நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் கேள்விகளை அனுமதிக்க/ நிராகரிக்க விதிமுறைகள் என்ன?

Explained: How MPs’ questions are allowed, disallowed: பதிலுக்காக பட்டியலிடப்பட்ட ராஜ்யசபா எம்பி வேணுகோபாலின் கேள்வி நீக்கப்பட்டது. இரு அவைகளிலும் கேள்விகளை எழுப்புவதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும், பதில் அளிப்பதற்கும் உள்ள விதிகள் என்ன?

ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபாலின் டிசம்பர் 2 ஆம் தேதி பதிலளிக்க பட்டியலிடப்பட்ட கேள்வி, இறுதியாக ஒப்புக்கொள்ளப்பட்ட கேள்விகளின் பட்டியலிலிருந்து எவ்வாறு நீக்கப்பட்டது என்பதை செவ்வாயன்று, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பதிவு செய்திருந்தது. அவரது கேள்வி என்னவென்றால், என்ஆர்ஐக்கள் விமான நிலையங்களில் துன்புறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்களா, மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு உதவுவதை நிறுத்துமாறு சிலரை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனரா என்பது தான்.

மேலும் புதன்கிழமை, பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி, தான் எழுப்பிய கேள்விக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றார். “லடாக்கில் சீனர்கள் LAC ஐத் தாண்டிவிட்டார்களா என்ற எனது கேள்வியை “தேசிய நலன் காரணமாக அனுமதிக்க முடியாது” என்று ராஜ்யசபா செயலகம் இன்று எனக்குத் தெரிவிப்பது பெருங்களிப்புடையதாக இல்லாவிட்டாலும், துயரமாக இருக்கிறது என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

கடந்த சில அமர்வுகளில், முக்கியமாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்களின் கேள்விகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அடிக்கடி குற்றம்சாட்டி வந்தனர்.

கேள்விகள் எவ்வாறு அனுமதிக்கப்படுகின்றன?

இரு அவைகளிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நட்சத்திரமிட்ட கேள்விகள் (Starred questions), நட்சத்திரமிடப்படாத கேள்விகள் (Unstarred questions), குறுகிய அறிவிப்பு கேள்விகள் (Short notice questions) மற்றும் உறுப்பினர்களின் தனிப்பட்ட கேள்விகள் (Questions to private members) போன்ற வடிவங்களில் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கான உரிமையை பெறுகிறார்கள்.

வழக்கமாக, பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகள் ஒரு நீண்ட பட்டியலை உருவாக்குகின்றன, பின்னர் அவை கடுமையான நடைமுறைகள் மூலம் அனுமதிக்கப்படும். ராஜ்யசபாவில் கேள்விகளை ஏற்றுக்கொள்வது என்பது மாநிலங்களவையின் நடைமுறை மற்றும் வணிக நடத்தை விதிகளின் 47-50 விதிகளால் நிர்வகிக்கப்படுகிறது. அனுமதியின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யக்கூடிய கேள்வி பெறப்பட்டவுடன், செயலகம் அதை சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு அனுப்புகிறது. அமைச்சகத்திடம் இருந்து விவரங்கள் பெறப்பட்டவுடன், கேள்வி ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு மேலும் ஆராயப்படுகிறது. கேள்விகளின் இறுதி பட்டியல் அமைச்சர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது, அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் பதில்களை உருவாக்குகிறார்கள்.

லோக்சபாவில், கேள்விகளுக்கான நோட்டீஸ் கிடைத்ததும், பேலட்ஸ் (Ballots) முன்னுரிமையை நிர்ணயிக்கும். நட்சத்திரமிட்ட, நட்சத்திரமிடப்படாத மற்றும் குறுகிய அறிவிப்பு கேள்விகள் தனித்தனியாக மென்பொருளில் உள்ளிடப்படும். அடுத்து, லோக்சபாவின் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதிகள் 41-44 இன் கீழ் கேள்விகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஆராயப்படுகின்றன.

கேள்விகளுக்கு பதிலளிக்க, அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஐந்து குழுக்களாக (I முதல் V வரை) பிரிக்கப்பட்டுள்ளன, அவை முறையே திங்கள், செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சருக்கும் ராஜ்யசபாவில் கேள்விகளுக்குப் பதிலளிக்க வாரத்தில் ஒரு நாள் என்றும், லோக்சபாவில் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு மற்றொரு நாள் என்றும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நட்சத்திரமிட்ட, நட்சத்திரமிடப்படாத மற்றும் பிற வகை கேள்விகள் என்றால் என்ன?

நட்சத்திரமிட்ட கேள்வி: பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சரிடம் இருந்து வாய்மொழி பதிலை எதிர்ப்பார்க்கிறார். அத்தகைய கேள்வியை எம்.பி ஒரு நட்சத்திர அந்தஸ்துடன் வேறுபடுத்துகிறார். இதில் பதிலைத் தொடர்ந்து உறுப்பினர்கள் துணைக் கேள்விகளையும் கேட்கலாம்.

நட்சத்திரம் இடப்படாத கேள்வி: பாராளுமன்ற உறுப்பினர் எழுத்துப்பூர்வ பதிலைக் கோருகிறார், இது சம்பந்தப்பட்ட அமைச்சரால் அவையில் வைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

குறுகிய அறிவிப்பு கேள்வி: இவை பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அவசர விஷயங்களைக் கொண்ட கேள்விகள், இதில் அமைச்சரிடம் இருந்து வாய்வழி பதில் தேடப்படுகிறது. அத்தகைய கேள்வியைக் கேட்பதற்கான குறைந்தபட்ச காலகட்டமாக 10 நாட்களுக்கு குறைவான அறிவிப்பு பரிந்துரைக்கப்படுகிறது.

உறுப்பினரின் தனிப்பட்ட கேள்வி: லோக்சபாவின் நடைமுறை விதிகளின் விதி 40ன் கீழ் அல்லது ராஜ்யசபா விதிகளின் விதி 48ன் கீழ் சில மசோதாக்கள் தொடர்பாக ஒரு உறுப்பினர் தனிப்பட்ட கேள்வி கேட்கலாம், ஆனால் அந்த கேள்விக்கு அந்த உறுப்பினர் தான் பொறுப்பு.

கேள்விகள் எப்போது கேட்கப்படும்?

இரு அவைகளிலும், ஒவ்வொரு அமர்வின் முதல் ஒரு மணிநேரம் பொதுவாக கேள்விகளைக் கேட்பதற்கும் பதிலளிப்பதற்கும் ஒதுக்கப்படுகிறது, மேலும் இது ‘கேள்வி நேரம்’ என்று குறிப்பிடப்படுகிறது.

வாய்வழி பதில்களுக்கான 15 கேள்விகள், எழுத்துப்பூர்வ பதில்களுக்காக ஒரு பட்டியலிலிருந்து மற்றொரு பட்டியலிலிருந்து ஒத்திவைக்கப்பட்ட கேள்விகள் மற்றும் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் மாநிலங்கள் தொடர்பான 15 கேள்விகள் உட்பட ஒரு நாளுக்கான மொத்த கேள்விகளின் எண்ணிக்கை 175 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

என்ன மாதிரியான கேள்விகள் கேட்கலாம்?

கேள்விகளின் அனுமதியானது ராஜ்யசபா விதிகள் 47-50 மற்றும் லோக்சபா 41-44 மூலம் நிர்வகிக்கப்படுகிறது. ராஜ்யசபா தலைவர் அல்லது லோக்சபா சபாநாயகருக்கு, சபையின் விதிமுறைகளின்படி ஒரு கேள்வி அல்லது அதன் ஒரு பகுதி ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது ஏற்றுக்கொள்ள முடியாததா என்பதை தீர்மானிக்கும் அதிகாரமும் மற்றும் எந்தவொரு கேள்வியையும் அல்லது அதன் ஒரு பகுதியையும் அனுமதிக்க மறுக்கும் அதிகாரமும் உண்டு.

ராஜ்யசபாவில், பல்வேறு நெறிமுறைகளுக்கு மத்தியில், “தனித்துவமானதாகவும், குறிப்பிட்டதாகவும், ஒரு பிரச்சினையை மட்டும் வெளிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்; கேள்வியை தெளிவாக்குவதற்கு கண்டிப்பாக தேவையில்லாத எந்தவொரு பெயரையும் அல்லது அறிக்கையையும் கேள்வி கொண்டு வரக்கூடாது; அதில் ஒரு அறிக்கை இருந்தால், அந்த அறிக்கையின் உண்மைத்தன்மைக்கு சம்பந்தப்பட்ட உறுப்பினர் பொறுப்பேற்க வேண்டும்; அதில் வாதங்கள், அனுமானங்கள், முரண்பாடான வெளிப்பாடுகள், குற்றச்சாட்டுகள், அடைமொழிகள் அல்லது அவதூறான அறிக்கைகள் இருக்கக்கூடாது.

லோக்சபாவில், அனுமதிக்கப்படாத கேள்விகள் பின்வருமாறு: திரும்பத் திரும்ப கேட்கப்பட்டவை அல்லது முன்பு பதில் அளிக்கப்பட்டவை; எந்தவொரு நீதிமன்றத்தின் முன் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ள அல்லது பாராளுமன்றக் குழுவின் முன் பரிசீலனையில் உள்ள விஷயங்கள்.

எத்தனை முறை கேள்விகள் அனுமதிக்கப்படவில்லை?

மாநிலங்களவை தரவுகளின்படி, கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் 833 கேள்விகள் அனுமதிக்கப்படவில்லை. ஒப்பிடுகையில், 2013-14 குளிர்காலக் கூட்டத் தொடரில், ராஜ்யசபா 748 கேள்விகளுக்கு அனுமதி மறுத்தது. ஒருமுறை அனுமதிக்கப்படாவிட்டால், உறுப்பினர்கள் முடிவைச் சவால் செய்வது பெரும்பாலும் கடினமாக இருக்கும்.

இந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடரின் போது:

இந்தியாவில் பல ஃபோன்களை ஹேக் செய்ய Pegasusஐ தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான உலகளாவிய சர்ச்சையின் மையத்தில், இஸ்ரேலிய சைபர் செக்யூரிட்டி நிறுவனமான NSO குழுமத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளதா என்பது குறித்த விவரங்களைக் கோரும் கேள்விக்கு ராஜ்யசபாவில் அனுமதி மறுக்கப்பட்டது. “உச்ச நீதிமன்றத்தில் பல பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால்” இந்த பிரச்சனை சப் ஜூடிஸ் என்று அரசாங்கம் கூறியது.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிலளிக்க திட்டமிடப்பட்டுள்ள சிபிஐ எம்பி பினோய் விஸ்வம் கேட்ட “தற்காலிகமாக ஒப்புக்கொள்ளப்பட்ட கேள்வி”க்கு அனுமதி வழங்கப்படக்கூடாது என்று ராஜ்யசபா செயலகத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. மத்திய அரசு விதி 47 (xix) ஐ மேற்கோள் காட்டியது, அதில் “இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அதிகார வரம்பைக் கொண்ட நீதிமன்றத்தின் தீர்ப்பின் கீழ் உள்ள விஷயத்தைப் பற்றிய தகவலைக் கேட்கக்கூடாது” என்று கூறுகிறது.

“ஜனநாயகக் குறியீட்டில் இந்திய நிலை” என்ற தலைப்பில் ஜூலை 22 அன்று பதில் அளிக்கப்பட வேண்டிய திரிணாமுல் எம்.பி சாந்தா சேத்ரி கேட்ட கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம், கேள்வி சென்சிடிவ் ஆனது எனவே அனுமதிக்க கூடாது என அவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தது.

“முன்னர் கேள்விகள் மிகவும் அரிதாகவே அனுமதிக்கப்படவில்லை; இப்போது இது போன்ற நிகழ்வுகள் மிகவும் வழக்கமாகி வருகின்றன. சப் ஜூடிஸ் விஷயமா அல்லது தேசிய பாதுகாப்பு விஷயமா என பல கேள்விகள் அனுமதிக்கப்படவில்லை… நாங்கள் கேள்விகளை அடிக்கடி அனுமதித்தோம், தீவிரமான பிரச்சனை வந்தால் மட்டுமே சபாநாயகர் அல்லது ராஜ்யசபா தலைவரிடம் அரசாங்கம் கோரிக்கை வைக்கும். என்று மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் பிடிடி ஆச்சார்யா கூறினார்.

“ஒரு கேள்விக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஒரு நல்ல காரணத்தைக் கொடுக்க வேண்டும்… பாராளுமன்றத்தின் சிறப்புரிமை காரணமாக ஆர்டிஐ மூலமாகவும் அதற்கான காரணத்தை அணுக முடியாது. அதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதும் கடினம். ஒருமுறை ஒரு கேள்வி அனுமதிக்கப்படவில்லை என்றால், அது அனுமதிக்கப்படாது, அதை எதிர்த்துப் போட்டியிட வழி இல்லை, ”என்று ஆச்சார்யா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Explained mp questions are allowed

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express