கோவிட் -19 சிகிச்சைக்காக அவசரகால சூழ்நிலைகளில் பயன்படுத்த சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பாளரான ரோச்சே நிறுவனம் ஒரு சோதனை ஆன்டிபாடி காக்டெய்ல்க்கு, இந்தியாவின் மத்திய மருந்துகள் தர நிர்ணய அமைப்பின் (சி.டி.எஸ்.கோ) ஒப்புதலை பெற்றுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு அக்டோபரில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டபோது இந்த மருந்தை எடுத்துக் கொண்டார்.
ஆன்டிபாடி காக்டெய்ல் என்றால் என்ன?
இது காசிரிவிமாப் (casirivimab) மற்றும் இம்டெவிமாப் (imdevimab) ஆகிய இரண்டு ஆன்டிபாடிகளின் கலவை ஆகும். இந்த காக்டெய்ல் அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு லேசான-மிதமான கோவிட் -19 சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. காசிரிவிமாப் மற்றும் இம்டெவிமாப் ஆகியவை மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் எனலாம், அல்லது வைரஸ்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் திறனைப் பிரதிபலிக்கும் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட புரதங்கள் என்றும் கூறலாம். காசிரிவிமாப் மற்றும் இம்டெவிமாப் ஆகியவை குறிப்பாக SARS-CoV-2 இன் ஸ்பைக் புரதத்திற்கு எதிராக இயக்கப்படுகின்றன, இது வைரஸின் இணைப்பு மற்றும் மனித உயிரணுக்களில் வைரஸ் நுழைவதைத் தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. "வைரஸ் ஸ்பைக்கின் வெவ்வேறு பகுதிகளுடன் பிணைக்கும் இரண்டு நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளின் குறிப்பிட்ட பொறியியல்நுட்பம் காரணமாக, காக்டெய்ல் இப்போது பரவியுள்ள வைரஸ் வகைகளுக்கு எதிராக செயல்திறன் மிக்கதாக உள்ளது, மேலும் புதிய வளர்ந்து வரும் மாறுபாடுகளைக் கொண்ட வைரஸ் வகைகளுக்கு எதிராகவும் அதன் நடுநிலைப்படுத்தும் திறனை இழக்கும் அபாயத்தை குறைக்கிறது" என்று ரோச்சே ஒரு அறிக்கையில் குறிப்பிடுகிறது.
இந்த காக்டெய்லை யாருக்கு பயன்படுத்தலாம்?
கடுமையான நோய்களை உருவாக்கும் அதிக ஆபத்தில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் குழந்தை நோயாளிகளில் (12 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்) கோவிட் -19 தொற்றின் லேசான முதல் மிதமான சிகிச்சைக்கு இந்த காக்டெய்ல் பயன்படுத்தப்பட உள்ளது. காசிரிவிமாப் மருந்தின் 600 மி.கி மற்றும் இம்டெவிமாப் மருந்தின் 600 மி.கி சேர்த்து 1200 மி.கி டோஸானது நரம்புகள் உட்செலுத்துதல் அல்லது தோலடி பாதை மூலம் உட்செலுத்துதல் மூலம் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இதை 2°C முதல் 8°C வரையிலான வெப்பநிலையில் சேமிக்க வேண்டும். இருதய நோய், நாள்பட்ட நுரையீரல் அல்லது சிறுநீரக நோய், நீரிழிவு போன்ற பல்வேறு இணை நோய்களை கொண்ட அதிக ஆபத்தில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு இந்த காக்டெய்லைப் பயன்படுத்தலாம்.
காக்டெய்லின் பயன் எவ்வளவு?
ஒரு பெரிய உலகளாவிய 3ஆம் கட்ட சோதனையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத அதிக ஆபத்துள்ள 4,567 கொரோனா நோயாளிகளிடம் பரிசோதித்ததில் இந்த காக்டெய்ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அளிக்கப்படும் சிகிச்சையின் தேவையும், 70% மரண ஆபத்தையும் குறைப்பதாக உள்ளது என ரோச்சே கூறுகிறது. காசிரிவிமாப் மற்றும் இம்டெவிமாப் ஆகியவையும் அறிகுறிகளின் கால அளவை நான்கு நாட்களாகக் குறைத்தன.
உற்பத்தியாளரிடம் காக்டெய்ல் இருப்பு எவ்வளவு உள்ளது?
"நாங்கள் சரியான நேரத்தில் மருந்துகளை வழங்குவதற்கான செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறோம்" என்று ரோச்சே பார்மா இந்தியாவின் நிர்வாக இயக்குனர் வி.சிம்ப்சன் இம்மானுவேல் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார். ரோச்சே நிறுவனம் இந்தியாவுக்கு மருந்துகளை இறக்குமதி செய்து, அதன் கூட்டு நிறுவனமான சிப்லா லிமிடெட் மூலம் சந்தைப்படுத்தி விநியோகிக்கும். இந்தியாவுக்கு அனுப்பப்படும் மருந்து பொருட்களின் எண்ணிக்கை மற்றும் விலை குறித்த தகவல்களை இப்போது கூற முடியாது என ரோச்சே நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் தகுதியான நோயாளிகளுக்கு காசிரிவிமாப் மற்றும் இம்டெவிமாப் மருந்துகள் கிடைக்க எங்கள் சந்தைப்படுத்தல் கூட்டாளர் சிப்லாவுடன் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். அனைத்து விவரங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன, சிப்லா லிமிடெட் விரைவில் வெளியீட்டு திட்டத்தை பகிர்ந்து கொள்ளம், ”என்று இம்மானுவேல் கூறினார். மேலும், உலக அளவில், அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்ய ரோச்சே மற்றும் அதன் கூட்டாளர் ரெஜெனெரோன் ஒத்துழைக்கின்றனர், என்றும் கூறியுள்ளார்.
காக்டெய்ல் வேறு எந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது?
இந்த மருந்து தற்போது அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை (EUA) பெற்றுள்ளது. டிரம்ப்க்கு கொரோனா நோயைக் கண்டறிந்தபோது இந்த மருந்தை அவர் எடுத்துக் கொண்டார். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் வழங்கப்பட்ட ஒப்புதல், அமெரிக்காவில் அவசர கால பயன்பாட்டிற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையிலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் மனித பயன்பாட்டிற்கான மருத்துவ தயாரிப்புகளுக்கான குழுவின் (சிஎச்எம்பி) விஞ்ஞான கருத்தின் அடிப்படையிலும் அமைந்துள்ளது என்று ரோச்சே கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.