scorecardresearch

பொது சிவில் சட்டமும் அரசின் நிலைப்பாடும்

பொது சிவில் சட்டம் தொடர்பாக, முந்தைய அரசாங்கங்கள் தனிநபர் சட்டங்களில் தலையிட தயக்கம் காட்டின. பின்னர், அரசாங்கம் பரந்த ஆலோசனை தேவை என்றும், பிரிவு 44 பற்றியும் குறிப்பிட்டது. இத்தகைய, பாராளுமன்றத்தின் பதில்கள் மாறி வரும் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றன

பொது சிவில் சட்டமும் அரசின் நிலைப்பாடும்

Harikishan Sharma 

Explained: Civil code and govt stance: பொது சிவில் சட்டம் (UCC) பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு, குறிப்பாக கடந்த எட்டு ஆண்டுகளில், ஒரு ஆட்சியிலிருந்து அடுத்த ஆட்சிக்கு இடையே மாறி வருகிறது. சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சமீபத்திய நிலைப்பாட்டில் இது பிரதிபலித்தது, இது தனிப்பட்ட சட்டங்களை மறுஆய்வு செய்யும் பாராளுமன்றக் குழுவிடம் தெரிவித்தது, கோவாவில் 155 ஆண்டுகள் பழமையான போர்த்துகீசிய காலச் சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ள நிலையில், மக்கள்தொகையில் “கணிசமான பெரும்பான்மையினர்” தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் அல்லது புதிய சட்டம் இயற்ற கோரும்போது சட்டங்களில் மறு ஆய்வு செய்யலாம் என பரிந்துரைத்தது.

1991 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் எழுத்துப்பூர்வ பதில்களில் இந்த நிலைப்பாடு மாறி வருவதைக் காணலாம். முந்தைய ஆட்சிகள் “சிறுபான்மை சமூகத்தின் தனிப்பட்ட சட்டங்களில் தலையிடக் கூடாது” என்ற ஒரு “நிலையான கொள்கையை” அடிக்கோடிட்டுக் காட்டின. இது பின்னர், “பரந்த பங்குதாரர்களின் ஆலோசனை தேவைப்படும்” மற்றும் அதன் பிறகு அரசியலமைப்பின் 44 வது பிரிவில் உள்ள அரசியலமைப்பு ஆணையை “கௌரவப்படுத்த” வேண்டும் என்று மாறியது.

இதையும் படியுங்கள்: இந்தியாவின் தனித்துவமான வேலைவாய்ப்பு நெருக்கடி

கடந்த 31 ஆண்டுகளில் 24க்கும் மேற்பட்ட முறைகளில் இருந்து, குறைந்தது 58 எம்.பி.க்கள் (பா.ஜ.க.விலிருந்து பாதி; காங்கிரஸிலிருந்து 9; சிவசேனாவின் 7; திரிணாமுல் காங்கிரஸ், பி.ஜே.டி., சி.பி.ஐ., அ.தி.மு.க மற்றும் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து தலா 2 பேர்; BSP, CPM மற்றும் IUML ஆகியவற்றிலிருந்து தலா 1; மற்றும் ஒரு சுயேட்சை) எழுப்பிய கேள்விகளுக்கு அரசாங்கத்தின் பதில்களைப் பாருங்கள்.

1991-04: ‘தலையீடு இல்லை’

ஜூலை 19, 1991 அன்று, பி.வி. நரசிம்மராவ் அரசாங்கத்தில் சட்ட அமைச்சராக இருந்த காங்கிரஸின் மறைந்த பி.ஆர். குமாரமங்கலம், சிவசேனாவின் அசோக் தேஷ்முக்கின் கேள்விக்கு பதிலளித்தார்: “அனைத்து குடிமக்களுக்கும் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவது என்பது சிறுபான்மை சமூகங்களின் தனிப்பட்ட சட்டங்களில் மாற்றங்களை உள்ளடக்கியதாக இருக்கும். மாற்றத்திற்கான முன்முயற்சி அத்தகைய சமூகங்களிடமிருந்து வராத வரையில் சிறுபான்மை சமூகங்களின் தனிப்பட்ட சட்டங்களில் தானாக தலையிடக் கூடாது என்பதே அரசாங்கத்தின் நிலையான கொள்கையாகும்.”

அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் இதே நிலைப்பாட்டையே பின்பற்றியது. ஆகஸ்ட் 17, 2000 அன்று, அப்போதைய சட்ட அமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜெட்லி, மக்களவையில் தனது பா.ஜ.க சகாவான யோகி ஆதித்யநாத்தின் கேள்விக்கு பதிலளித்தார்: “சிறுபான்மை சமூகத்தினரிடமிருந்து தேவையான முன்முயற்சிகள் வராத வரை, அவர்களின் தனிப்பட்ட சட்டங்களில் தலையிடக் கூடாது என்பது மத்திய அரசின் நிலையான கொள்கையாகும். எனவே, இது தொடர்பாக எந்த காலக்கெடுவையும் வகுக்க முடியாது” என்றார்.

நவம்பர் 29, 2001 அன்று, பிரிஜ்லால் காப்ரியின் (பி.எஸ்.பி) ஒரு கேள்விக்கு அருண் ஜேட்லி கூறினார்: “அரசாங்கத்தின் கொள்கையானது, அந்தச் சமூகங்களிடமிருந்து முன்முயற்சி வராத வரை, இந்தச் சட்டங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடாது.”

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலங்கள்

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திலும் இது தொடர்ந்தது, சிறுபான்மை சமூகங்களின் தனிப்பட்ட சட்டங்களில் மாற்றங்களுக்கான முன்முயற்சிகள் அத்தகைய சமூகங்களின் “கணிசமான பல்வேறு பிரிவுகளில்” இருந்து வர வேண்டும் என்ற கூடுதல் நிலைப்பாட்டுடன்.

ஜூலை 7, 2004 அன்று, சிவசேனாவின் சந்திரகாந்த் பௌராவ் கைரேயின் கேள்விக்கு பதிலளித்த இணை அமைச்சர் கே.வெங்கடபதி, “இத்தகைய மாற்றங்களுக்கான முன்முயற்சிகள் அத்தகைய சமூகத்தின் கணிசமான பல்வேறு பிரிவுகளில் இருந்து வரும் வரை, சிறுபான்மை சமூகங்களின் தனிப்பட்ட சட்டங்களில் தேவையின்றி தலையிடக்கூடாது என்பது மத்திய அரசின் நிலையான கொள்கையாகும்.”

ஆகஸ்ட் 4, 2006 அன்று, சிவசேனாவின் மோகன் ராவலேவின் கேள்விக்கு பதிலளித்த சட்ட அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜ் இதை மீண்டும் வலியுறுத்தினார். ஆகஸ்ட் 24, 2007 அன்று, யோகி ஆதித்யநாத் ஒரு கேள்வியை எழுப்பியபோது, ​​சிறுபான்மை சமூகத்தின் தனிப்பட்ட சட்டங்களில் “தலையிடக்கூடாது என்ற நிலையான கொள்கையை” இணை அமைச்சர் வெங்கடபதி மீண்டும் வலியுறுத்தினார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2 ஆவது ஆட்சி (2009-2014) காலத்தில், பா.ஜ.க.,வின் ராதா மோகன் சிங் (ஏப்ரல் 29, 2010) மற்றும் முரளி மனோகர் ஜோஷி (மார்ச் 10, 2011) ஆகியோரால் பொது சிவில் சட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இரண்டு கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, அத்தகைய மாற்றங்களுக்கு தேவையான முன்முயற்சிகள் “அத்தகைய சமூகங்களின் கணிசமான பல்வேறு பிரிவுகளில்” இருந்து வராத வரை, சிறுபான்மை சமூகங்களின் தனிப்பட்ட சட்டங்களில் “தலையிடக்கூடாது” என்ற அரசாங்கத்தின் “நிலையான கொள்கை” பற்றி குறிப்பிட்டார்.

13வது மக்களவையில் 2 முறை, 14வது மக்களவையில் 3 முறை, 15வது மக்களவையில் 2 முறை ஆகியவற்றை ஒப்பிடும்போது, ​​நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசாங்கத்தின் முதல் ஆட்சிக் காலத்தில் (2014-19), பொது சிவில் சட்டம் பற்றி உறுப்பினர்கள் குறைந்தது 13 முறை கேள்விகள் கேட்டனர்.

ஜூலை 14, 2014 அன்று, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் முன்மொழிகிறதா என்று யோகி ஆதித்யநாத் கேட்டதற்கு, சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “அரசியலமைப்புச் சட்டத்தின் 44வது பிரிவில் பொது சிவில் சட்டத்திற்கான கூறுகள் உள்ளது. இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்கு பரந்த அளவிலான பங்குதாரர்களின் ஆலோசனை தேவைப்படும்,” என்று பதிலளித்தார்.

ஏப்ரல் 23, 2015 அன்று, சட்ட அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா, அருண் ஷிரோலின் (பா.ஜ.க) கேள்விக்கு பதில் அளிக்கையில், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் “அதில் உள்ள விஷயத்தின் முக்கியத்துவம் மற்றும் உணர்திறன்” பற்றி குறிப்பிட்டார். மேலும், பங்குதாரர்களுடன் பரந்த “ஆலோசனை” தேவைப்படும் என்றும் கூறினார்.

ரஞ்சீத் ரஞ்சன், அர்ஜுன் மேக்வால், டாக்டர் சசி தரூர், நானா பட்டோல் மற்றும் டாக்டர் மனோஜ் ரஜோரியா ஆகிய ஐந்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, டிசம்பர் 3, 2015 அன்று, “பரந்த ஆலோசனையின்” அவசியத்தை சதானந்த கவுடா மீண்டும் வலியுறுத்தினார். மேலும், பிரிவு 44ன் கீழ் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு பல்வேறு தரப்பிலிருந்து சில பிரதிநிதித்துவங்களை அரசாங்கம் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மார்ச் 3, 2016 அன்று, காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.வி. தாமஸ் மற்றும் நானா பட்டோல் ஆகியோர், பொது சிவில் சட்டம் தொடர்பாக பங்குதாரர்களுடன் அரசாங்கம் ஆலோசனையைத் தொடங்கியுள்ளதா என்று கேட்டபோது, ​​”உள்ளடக்கிய விஷயத்தின் முக்கியத்துவம் மற்றும் உணர்திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பங்குதாரர்களுடன் விரிவான ஆலோசனை தேவை. இது சம்பந்தமாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதால், இவ்விடயத்தில் எந்தவொரு கடினமான காலக்கெடுவையும் வகுக்க முடியாமல் போகலாம்,” என்று சதானந்த கவுடா பதில் அளித்தார்.

ஜூலை 28, 2016 அன்று, இணை அமைச்சர் பி.பி.சௌத்ரியும் “வெவ்வேறு சமூகங்களை நிர்வகிக்கும் பல்வேறு தனிநபர் சட்டங்களின் விதிகள் பற்றிய ஆழமான ஆய்வு” தேவை என்பதை எடுத்துரைத்தார். டாக்டர் தோக்சோம் மெய்ன்யா, சந்து லால் சாஹு, சி.என்.ஜெயதேவன், ஜெயதேவ் கல்லா மற்றும் சி.மல்லா ரெட்டி ஆகிய ஐந்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். அடுத்தடுத்த பதில்களில், மார்ச் 15 மற்றும் மார்ச் 29, 2017, மற்றும் மார்ச் 28 மற்றும் ஏப்ரல் 4, 2018 ஆகிய நான்கு சந்தர்ப்பங்களில் “ஆழமான ஆய்வு” தேவை என்பதை சௌத்ரி மீண்டும் வலியுறுத்தினார்.

ஆலோசனைகளில் அழுத்தம்

2019 முதல் அதன் தற்போதைய ஆட்சிக் காலத்தில், அரசாங்கம் குறைந்தபட்சம் ஐந்து முறை பொது சிவில் சட்டம் தொடர்பாக எழுத்துப்பூர்வ பதில்களை அளித்துள்ளது.

ஜூலை 17, 2019 அன்று, ரமாபதி ராம் திரிபாதியின் (பா.ஜ.க) கேள்விக்கு அப்போதைய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அளித்த பதிலில், “அதில் உள்ள விஷயத்தின் முக்கியத்துவம் மற்றும் உணர்திறன் மற்றும் ஆழமான ஆய்வு தேவைப்படும் விஷயத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு சமூகங்களை நிர்வகிக்கும் பல்வேறு தனிநபர் சட்டங்களின் விதிகளில், பொது சிவில் சட்டம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை ஆய்வு செய்து பரிந்துரை செய்யுமாறு இந்திய 21வது சட்ட ஆணையத்திடம் அரசாங்கம் கோரியுள்ளது,” என்று கூறினார்.

அரசாங்கம் பொது சிவில் சட்டம் தொடர்பாக ஒரு மசோதாவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதா என துஷ்யந்த் சிங் (பா.ஜ.க) கேட்டதற்கு, ரவி சங்கர் பிரசாத் செப்டம்பர் 16, 2020 அன்று கூறினார்: “இந்திய அரசியலமைப்பின் 44 வது பிரிவு இந்திய பிரதேசம் முழுவதும் உள்ள குடிமக்களுக்கு பொது சிவில் சட்டத்தை பாதுகாக்க அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று கூறுகிறது. இந்த அரசியலமைப்பு ஆணையை மதிக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இருப்பினும், இதற்கு பரந்த அளவிலான ஆலோசனைகள் தேவை.”

கடந்த வாரம், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில், பொது சிவில் சட்டம் மீதான பா.ஜ.க.,வின் பார்வை அரசாங்கத்தின் பார்வையாக கருதப்பட வேண்டும் என்று கூறினார். ஜூலை 22 அன்று ஜனார்தன் சிங் சிக்ரிவால் (பா.ஜ.க) மற்றும் அடூர் பிரகாஷ் (காங்கிரஸ்) ஆகியோருக்கு பதிலளித்த கிரண் ரிஜிஜு மக்களவையில் கூறினார்: “மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் பொது சிவில் சட்டம் தொடர்பாக சில ரிட் மனுக்கள் நிலுவையில் உள்ளன. இந்த விவகாரம் நீதித்துறையில் உள்ளதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.”

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Explained civil code and govt stance