Avishek G Dastidar , Iram Siddique
35,000 posts, 1.25 crore aspirants: railway recruitment process, and controversy: திங்களன்று, ரயில்வே தேர்வு வாரியத்தின் தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான வகை (NTPC) பதவிகளுக்கான தேர்வில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட முடிவுகளுக்கு எதிராக பீகாரில் ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கியமாக பீகாரிலும், சமூக ஊடகங்களிலும் தேர்வர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தாலும், அனைத்து செயல்முறைகளும் விதிகளின்படி நடந்ததாகவும், ஒரு ரயில்வே வேலையைப் பெறும் மற்றவர்களை விட தகுதியுள்ள எந்த ஒரு குழுவும் நியாயமற்ற அனுகூலத்தைப் பெற முடியாது என்றும் ரயில்வே கூறியுள்ளது.
எந்தெந்த பதவிகளுக்கான தேர்வு?
ரயில்வே தனது மண்டலங்களில் உள்ள ஜூனியர் கிளார்க், ரயில் உதவியாளர், கூட்ஸ் கார்டு, நேரக் காப்பாளர், ஸ்டேஷன் மாஸ்டர் போன்ற பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 35,281 பணியிடங்களுக்கு தேர்வை நடத்தி வருகிறது. இவற்றில் சுமார் 11,000 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சத் தகுதியாக 10+2 (12ஆம் வகுப்பு தேர்ச்சி) தேவை. மீதமுள்ள பணியிடங்கள் குறைந்த பட்ச தகுதியாக பட்டப்படிப்பு தேவைப்படும் அதிக ஊதியம் பெறும் பதவிகள். நிலை 2 முதல் நிலை 6 வரை ஐந்து ஊதிய தரங்களில் இந்தப் பதவிகள் பரவியுள்ளன.
உதாரணமாக, ஜூனியர் கிளார்க் என்பது லெவல் 2 (நிலை 2) பதவியாகும் (தொடக்க ஊதியம் ரூ. 19,900) இதற்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி என்பது குறைந்தபட்ச தகுதி. அதே நேரம் ஸ்டேஷன் மாஸ்டர் என்பது லெவல் 6 பதவி (தொடக்க ஊதியம் ரூ. 35,400) இதற்கு விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் பட்டதாரியாக இருக்க வேண்டும்.
தேர்வுகள் எவ்வாறு நடத்தப்பட்டன?
இந்தப் பணிகளுக்கு 1.25 கோடி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்ததால், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கணினி அடிப்படையிலான தேர்வு-1 (CBT-1) எனப்படும் பொதுவான தேர்வை ரயில்வே நடத்தியது. எப்படியும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதியுடைய பதவிகளுக்கு பட்டதாரி ஒருவர் தேர்வெழுதுவதை சட்டப்பூர்வமாக எதுவும் தடுக்காது என்பதால் பொதுவான தேர்வு நடைமுறை இருந்ததாக ரயில்வே கூறுகிறது.
இந்த காலியிடங்கள் 2019 இல் அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் தற்காலிகமாக செப்டம்பர் 2019 இல் நடத்தப்பட திட்டமிடப்பட்டது, ஆனால் மார்ச் 2020 க்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இறுதியில், ஏப்ரல்-ஜூலை 2020 க்கு இடையில் ஒவ்வொரு நாளும் இரண்டு ஷிப்டுகள் என CBT-1 தேர்வானது 68 நாட்களுக்கு 133 ஷிப்டுகளில் நடைபெற்றது. CBT-1 க்கான முடிவுகள் ஜனவரி 14, 2022 அன்று அறிவிக்கப்பட்டன.
வேலையை உறுதி செய்யும் அடுத்த கட்ட உண்மையான தேர்வான CBT-2 பிப்ரவரி நடுப்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. CBT-2 "தரப்படுத்தப்பட்ட கடினத்துடன்" இருக்கும் என்று ரயில்வே கூறுகிறது, அதில் ஒவ்வொரு நிலைக்கும் அந்த நிலை தகுதிக்கு ஏற்ப தனித் தேர்வு இருக்கும். எடுத்துக்காட்டாக, ஜூனியர் டைம் கீப்பர், அக்கவுண்ட்ஸ் கிளார்க் போன்ற பதவிகளைக் கொண்ட லெவல் 2 இல், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு 12-ம் வகுப்பு தரத்தில் கடினமான அளவில் இருக்கும். சீனியர் எழுத்தர், கூட்ஸ் கார்டு போன்ற பதவிகளைக் கொண்ட நிலை 5 க்கு, பட்டதாரி தேர்வர்களுக்கான தேர்வு பட்டதாரி அளவில் கடினமானதாக இருக்கும்.
இப்போதைய சர்ச்சை என்ன?
இந்த வேலைகளுக்கு அதிகமான மக்கள் போட்டியிடுவதை உறுதிசெய்ய, ரயில்வே இந்த முறை ஒரு விதியை உருவாக்கியுள்ளது, அதன்படி, ஒவ்வொரு நிலைக்கும், CBT-2 க்கு தகுதிபெறும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும். இது 2016 தேர்வின்போது, காலியிடத்தை விட 15 மடங்கு பட்டியலிடப்பட்டது. அதற்கு முன், 10 மடங்கு காலியிடங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி.
அதனால்தான், இந்த முறை, 35,281 காலியிடங்களுக்கு, அடுத்த சுற்றுக்கு பட்டியலிடப்பட்ட "விண்ணப்பதாரர்களின்" மொத்த எண்ணிக்கை 7 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
ஆனால் இரண்டாவது சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்களின் உண்மையான எண்ணிக்கை உண்மையில் 7 லட்சம் அல்ல, மாறாக 3.84 லட்சம்.
எடுத்துக்காட்டாக, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர், அவரது பதவி விருப்பம் மற்றும் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், நிலை 2 மற்றும் 3 ஆகிய இரண்டு காலியிடங்களுக்கும் பட்டியலிடப்பட்டிருக்கலாம். இதேபோல், அனைத்து நிலைகளிலும் உள்ள அனைத்து காலியிடங்களுக்கும் ஒரு பட்டதாரி தேர்வர் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். CBT-2 க்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,05,446 ஆக உள்ளது. விண்ணப்பங்களின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டதாக ரயில்வே கூறுகிறது, அதாவது: ஒரு நபர் நிலை 2 மற்றும் நிலை 5 க்கு விண்ணப்பித்திருந்தால், பதவிகளின் எண்ணிக்கையை விட 20 மடங்கு அதிகம் தேர்வு செய்யப்படுகையில், அந்த நபரின் மதிப்பெண்களின் அடிப்படையில், அவர் இரண்டு வகைகளிலும் கணக்கிடப்படுவார்.
குறைந்த தகுதியுடையவர்களுக்கான வேலை வாய்ப்புகளில் அதிக தகுதி உள்ளவர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும், குறைந்த தகுதியுடையவர்களின் வாய்ப்புகள் பறி போகும் என்றும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
ரயில்வேயின் வாதம் என்ன?
இது அவ்வளவு எளிதல்ல என்று ரயில்வே தெரிவித்துள்ளது. பல பதவி நிலைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒருவர் CBT-2 தேர்வெழுத முடியும், ஆனால் அந்த நபர் உண்மையில் பல வேலைகளைப் பெறுகிறார் என்று அர்த்தம் கொள்ள முடியாது என ரயில்வே கூறுகிறது.
ஏனென்றால், சான்றிதழ் சரிபார்ப்பு எனப்படும் இறுதிச் சுற்றில், ரயில்வே உயர் நிலைப் பதவிகளுக்கான செயல்முறையை முதலில் நடத்தும், அதாவது முதலில் நிலை 6, அதைத் தொடர்ந்து நிலை 5 மற்றும் அடுத்தடுத்த நிலைகள். ஒரு லெவலில் வேலை பெற எம்பேனல் செய்யப்பட்ட எந்த நபரும் அடுத்த நிலைக்குக் கருதப்பட மாட்டார்கள். இதன் விளைவாக, ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு நிலைகளில் உறுதிப்படுத்தப்பட்ட இரண்டு ரயில்வே வேலை வாய்ப்புகளை யாராலும் "பெற" முடியாது.
“முதலில் உயர்நிலைகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துவோம். அந்த வகையில், ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கு யாராவது தகுதி பெற்றால், TTE அல்லது பிற கீழ்நிலைப் பணிகளுக்கு அவர் இனி பரிசீலிக்கப்பட மாட்டார்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத RRB இன் தலைவர் ஒருவர் கூறினார். மேலும், "ஆனால், அதிக ஊதியம் பெறும் வேலையை விரும்பவில்லை என்றும், குறைந்த ஊதிய வேலைக்குச் செல்வதாகவும் ஒருவர் கூறினால், அது அவர்களின் விருப்பம், ஆனால் அது சாத்தியமில்லை." என்றும் அவர் கூறினார்.
போராட்டக்காரர்களின் கவலைகளை ரயில்வே எவ்வாறு நிவர்த்தி செய்கிறது?
அனைத்து செயல்முறைகளும் விதிகளின்படி நடக்கிறது என்று ரயில்வே சமூக ஊடகங்களில் பலமுறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், தேர்வு மற்றும் திரையிடலை நிர்வகிக்கும் அனைத்து நிபந்தனைகளும் சம்பந்தப்பட்ட தேர்வு நடைமுறைக்கான விரிவான அறிவிப்பில் எப்போதும் வெளியிடப்படும் என்று ரயில்வே கூறுகிறது.
எந்தவொரு சர்ச்சையையும் நிராகரிக்க, ரயில்வே ஸ்கிரீனிங் தேர்வின் விடைத்தாள்களை அதன் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் வெளியிடுகிறது. மேலும், ஆட்சேபனைகளைத் தெரிவிக்கவும் தேர்வர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள், ரயில்வே தேர்வு வாரியங்கள் அவர்களுக்கு தெளிவுபடுத்தும். இந்த செயல்முறை முடிந்த பிறகுதான் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அடுத்த சுற்றுக்கு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முந்தைய நாட்களில், ஒவ்வொரு ரயில்வே தேர்வு வாரியமும் அதன் தேர்வை தனித்தனியாக நடத்தி வந்தன. மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை தொடங்க அந்த நடைமுறை இறுதியில் நிறுத்தப்பட்டது.
ரயில்வேயில் 18,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 2016ஆம் ஆண்டு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் அப்போது நிரப்பப்படும் பணியிடங்களுக்கு பட்டப்படிப்பை குறைந்தபட்ச கல்வித் தகுதியாகக் கொண்டிருக்க வேண்டியிருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.