவரத்து அலுவலகங்களை அமைத்த பெருமைக்குரியவர். முர்மு, பாஜகவின் பழங்குடியின பிரிவு துணைத் தலைவராகவும் பணியாற்றியவர்.
கணவன், 2 மகன்கள் உயிரிழப்பு
அரசியல் பயணம் நல்லபடியாக தொடங்கி சென்றநிலையில், முர்மு தடைகளை எதிர்கொண்டார். 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட முர்மு தோல்வியை தழுவினார். குடும்ப வாழ்க்கையிலும் இழப்பை சந்தித்தார். 2009ஆம் ஆண்டு அவரது மூத்த மகன் லக்ஷ்மன் முர்மு உயிரிழந்தார். 2013இல் இரண்டாவது மகன் சிப்புன் முர்மு, 2014இல் அவரது கணவர் ஷியாம் சரண் முர்மு உயிரிழந்தனர். முர்மு, பெரும் துயரைச் சந்தித்தார்.
முதல் பெண் ஆளுநர்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக முர்மு கடந்த 2015ஆம் ஆண்டு பதவியேற்றார். 2016ஆம் ஆண்டு முதலமைச்சர் ரகுபர் தாஸ் தலைமையிலான பாஜக அரசு, பழமையான நிலச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த சட்ட திருத்தத்திற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டால் நிலத்தின் மீதான தங்களது உரிமைகள் பறிக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முர்மு, 2017இல் மசோதாக்களை அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதனால் அவர் மக்களிடமும், அவரது சமூகத்திடமும் பாராட்டுகளைப் பெற்றார். முர்மு, அவரது சமூக மக்களுக்கு நம்பிக்கைகுரியவராகவும், ஊக்கமளிப்பவராக உள்ளார்.
இந்தநிலையில் நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு, வரும் ஜூலை 25ஆம் பதவியேற்கிறார்.