Explained: The Indian Antarctic Bill introduced in Lok Sabha: அண்டார்டிக் ஒப்பந்தத்தில் இந்தியா முதன்முதலில் கையெழுத்திட்ட சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசாங்கம் இந்திய அண்டார்டிக் மசோதா, 2020 வரைவைக் கொண்டு வந்துள்ளது. புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்தர் சிங் வெள்ளிக்கிழமை மக்களவையில் இந்த வரைவு மசோதாவை தாக்கல் செய்தார்.
அண்டார்டிகா மசோதா என்றால் என்ன?
இது இந்தியாவில் அண்டார்டிகா தொடர்பான முதல் உள்நாட்டுச் சட்ட வரைவு மசோதாவாகும்.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெலாரஸ், பெல்ஜியம், கனடா, சிலி, கொலம்பியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, பெரு, ரஷ்ய கூட்டமைப்பு, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், ஸ்வீடன், துருக்கி, உக்ரைன், யுனைடெட் கிங்டம், யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா, உருகுவே மற்றும் வெனிசுலா உள்ளிட்ட இருபத்தேழு நாடுகள் ஏற்கனவே அண்டார்டிகா தொடர்பான உள்நாட்டுச் சட்டங்களைக் கொண்டுள்ளன. இந்தியா போன்ற பல நாடுகள் இப்போது இதைப் பின்பற்றுகிறார்கள்.
கடந்த 40 ஆண்டுகளாக இந்தியா அண்டார்டிகாவிற்கு பயணங்களை அனுப்பி வரும் நிலையில், இந்த பயணங்கள் சர்வதேச சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மசோதா இப்போது அண்டார்டிகா தொடர்பான விதிமுறைகளின் விரிவான பட்டியலை அறிமுகப்படுத்துகிறது, இந்த விதிமுறைகள் அறிவியல் பயணங்கள், தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும்.
வரும் ஆண்டுகளில் அண்டார்டிகாவில் இந்தியாவின் செயல்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சகம் விளக்கியுள்ளது. மேலும், இதனால் உள்நாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துவது அவசியம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா கையொப்பமிட்டுள்ள அண்டார்டிக் ஒப்பந்தம் மற்றும் அது தொடர்பான நெறிமுறைகளுக்கு, இந்த உள்நாட்டுச் சட்டம் கூடுதல் வலு சேர்க்கும்.
இந்த மசோதாவின் மிக முக்கியமான பகுதி, இந்தியக் குடிமக்கள் அல்லது இந்தியப் பயணங்களின் ஒரு பகுதியாக இருக்கும் வெளிநாட்டுக் குடிமக்கள் அண்டார்டிகாவில் செய்யும் குற்றங்களின் விசாரணைக்காக, இந்திய நீதிமன்றங்களின் அதிகார வரம்பை அண்டார்டிகா வரை நீட்டிப்பதாகும். சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றங்கள் உட்பட, பயணத்தின் போது செய்யப்பட்ட குற்றங்களுக்கு இதுவரை எந்த விசாரணையும் இருந்ததில்லை.
அண்டார்டிகா ஒப்பந்தம் என்றால் என்ன?
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சிலி, பிரெஞ்சு குடியரசு, ஜப்பான், நியூசிலாந்து, நார்வே, தென்னாப்பிரிக்கா யூனியன், ரஷ்யா, கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 12 நாடுகளால் 1959 இல் அண்டார்டிக் ஒப்பந்தம் கையெழுத்தானது. மற்றும் 1961 இல் நடைமுறைக்கு வந்தது.
இந்த ஒப்பந்தம் 60°S அட்சரேகைக்கு தெற்கே உள்ள பகுதியை உள்ளடக்கியது.
ஒப்பந்தத்தின் நோக்கங்கள் அண்டார்டிகாவை இராணுவமயமாக்கல் மற்றும் அமைதியான ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு மண்டலமாக நிறுவுதல் மற்றும் பிராந்திய இறையாண்மை தொடர்பான எந்தவொரு சர்ச்சையையும் ஒதுக்கி வைப்பது, அதன் மூலம் சர்வதேச ஒத்துழைப்பை உறுதி செய்வது.
தற்போது, 54 நாடுகள் அண்டார்டிக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன, ஆனால் 29 நாடுகளுக்கு மட்டுமே அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டங்களில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. இதில் இந்தியாவும் அடங்கும்.
இந்தியா 1983 இல் அண்டார்டிக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மற்றும் அதே ஆண்டு ஆலோசனை அந்தஸ்தைப் பெற்றது.
அண்டார்டிக் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகவும், குறிப்பாக அண்டார்டிகாவில் கடல் வாழ் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பதற்காகவும் 1980 இல் அண்டார்க்டிக் கடல் வாழ் வளங்களைப் பாதுகாப்பதற்கான மாநாடு (CCAMLR) அமைக்கப்பட்டது.
அண்டார்டிக் உடன்படிக்கைக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நெறிமுறை 1991 இல் கையெழுத்திடப்பட்டது மற்றும் 1998 இல் நடைமுறைக்கு வந்தது. இது அண்டார்டிகாவை "அமைதி மற்றும் அறிவியலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இயற்கை இருப்பு" என்று குறிப்பிடுகிறது.
புதிய மசோதாவின் முக்கிய விதிகள் என்ன?
இந்திய நீதிமன்றங்களின் அதிகார வரம்பை அண்டார்டிகா வரை நீட்டிப்பது, ஆர்க்டிக் கண்டத்தில் நடந்த குற்றங்களுக்கான விசாரணை மற்றும் நீதிமன்ற நடைமுறை ஆகியவை இந்த மசோதாவின் மிக முக்கியமான விதியாக இருந்தாலும், இந்த மசோதா, குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் பலவீனமான இயல்பைக் கருத்தில் கொண்ட ஒழுங்குமுறைகளின் ஒரு விரிவான ஆவணமாகும்.
அண்டார்டிகா கண்டத்திற்குச் செல்ல விரும்பும் எந்தவொரு பயணத்திற்கும் அல்லது தனி நபருக்கும் விரிவான அனுமதி முறையை மசோதா அறிமுகப்படுத்துகிறது. இந்த அனுமதிகள் அரசாங்கத்தால் அமைக்கப்படும் குழுவினால் வழங்கப்படும். இந்த குழுவில் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சகம், நிதி, மீன்வளம், சட்ட விவகாரங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கப்பல் போக்குவரத்து, சுற்றுலா, சுற்றுச்சூழல், தகவல் தொடர்பு மற்றும் விண்வெளி அமைச்சகங்களின் அதிகாரிகளும், துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அண்டார்டிகா குறித்த நிபுணர்களும் இருப்பர்.
குறைபாடுகள் கண்டறியப்பட்டாலோ அல்லது சட்டத்திற்கு முரணான செயல்பாடுகள் கண்டறியப்பட்டாலோ அனுமதிகளை கமிட்டி ரத்து செய்யலாம்.
இந்தியா அப்பகுதியில் வணிகரீதியாக மீன்பிடித்தலை மேற்கொள்ளவில்லை என்றாலும், ஒவ்வொரு நாட்டிற்கும் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடு இருப்பதால், மசோதா இப்போது அப்பகுதியில் மீன்பிடித்தலுக்கு அனுமதி வழங்குகிறது. இருப்பினும், சர்வதேச சட்டத்தின்படி கடுமையான வழிகாட்டுதல்கள் உள்ளன.
இதையும் படியுங்கள்: கர்நாடக கோயில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபரிகளை தடை செய்தது ஏன்?
மீன்பிடித்தலைப் போலவே, இப்பகுதியில் இந்தியா எந்த சுற்றுலா நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை, மற்றும் மிகச் சில இந்திய சுற்றுலாப் பயணிகள் அண்டார்டிகாவிற்கு வருகை தரும்போது, அவர்கள் வெளிநாட்டு சுற்றுலா ஆபரேட்டர்கள் மூலம் செல்கிறார்கள். அண்டார்டிகாவிற்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த மசோதா இப்போது இந்திய சுற்றுலா ஆபரேட்டர்களை அண்டார்டிகாவில் செயல்பட அனுமதிக்கிறது, இருப்பினும், வணிக மீன்பிடித்தலைப் போலவே, இதுவும் கடுமையான விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மைக்கான விரிவான தரங்களையும் இந்த மசோதா பட்டியலிடுகிறது.
தடைகள் என்ன?
இந்த மசோதா தோண்டுதல், அகழ்வாராய்ச்சி அல்லது கனிம வளங்களைச் சேகரிப்பதைத் தடைசெய்கிறது அல்லது அத்தகைய கனிமப் படிவுகள் எங்கு இருக்கின்றன என்பதைக் கண்டறிய எதையும் செய்யக்கூடாது என்கிறது. அனுமதி வழங்கப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே இதில் விதிவிலக்கு உண்டு.
பூர்வீக தாவரங்களை சேதப்படுத்துதல், பறக்கும் அல்லது தரையிறங்கும் ஹெலிகாப்டர்கள் அல்லது கப்பல்கள் மூலம் அங்குள்ள பறவைகள் மற்றும் சீல்களுக்கு இடையூறு விளைவித்தல், பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு இடையூறு விளைவிக்கும் துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், அண்டார்டிகாவைச் சேர்ந்த மண் அல்லது உயிரியல் பொருட்களை அகற்றுதல், வாழ்விடத்தை மோசமாக மாற்றக்கூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபடுதல் பறவைகள் மற்றும் விலங்குகளை கொல்வது, காயப்படுத்துவது அல்லது பிடிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
அண்டார்டிகாவை பூர்வீகமாகக் கொண்டிராத விலங்குகள், பறவைகள், தாவரங்கள் அல்லது நுண்ணிய உயிரினங்களை அறிமுகப்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிக்கான இனங்களை பிரித்தெடுப்பது (கொண்டு செல்வது) அனுமதி மூலம் செய்யப்பட வேண்டும். ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு அதிகாரியையும் மத்திய அரசு நியமிக்கலாம்.
அறிமுகப்படுத்தப்பட்ட தண்டனை முறை என்ன?
அண்டார்டிகாவில் நடந்த குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றத்தை அமைக்க இந்த வரைவு மசோதா முன்மொழிகிறது.
மேலும் இந்த மசோதா உயர் தண்டனை விதிகளை வழங்குகிறது. மிகக் குறைந்த தண்டனையாக ஓரிரு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10-50 லட்சம் அபராதம். அண்டார்டிகாவை பூர்வீகமாகக் கொண்ட எந்தவொரு இனத்தையும் பிரித்தெடுத்தாலோ அல்லது கண்டத்தில் ஒரு அயல்நாட்டு இனத்தை அறிமுகப்படுத்தினாலோ ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ 50 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம்.
அணு கழிவுகளை கொட்டினால் அல்லது அணு வெடித்தால் 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை ரூ.50 கோடி அபராதம் விதிக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.