கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை; ஏன் கோவாக்ஸ் வசதியில் சேர பஞ்சாப் விரும்புகிறது?

Punjab’s Covid-19 vaccine shortage, and why it wants to join Covax facility: தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில், உலகளாவிய உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக தடுப்பூசிகளை வாங்குவதற்கான மாநிலங்களின் முயற்சியோ, கோவாக்ஸில் சேருவதற்கான பஞ்சாபின் முடிவோ பலனளிக்காது.

பஞ்சாப் அரசு கொரோனா தடுப்பூசிகளின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதால், தடுப்பூசிகளை வாங்குவதற்காக உலகளாவிய கோவாக்ஸ் வசதியில் சேர முடிவு செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை அன்று அறிவித்துள்ளது. பல மாநிலங்களும், பிரான் மும்பை மாநகராட்சியும் கடந்த சில நாட்களாக வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன.

தற்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில், உலகளாவிய உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக தடுப்பூசிகளை வாங்குவதற்கான மாநிலங்களின் முயற்சியோ, கோவாக்ஸில் சேருவதற்கான பஞ்சாபின் முடிவோ பலனளிக்காது. பஞ்சாபின் விஷயத்தில், உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான கோவாக்ஸ் தளத்தில் சேர பஞ்சாப் தகுதியுடையதா என்பது கூட தெளிவாகத் தெரியவில்லை. கோவாக்ஸ் தளம் உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி சமமான மற்றும் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்கிறது. இதுவரை, கோவாக்ஸ் நாடுகளின் மட்டத்தில் மட்டுமே செயல்பட்டு வருகிறது அதாவது தடுப்பூசிகளை வாங்கி தேசிய அரசாங்கங்களுக்கு வழங்குகிறது.

தடுப்பூசி பற்றாக்குறை

தடுப்பூசிகளைத் தானாகவே வாங்க மாநிலங்கள் அறிவித்த முயற்சிகள், இந்தியாவில் தற்போது நிலவும் தடுப்பூசிகளின் பற்றாக்குறையின் நேரடி விளைவாகும், ஆனால் இது தடுப்பூசி செலுத்தும் முயற்சிகளை குறைத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சராசரியாக சுமார் 22 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இது கடந்த சில மாதங்களில் இந்தியா செய்ய முடிந்ததை விட மிகக் குறைவு. அப்போது சராசரியாக சுமார் 35 லட்சம் டோஸ் வழங்கப்பட்டது. தற்போது தேவையை விட மிகக் குறைவாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. (வரைபடத்தைப் பார்க்கவும்)

இந்த ஆண்டு இறுதிக்குள் முழு வயதுவந்த மக்களுக்கும் நோய்த்தடுப்பு அளிக்க இந்தியா ஒரு நாளைக்கு குறைந்தது 10 மில்லியன் (1 கோடி) டோஸ் அளவிற்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இந்தியா இதுவரை, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் தயாரிக்கும் இரு தடுப்பூசி மருந்துகளை பயன்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட ரஷ்ய ஸ்பூட்னிக் வி உட்பட இன்னும் பல தடுப்பூசிகள் இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் சேர உள்ளன. எல்லாம் அரசாங்கத்தின் திட்டத்தின் படி சென்றால், ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் 216 கோடி – 2 பில்லியனுக்கும் அதிகமான – தடுப்பூசிகள் இந்தியாவில் கிடைக்கும் என்று வியாழக்கிழமை இந்திய அரசாங்கம் கூறியுள்ளது. அது நடந்தால், நாட்டின் ஒவ்வொரு வயது வந்தோருக்கும் தடுப்பூசி செலுத்த போதுமானதாக இருக்கும். ஆனால் இந்த குறுகிய காலத்தில் குறைந்தபட்சம், தடுப்பூசிகளின் பற்றாக்குறை நீடிக்க வாய்ப்புள்ளது.

துரதிர்ஷ்டவசமாக மாநில அரசாங்கங்களுக்கு, தடுப்பூசிகள் உலக சந்தையிலும் கிடைக்கவில்லை. தற்போது உலகளவில் பதினான்கு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன, அவற்றில் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை. பல உற்பத்தியாளர்கள் முன்கூட்டியே மில்லியன் கணக்கான அளவை முன்பதிவு செய்த நாடுகளுக்காக, தங்கள் முந்தைய கடமைகளை நிறைவேற்ற போராடி வருகின்றனர்.

பஞ்சாப்பின் தேடல் என்ன?

தடுப்பூசிகளை அணுக கோவாக்ஸில் சேரப்போவதாக பஞ்சாப் அறிவித்திருந்தாலும், அந்த வசதி மூலம் பொருட்களைப் பெறுவதற்கு கூட அது தகுதி இல்லை. மேலும், உற்பத்தியாளர்கள் மற்றும் நன்கொடை நாடுகளிடமிருந்து தடுப்பூசிகளைப் பெற கோவாக்ஸே போராடி வருகிறது.

WHO தலைமையிலான கோவாக்ஸ் முயற்சி கடந்த ஆண்டு, தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கான குறிப்பிட்ட நோக்கத்துடன் GAVI (தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணி), மற்றும் தொற்றுநோய்களுக்கான தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி (CEPI) உடன் இணைந்து அமைக்கப்பட்டது. இது அனைவருக்கும், குறிப்பாக ஏழ்மையான நாடுகளில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி கிடைக்கச் செய்கிறது.

ஒரு சில பணக்கார நாடுகள், அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளவர்கள் கடந்த ஆண்டு தடுப்பூசி உருவாக்குநர்களுடன், அவர்களுடைய எந்தவொரு தடுப்பூசிகளும் அங்கீகரிக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே முன்பதிவு செய்திருந்தனர். ஆறு உற்பத்தியாளர்களுக்கு அமெரிக்கா 10 பில்லியன் டாலருக்கும் முன்கூட்டியே பணம் செலுத்தியுள்ளது, அதன் ஒவ்வொரு குடிமக்களுக்கும் இரண்டு அளவுகளுக்கு மேல் கிடைக்குமாறு முன்பதிவு செய்துள்ளது. இந்த முன்கூட்டியே செய்த முன்பதிவுகளுக்கு சேவை செய்வது உற்பத்தியாளர்களை பல மாதங்கள் பிஸியாக வைத்திருக்கும், அது கூட அவை அதிகபட்ச திறனில் உற்பத்தி செய்ய முடிந்தால் மட்டுமே.

இந்த அணுகுமுறை, வளரும் மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த உலகில் பெரும்பாலான நாடுகளுக்கு பல மாதங்களுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுத்தும். கோவாக்ஸ் வசதி உதவியாக இருக்க வேண்டியது இங்கே தான் – திறந்த சந்தையில் வாங்குவதற்கான வளங்கள் இல்லாத நாடுகளுக்கு மட்டுமல்லாமல், முன்பதிவு செய்யாததால் காலவரையின்றி காத்திருக்க வேண்டியவர்களுக்கும் இந்த தளம் உதவ வேண்டும்.

கோவாக்ஸ் அதன் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளை கூட்டாக வாங்குகிறது, பின்னர் ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் மக்கள்தொகையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளுக்கு தடுப்பூசி போட உதவும் வகையில் அவற்றை ஒதுக்குகிறது.

கோவாக்ஸ் இதுவரை 122 நாடுகளுக்கு 59 மில்லியன் தடுப்பூசி அளவை வழங்கியுள்ளது. ஆனால் இதுவரை எந்தவொரு துணை தேசிய நிறுவனமும் இந்த விநியோகங்களிலிருந்து பயனடையவில்லை. இந்த விநியோகச் சங்கிலி கூட நிதி பற்றாக்குறை மற்றும் தடுப்பூசிகள் கிடைக்காத காரணத்தினால் பாதிக்கப்படுகிறது.

தேசிய அரசாங்கங்கள் மட்டுமே அதை அணுக தகுதியுடையவர்களாக இருக்கும்போது கோவாக்ஸிலிருந்து தடுப்பூசிகளை பஞ்சாப் எப்படி பெற முடியும் என்று கேட்டதற்கு, மாநில தலைமைச் செயலாளர், அரசாங்கம் அனைத்து சாத்தியங்களையும் ஆராய்ந்து வருவதாகவும், வியாழக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கோவாக்ஸை அணுகுவதற்கான ஆலோசனை வந்துள்ளது என்றும் கூறினார்.

“எங்கள் மக்களுக்கு தடுப்பூசிகளை அணுகுவதற்கான சாத்தியங்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இது அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நல்ல ஆலோசனையாகும். நாங்கள் அனைத்து சாத்தியங்களையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம், ”என்று தலைமைச் செயலாளர் வினி மகாஜன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

தடுப்பூசிக்கான பாதை

இப்போதைக்கு, மத்திய அரசால் வெளியிடப்பட்ட தடுப்பூசி திட்டம் இந்தியாவுக்கு மிகச் சிறந்த சூழ்நிலையாகத் தெரிகிறது. உள்நாட்டில் வளர்ந்த மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பல தடுப்பூசிகள் அடுத்த சில மாதங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தின்  பட்டியலில் உள்ள தடுப்பூசிகளில், ஸ்பூட்னிக் வி மற்றும் நோவாவாக்ஸ் போன்றவை வருவது உறுதி, மற்ற தடுப்பூசிகளான ஜைடஸ் காடிலாவால் உருவாக்கப்பட்ட தடுப்பூசி அல்லது ஜென்னோவா போன்றவை ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டுள்ளது.

இதற்கிடையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகியவை உற்பத்தித் திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்திற்குள் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 150 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்யத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Explained punjabs covax hope

Next Story
சி.டி.சி முககவசங்கள் குறித்த தனது ஆலோசனையை மாற்றியது ஏன்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com