ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த 2 வயதான ஆக்சல் என்ற ராணுவ நாய் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது. ஆக்சலுக்கு ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
ஜூலை 30ஆம் தேதி தாக்குதல், ஆக்சல் உயிரிழப்பு
கடந்த ஜூலை 30ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ராணுவ மோப்ப நாய் ஆக்சல் உதவியுடன் வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஓர் அறையில் பதுங்கியிருந்த பயங்கரவாதி துப்பாக்கி சூடு நடத்தியதில் ஆக்சல் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்தது. ராணுவ கால்நடை மருத்துவமனையில் மேற்கொண்ட உடற்கூராய்வில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு காயம் ஏற்பட்டிருப்பதாகவும், எலும்பு முறிவு ஏற்பட்டதும் தெரியவந்தது. ஆக்சலுக்கு ராணுவ உயர் அதிகாரிகள் மலர் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்திய ராணுவத்தில் எத்தனை மோப்ப நாய் பிரிவுகள் உள்ளன?
ராணுவத்தில் 25 முழு நேர மோப்ப நாய் படை பிரிவு, 2 பகுதி நேர மோப்ப நாய் படை பிரிவுகள் உள்ளன. முழு நேர மோப்ப நாய் படை பிரிவில் 24 நாய்களும், பகுதி நேர மோப்ப நாய் படை பிரிவில் 12 நாய்களும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோப்ப நாய் பிரிவில் பல்வேறு வகையான நாய்கள் பயிற்சி பெற்று பணியில் ஈடுபட்டு வருகின்றன. லாப்ரடோர், ஜெர்மன் ஷெப்பர்ட், பெல்ஜியன் மாலினோயிஸ், கிரேட் மவுண்டன் ஸ்விஸ் ஆகிய வகை நாய்கள் பணியமர்த்தப்படுகிறது. உயிரிழந்த ஆக்சல் பெல்ஜியன் மாலினோயிஸ் வகை நாய் என கூறப்பட்டுள்ளது.
ராணுவத்தில் நாய்களின் பணி, சேவை
ராணுவ நாய்கள் நாட்டுக்கு பல்வேறு வகையான கடமைகளை செய்ய பயிற்றுவிக்கப்படுகிறது. அவை மேற்கொள்ளும் பணிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தல், ரோந்து பணி, உயர்தர வெடிமருந்துகளை மோப்பம் பிடித்தல், கண்ணிவெடி கண்டறிதல், போதைப்பொருள் கண்டறிதல், எதிரியின் இலக்கை கண்டறிந்து முறியடித்தல், மறைந்திருக்கும் பயங்கரவாதிகளை தேடுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறது.
ஒவ்வொரு ராணுவ நாயுடனும் ஒரு பயிற்சியாளர் இருப்பர். அவர் நாயை பராமரித்து, கண்காணித்து பயிற்சி வழங்குவர். மீரட்டில் உள்ள ரீமவுண்ட் கால்நடை மருத்துவ மையம் மற்றும் பள்ளியில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நாயின் வகை, தகுதியின் அடிப்படையில் அதற்கு பல்வேறு திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ராணுவ நாய்கள் 8 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்கின்றன.
ராணுவ நாய்களுக்கு கௌரவம்
துணிச்சலான செயல்கள் மற்றும் சிறந்த சேவைக்காக இந்திய ராணுவ நாய்கள் உயர் அதிகாரிகளால் கௌரவிக்கப்படுகிறது. ராணுவ தலைமைப் பணியாளர் பாராட்டு அட்டை, துணை தலைமை பணியாளர் பாராட்டு அட்டை போன்றவற்றை பெற தகுதியுடையதாகிறது. நாயின் பயிற்சியாளருக்கும் விருது வழங்கப்படுகிறது. ஷௌர்ய சக்ரா மற்றும் சேனா பதக்கம் வழங்கப்படுகிறது.