scorecardresearch

உணவுப் பொருள் விலை உயர்வுக்கான காரணங்கள்

தற்போதைய உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு விநியோகச் சிக்கல்கள் காரணம் மற்றும் புரதங்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை விட கலோரிகள் வழங்கும் உணவுகளின் விலைகள் அதிகம். இந்தியாவில் உலகளாவிய கலோரி உணவுகளின் விலை உயர்வின் தாக்கம் என்ன, மேலும் வரும் நாட்களில் என்ன காரணிகள் போக்குகளை தீர்மானிக்கும்?

உணவுப் பொருள் விலை உயர்வுக்கான காரணங்கள்

Harish Damodaran , Parthasarathi Biswas 

Explained: Behind current food inflation: உலக நாடுகளும் இந்தியாவும் உணவு பொருட்களின் விலை மீண்டும் எழுவதைக் கண்டு வருகின்றன. செப்டம்பர் 2021 மற்றும் ஏப்ரல் 2022 க்கு இடையில், இந்தியாவில் நுகர்வோர் உணவு விலை பணவீக்கம் ஆண்டுக்கு 0.68% லிருந்து 8.38% ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஐநா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) உணவு விலைக் குறியீடு இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டுள்ளது, இது கடந்த கால அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வின் நினைவுகளை மீண்டும் எழுப்பியுள்ளது. அது 2000 களின் நடுப்பகுதியிலிருந்து 2012-13 வரையிலான காலகட்டம் வரை நிலவியது, 2008-09 உலகளாவிய நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஆனால் இரண்டு உணவு பொருட்கள் விலை உயர்வு நிகழ்வுகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது, குறிப்பாக இந்தியாவில்.

முந்தையது ஒரு கட்டமைப்பு ரீதியான, தேவையை அடிப்படையாகக் கொண்ட விலை உயர்வாகும், இது வருமான உயர்வால் அதிகரித்தது. ஏழை மற்றும் கீழ்-நடுத்தர வர்க்க குடும்பங்கள் உட்பட உண்மையான வருமானம் அதிகரித்து, தானியங்கள் மற்றும் சர்க்கரை (அடிப்படையில் கலோரிகளை வழங்கும்) போன்றவற்றின் தனிநபர் நுகர்வு குறைந்து, புரதங்கள் (பால், பருப்பு வகைகள், முட்டை, மீன் மற்றும் இறைச்சி) மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் (பழங்கள் மற்றும் காய்கறிகள்) போன்ற உணவுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த உணவுப் பல்வகைப்படுத்தலும் விலை உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2004-05 மற்றும் 2012-13 க்கு இடையில், மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் ஒட்டுமொத்த உயர்வு சர்க்கரைக்கு 93.1% ஆகவும், தானியங்களுக்கு 99.9% ஆகவும், சமையல் எண்ணெய்களுக்கு வெறும் 48.1% ஆகவும் இருந்தது (1 கிராம் கொழுப்பு 9 கலோரிகளை வழங்குகிறது, இது கோதுமை ஆட்டா மற்றும் சர்க்கரையிலிருந்து கிடைக்கும் கலோரிகளை விட 3-4 மடங்கு அதிகமாகும்). அதேப்போல், பால் 108.1%, காய்கறிகள் 110.1%, பருப்பு வகைகள் 141.3% மற்றும் முட்டை, இறைச்சி மற்றும் மீன் 144.5% என மொத்த விற்பனை விலைக்குறியீடு உயர்ந்தது.

இப்போது மற்றும் அடுத்து

தற்போதைய உணவு விலை உயர்வு, இதற்கு நேர்மாறாக, தனித்துவம் வாய்ந்தது. இது விநியோக சிக்கல்களால் ஏற்பட்டுள்ளது. மேலும் “புரத” உணவுப்பொருட்களின் விலை உயர்வை விட “கலோரி” உணவுப் பொருட்களின் விலை உயர்வு அதிகம், இது இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் சுபிர் கோகர்ன் என்பவரால் சுட்டிக் காட்டப்படுகிறது.

ஆகஸ்ட் 2020 முதல், கொரோனா ஊரடங்கு படிப்படியாக நீக்கப்பட்டதன் மூலம் உலகளாவிய தேவை திரும்பத் தொடங்கியதும், FAO இன் தாவர எண்ணெய், தானியங்கள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலைக் குறியீடுகள் முறையே 141%, 71% மற்றும் 50% உயர்ந்துள்ளன. இவை, ஏப்ரல் 2020 வரையிலான அதே காலகட்டத்தில் இறைச்சி விலைக் குறியீட்டில் 32% மற்றும் பால் உற்பத்தியில் 44% என ஒட்டுமொத்த உயர்வைத் தாண்டியுள்ளது.

மேலும், அட்டவணை 1 காட்டுவது போல், மேற்கூறிய விலை உயர்வின் பெரும்பகுதி உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு முந்தையது. போருக்கு முன்பே, உக்ரைனில் 2020-21 இல் வறட்சி இருந்தது, அதே நேரத்தில் ரஷ்யா, டிசம்பர் 2020 இல், உள்நாட்டு விலையேற்றத்தைத் தணிப்பதற்காக கோதுமை, சோளம், பார்லி, கம்பு, சூரியகாந்தி மற்றும் ராப்சீட் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு தடைகளை அறிவித்தது. உக்ரேனிய வறட்சி மற்றும் ரஷ்ய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் மலேசியாவின் எண்ணெய் பனை தோட்டங்களில் குடியேறிய தொழிலாளர்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாக தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவை சமையல் எண்ணெய்கள் மற்றும் தானியங்களின் உலகளாவிய விலைகளை உயர்த்தியது.

பிப்ரவரி 24 அன்று தொடங்கிய போர், உலகின் கோதுமை, சோளம், பார்லி மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் கணிசமான பங்கைக் கொண்ட இரு நாடுகளின் விநியோகங்களை தாக்கியதன் மூலம் விஷயங்களை மோசமாக்கியது. இந்த தீயில் மேலும் எண்ணெய்யைச் சேர்த்தது, இந்தோனேஷியா உள்ளூர் உணவு விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த பாமாயில் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை (தற்காலிகத் தடையும் கூட) விதித்தது (முன்பு ரஷ்யா கோதுமையில் செய்ததைப் போன்றது). மேலும் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்க்கரை, சோளம், பனை மற்றும் சோயாபீன் எண்ணெய் ஆகியவற்றை உயிரி எரிபொருள் உற்பத்திக்கு திசைதிருப்புவதை மிகவும் சாதகமாக மாற்றியது.

இருப்பினும், புரத உணவுகளில் அத்தகைய பெரிய விலை உயர்வு இல்லை. FAO வின் பால் மற்றும் இறைச்சி விலைக் குறியீடுகள் உயர்ந்துள்ளன, ஆனால் அது அதிகரித்து வரும் வருமானத்தில் இருந்து தேவையை இழுக்காமல், தீவனப் பொருட்களின் (சோளம், பார்லி, கம்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள்) விலை அதிகரிப்பால் ஏற்பட்டது. மார்ச் நடுப்பகுதியில் இருந்து, உலக பால் பொருட்கள் விநியோக ஏல மேடையில் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் (SMP) மற்றும் நீரற்ற பால் கொழுப்பு ஆகியவற்றின் விலைகள் முறையே 9.4% மற்றும் 15% குறைந்துள்ளன. எதிர்மறையாக இல்லாவிட்டாலும், இன்றைய குறைந்த, உண்மையான வருமான வளர்ச்சி விகிதங்களில் வாங்குபவர்கள் தாங்கமுடியாத உயர் விலைகளை எதிர்க்கின்றனர், இது தேவை அழிவைக் குறிக்கிறது.

இந்தியாவில் தாக்கம்

எவ்வாறாயினும், அதிக உலகளாவிய உணவு விலை உயர்வு இந்தியாவில் பெரும்பாலும் காய்கறி கொழுப்புகளுக்கு மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாட்டின் சமையல் எண்ணெய் நுகர்வுத் தேவையில் 60% க்கும் அதிகமானவை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுவதில் ஆச்சரியமில்லை. ஜனவரி முதல் ஒட்டுமொத்த நுகர்வோர் உணவுப் பொருட்களின் விலைக் குறியீட்டின் எழுச்சிக்கு முன்பே, 2021 ஆம் ஆண்டு முழுவதும் சில்லறை சமையல் எண்ணெய் விலை உயர்வு 20-35% அளவில் இருந்ததை அதனுடன் உள்ள அட்டவணையில் இருந்து பார்க்க முடியும். சுவாரஸ்யமாக, மற்ற இரண்டு கலோரி உணவுப் பொருட்களான தானியங்கள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலை உயர்வு, உலகளாவிய விலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தபோதிலும், ஒப்பீட்டளவில் குறைவாகவுள்ளது.

குறைந்த பட்சம் சமீப காலம் வரை, தானியங்கள் மற்றும் சர்க்கரையில், விலை உயர்வு இல்லாததற்கு முக்கிய காரணம், நாடு இரண்டிலும் உபரி உற்பத்தியாளராக இருப்பதே ஆகும். 2021-22ல் (ஏப்ரல்-மார்ச்) இந்தியாவின் தானியங்கள் மற்றும் சர்க்கரையின் ஏற்றுமதிகள் முறையே $12.9 பில்லியன் மற்றும் $4.6 பில்லியன் மதிப்பில் சாதனை படைத்தது. மேலும், 21.2 மில்லியன் டன் அரிசி, 7.2 மில்லியன் டன் கோதுமை மற்றும் 3.6 மில்லியன் டன் மக்காச்சோளம் உட்பட, சுமார் 32.3 மில்லியன் டன் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட போதிலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் 105.6 மில்லியன் டன் தானியங்களை (55.1 மில்லியன் டன் அரிசி மற்றும் 50 மில்லியன் டன் கோதுமை) பொது விநியோக முறை மூலம் விற்கப்பட்ட நிலையிலும், அரசு குடோன்களில் இருப்புகள் நிரம்பி வழிகின்றன.

தானியங்களின் விலை உயர்வு சமீபகாலமாக ஏற்றம் கண்டுள்ளது. ஆனால் அந்த விலை உயர்வு, மார்ச் நடுப்பகுதியில் இருந்து திடீர் வெப்ப அலையால் கோதுமை பயிர் விளைச்சல் இழப்பின் பின்னணியில் வந்துள்ளது. இங்குள்ள டிரான்ஸ்மிஷன் மெக்கானிசம் வேறு வழியில் வேலை செய்தது: குறைந்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பங்குகள் குறைந்து வருவதால், இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதியை தடை செய்ய மத்திய அரசுக்கு வழிவகுத்தது, சர்வதேச விலைகள் அதிகரிப்பால், மற்ற (இறக்குமதி செய்யும்) நாடுகளுக்கு அதிக தட்டுப்பாடாக உருவாகியுள்ளது.

புரத உணவுகளின் நிலை என்ன?

தற்போதைய உணவுப் பொருட்களின் விலை உயர்வு என்பது, ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, புரதங்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை விட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளைப் பற்றியது. அகில இந்திய மாடல் அல்லது அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட பருப்புகளின் (பிளவு பருப்பு வகைகள்) சில்லறை விலைகள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இப்போது குறைவாக உள்ளன. அதில் சன்னா கிலோவுக்கு ரூ. 75 லிருந்து ரூ. 70, துவரம் பருப்பு ரூ. 110 லிருந்து ரூ 97.5, உளுந்து ரூ. 105 லிருந்து ரூ. 97, மற்றும் பாசிப் பருப்பு ரூ. 105லிருந்து ரூ. 98.5 என்ற அளவில் குறைந்துள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் துறையின் தரவுகளின்படி, மசூர் பருப்பு மட்டுமே விதிவிலக்கு, இதன் மாடல் விலை ரூ.90/கிலோ என்பது கடந்த ஆண்டு இந்த நேரத்தில் ரூ.85ஐ விட அதிகமாக உள்ளது.

பால் பொருட்களைப் பொறுத்தவரை, சர்வதேச SMP மற்றும் வெண்ணெய் கொழுப்பு விலைகளில் ஏற்பட்ட சரிவு, உள்நாட்டு சந்தையிலும் சில மாற்றங்களை கட்டாயப்படுத்தியுள்ளது. ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து, மகாராஷ்டிராவின் பால்பண்ணைகள் பசுவின் பால் SMP மற்றும் மஞ்சள் வெண்ணெய் ஆகியவற்றின் விலையை முறையே சுமார் ரூ.295 மற்றும் ரூ.400-லிருந்து ரூ.270 மற்றும் ரூ.360-365/கிலோவாகக் குறைத்துள்ளன. மே முதல் வாரம் வரை பால் கொள்முதல் விலையை (3.5% கொழுப்பு மற்றும் 8.5% திடப்பொருள் அல்லாத கொழுப்பு) லிட்டருக்கு ரூ.33-34 ஆகக் குறைத்துள்ளனர். எருமை பால் SMP மற்றும் வெள்ளை வெண்ணெய் விலைகள் தொடர்ந்து அதேநிலையில் உள்ளன, ஆனால் இவையும் பருவ மழையின் வருகையுடன் குறையத் தொடங்கும். கோடை மாதங்கள் எருமைப் பாலின் உச்சபட்ச “குறைவான” பருவமாகும். விலங்குகள் ஈன்றெடுக்கத் தொடங்கும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து உற்பத்தி உண்மையில் அதிகரிக்கும், மேலும் குளிர்காலத்தில் வசந்தகால மாதங்களில் உச்சத்தை அடைகிறது.

முட்டை மற்றும் இறைச்சி விலையில் இதே போன்ற தளர்வுகளை எதிர்பார்க்கலாம். கோடை வெப்பம் தணிவது, வளர்ப்பு மற்றும் பிராய்லர் பறவைகளின் வளரும் நேரத்தையும் இறப்பையும் குறைக்க உதவும். கடந்த ஜூன்-ஜூலையில் கோழிப்பண்ணை தொழில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது, முட்டையிடும் பறவைகளுக்கு வழங்கப்படும் தீவனத்தின் விலை கிலோவுக்கு மார்ச் 2021ல் ரூ.21-22ல் இருந்து ரூ.40ஐ தாண்டியது, பிராய்லர் குஞ்சுகளுக்கு ரூ 29-30 இலிருந்து ரூ.50-52 என அதிகரித்தது. இது எண்ணெய் பிரித்தெடுத்தலின் துணைப் பொருளாகப் பெறப்பட்ட புரதச்சத்து நிறைந்த தீவனப் பொருளான சோயாபீன் டீ-ஆயில்டு கேக் (DOC) விலைகள் உயர்ந்ததன் காரணமாக ஏற்பட்டது. 12 லட்சம் டன்கள் வரை மரபணு மாற்றப்பட்ட DOC இறக்குமதிக்கு அனுமதி அளித்து ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு எடுத்த முடிவு, வளர்ப்பு மற்றும் பிராய்லர் தீவனத்தின் விலையை கிலோவுக்கு ரூ.30 மற்றும் ரூ.45 என்ற அளவிற்கு நிலைப்படுத்தியுள்ளது.

மொத்தத்தில், ஹோட்டல்களை மீண்டும் திறப்பது மற்றும் பிற லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஆகியவற்றிலிருந்து தேவை மீட்கப்பட்டாலும், அது எந்த “புரத உணவு தட்டுப்பாட்டையும்” தூண்ட வாய்ப்பில்லை. உயரும் வருமானத்தின் தேவை, இந்த நேரத்தில் போதுமானதாக இல்லை.

பழங்கள் மற்றும் காய்கறிகளிலும், விலை உயர்வு அதிகரிப்புக்கு காரணம் (அட்டவணை 2) பெரும்பாலும் தேவை-பக்க காரணிகளைக் காட்டிலும் விநியோக அதிர்ச்சிகளாகும். இந்த ஆண்டு டிசம்பர்-ஜனவரியில் பெய்த பருவமழை (மலர் உதிர்வை உண்டாக்குகிறது) மற்றும் கோடையின் தொடக்கம் (பழங்கள் உருவாவதற்கும், வளருவதற்கும் போதுமான நேரத்தை அனுமதிக்காதது) மாம்பழ விலை உயர்வை இரட்டிப்பாக்கும். எலுமிச்சை பூக்கும் போது (ஜனவரியில்) மற்றும் அறுவடைக்கு (மார்ச்-ஏப்ரல்) இதேதான் நடந்தது.

அதே நேரத்தில், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் தர்பூசணிகள், வெள்ளரி, பூசணி, வெண்டைக்காய், பாக்கு மற்றும் பிற கோடைகால காய்கறிகள் ஆகியவற்றில் அதிக விலை உயர்வு இல்லை. தக்காளி விலை அதிகமாக உள்ளது, ஆனால் ஆண்டின் இந்த நேரத்தில் அசாதாரணமாக இல்லை. மீண்டும், இடைவிடாத மழை, சந்தை வருகை ஆகியவை காரணமாக ஏற்பட்டுள்ளது.

சுருக்கமாக

போர், வறட்சி, பருவமழை மற்றும் வெப்ப அலைகள் ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் உணவுப் பொருள் விலை உயர்வு, கட்டமைப்பு தேவை-இழுக்கும் காரணிகளிலிருந்து வேறுபட்டது. இப்போது விலை உயர்வு, புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் காட்டிலும் முக்கியமாக கலோரிகளை வழங்கும் உணவுகளிலும் உள்ளது. அது, ஓரளவிற்கு, முந்தைய விலை உயர்வை விட மோசமாக்குகிறது, இது, கோகர்னின் வார்த்தைகளில், “அதிகரிக்கும் செல்வத்தின் தவிர்க்க முடியாத விளைவு”.

இதையும் படியுங்கள்: குழந்தைகளைத் தாக்கும் கண் புற்றுநோய்… ‘ரெட்டினோபிளாஸ்டோமா’ என்றால் என்ன?

அதிக விலை என்பது, விவசாயிகளிடமிருந்து விநியோகத்தை தூண்டும் அதே வேளையில், பருவமழையைப் பொறுத்தது. கடந்த ஆண்டு பருவமழை ஒட்டுமொத்த அர்த்தத்தில் “இயல்பானது”, ஆனால் ஜூலையில் நீடித்த வறண்ட காலநிலை மற்றும் ஆகஸ்ட் பிற்பகுதியில் இருந்து அதிக மழை காரணமாக, டிசம்பர்-ஜனவரி மாதங்களில் கடுமையான பருவமழை பெய்யும். இந்திய வானிலை ஆய்வுத் துறையின் “சாதாரண” பருவமழை முன்னறிவிப்பு எவ்வளவு சாதாரணமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதற்கிடையில், ஒரு நல்ல செய்தி, சனிக்கிழமையன்று, டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாய் குறைத்துள்ளது மற்றும் பல மாநிலங்களும் குறைப்புகளை அறிவித்துள்ளன. அது வரும் நாட்களில் உணவு பொருட்கள் விலை உயர்வில் மேலும் ஒரு நல்ல விளைவை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Explained behind current food inflation