Advertisment

உத்தர பிரதேச தேர்தலில் ஒபிசி வாக்குகள் யாருக்கு?

ஓபிசி வாக்காளர்கள், குறிப்பாக யாதவ் அல்லாத ஓபிசிகள், மார்ச் 10 முடிவுகளுக்குப் பிறகு உ.பி.யை யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதில் முக்கிய பங்கி வகிக்கலாம். 1990களில் இருந்து பாஜக வளர்த்து வந்த சாதிகளின் வரலாறு இங்கே

author-image
WebDesk
New Update
உத்தர பிரதேச தேர்தலில் ஒபிசி வாக்குகள் யாருக்கு?

Shyamlal Yadav

Advertisment

Explained: The OBC vote in Uttar Pradesh: தற்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs) என அடையாளம் காணப்பட்ட சமூகங்கள், 1960களின் பிற்பகுதியில் இருந்து, உத்தரப்பிரதேச அரசியலில் ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக, சமாஜ்வாதி கட்சியின் வலிமைமிக்க யாதவ்-முஸ்லிம் கூட்டணியை எதிர்கொள்வதற்காக, யாதவ் அல்லாத OBCகளிடையே ஒரு தளத்தை உருவாக்க பாஜக முயன்று வருகிறது; இருப்பினும், சட்டமன்றத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, யாதவ் அல்லாத பல ஓபிசி தலைவர்கள் பாஜக.வில் இருந்து பிரிந்து சமாஜ்வாதியில் சேர்ந்தனர். மார்ச் 10 அன்று, உ.பி.யின் அடுத்த அரசாங்கத்தை யார் அமைப்பது என்பதை ஓபிசி வாக்காளர்களின் தேர்வுகள் தீர்மானிக்கலாம்.

இடஒதுக்கீட்டு அளவுகள்

தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் (NCBC) 27% இடஒதுக்கீட்டிற்கான மத்திய பட்டியலில் உ.பி.யில் இருந்து 76 சாதிகளை (156 குடும்பப்பெயர்களைப் பயன்படுத்தி) பட்டியலிட்டுள்ளது. மண்டல் கமிஷன் அறிக்கை, 1980 இல் சமர்ப்பிக்கப்பட்டு 1994 இல் செயல்படுத்தப்பட்டது. இந்த அறிக்கை இந்தியாவின் மக்கள்தொகையில் 52% ஓபிசிக்கள் என்று கூறியது. தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் (NSSO) 61வது சுற்று அறிக்கை அக்டோபர் 2006 இல் வெளியிடப்பட்டது, இந்த அறிக்கை நாட்டில் ஒபிசி பிரிவினர் 41% உள்ளதாக கூறுகிறது.

உ.பி.யில், 2001ல் அப்போதைய முதல்வர் ராஜ்நாத் சிங்கால் அமைக்கப்பட்ட சமூக நீதிக் குழு, உ.பி.,யில் OBC கள் 43.13% (கிராமப்புறங்களில் 54.05%) என மதிப்பிட்டுள்ளது. ஓபிசிகளில், யாதவர்கள் 19.4%, குர்மிகள் 7.46%, கச்சி-குஷ்வாஹா-ஷாக்யா-மவுரியா-சைனி-மாலி 6.69%, லோட்கள் 4.9%, ஜாட்கள் (உ.பி.யில் ஓபிசி பிரிவில் உள்ளனர்) 3.6%, கேவாட் (நிஷாத்) 4.33%, ஷெப்பர்ட்-பால்-பாகேல் 4.43%, கஹர்-காஷ்யப் 3.31%, மற்றும் பார்-ராஜ்பார் 2.44% என அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

1931 முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லை, எனவே இந்த எண்கள் வெறும் மதிப்பீடுகள் மட்டுமே. அரசியல் கட்சிகள் தங்கள் தொண்டர்களிடம் இருந்து சாதிகள் குறித்த தகவல்களை சேகரிக்கின்றன.

1975 ஆம் ஆண்டு அக்டோபரில் உ.பி.யில் செதிலால் சதியின் தலைமையில், அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம், ஓபிசிக்களுக்கு 29.50% இடஒதுக்கீட்டைப் பரிந்துரைத்தது, அதில் 17% மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்குச் செல்லும் வகையில் பரிந்துரை இருந்தது.

ராம் நரேஷ் யாதவின் ஜனதா கட்சி அரசாங்கம் 1977 இல் உபியில் OBC களுக்கு அரசு வேலைகளில் 15% இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது. 1994 இல், முலாயம் சிங் யாதவ் தலைமையிலான SP-BSP அரசாங்கம் அதை 27% ஆக உயர்த்தியது.

மத்திய அளவில், 1953ல் அமைக்கப்பட்ட காக்கா காலேல்கர் கமிஷன், தனது அறிக்கையை 1955ல் சமர்ப்பித்தது. பிபி மண்டல் கமிஷன் 1978ல் அமைக்கப்பட்டது. ராம் மனோகர் லோஹியா போன்ற தலைவர்கள் ஓபிசி நலனுக்காக குரல் எழுப்பினர்.

சரண் சிங் முதல் முலாயம் வரை

1967 ஆம் ஆண்டு உ.பி சட்டமன்றத் தேர்தல் சமூக சமன்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டது. பிஜேபியின் முன்னோடியான பாரதிய ஜனசங்கம் (பிஜேஎஸ்) பின்தங்கிய விவசாய சமூகங்களின் ஆதரவுடன் 98 இடங்களை வென்றது. OBC தலைவர்கள் மற்றும் வருங்கால முதல்வர்களான கல்யாண் சிங் (BJS) மற்றும் முலாயம் சிங் யாதவ் (சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி) ஆகியோர் முதல் முறையாக சட்டமன்றத்தில் நுழைந்தனர், மேலும் ஜாட் தலைவர் சவுத்ரி சரண் சிங் காங்கிரஸில் இருந்து விலகி முதல்வரானார்.

ஜாட்கள் இல்லாத கிழக்கு உ.பி.யில், சரண் சிங்கிற்கு யாதவர்கள் மற்றும் குர்மிகள் போன்ற சமூகங்களின் ஆதரவு கிடைத்தது. 1967 சட்டமன்றத்தில் கணிசமான எண்ணிக்கையிலான BJS எம்.எல்.ஏ.க்கள் இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்கள், ஆனால் அதற்கு பிந்தைய ஆண்டுகளில், அவர்களின் தளங்கள் சரண் சிங்குக்கு விசுவாசமாக மாறியது, 1987 இல் அவர் இறக்கும் வரை அவர்களால் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக சரண்சிங் இருந்தார்.

1980களின் பிற்பகுதியில் காங்கிரஸிலிருந்து பிரிந்த வி.பி.சிங், உ.பி.யில் ஓபிசி தலைவர்களான முலாயம், பீகாரில் லாலு பிரசாத் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து ஷரத் யாதவ் ஆகியோரின் ஆதரவைப் பெற்றார். உ.பி., ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த ஜாட் இனத்தவர்களும் அவருக்குப் பின்னால் நின்று அவரின் பலத்தைக் கூட்டினர். 1990 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது, ​​மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவது குறித்த அவரது அறிவிப்பு, ஓபிசி ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தியது.

உ.பி.யில், 1989ல் முதல்வராக ஆன முலாயம் சிங் யாதவ், பிஜேபியின் இந்துத்துவா மற்றும் பல யாதவ் அல்லாத ஓபிசி சமூகத்தினரிடையே கடும் எதிர்ப்பு இருந்ததால் முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றார், மேலும் 1990களில் OBC களின் தலைசிறந்த தலைவராக உருவெடுத்தார்.

பாஜகவின் கல்யாண் சிங் மற்றும் ராஜ்நாத் சிங்

முலாயமுக்கு எதிராக பாஜக OBC சமூகத்தைச் சேர்ந்தவரை முன்னிலைப்படுத்தியது, 1991 தேர்தலுக்குப் பிறகு, லோத் ராஜ்புத்ரான கல்யாண் சிங் முதல்வரானார். யாதவ்-முஸ்லிம் மையத்திற்கு வெளியே முலாயமின் ஆதரவுத் தளம் துண்டு துண்டாகத் தொடங்கியதும், கல்யாண் பல சிறிய ஓபிசி சமூகங்களை பாஜகவின் பின்னால் அணிதிரட்டினார். இந்த நேரத்தில்தான், மண்டல் கமிஷன் காலத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் பல சமூகங்கள் தங்கள் அடையாளங்களை உறுதிப்படுத்தத் தொடங்கியதால், 'யாதவ் அல்லாத OBC' உ.பி.யின் அரசியல் அகராதிக்குள் நுழைந்தது. கல்யாண் சிங் இந்தச் சமூகங்களை வளர்த்து, கட்சிப் பதவிகளிலும் தேர்தல் சீட்டு பகிர்விலும் அவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தார்.

கல்யாணின் வாரிசான ராம் பிரகாஷ் குப்தா (நவம்பர் 1999-அக்டோபர் 2000) உ.பி.யில் ஜாட்களுக்கு OBC அந்தஸ்தை வழங்கினார். முலாயம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை பலவீனப்படுத்துவதற்காக, குப்தாவுக்குப் பின் வந்த ராஜ்நாத் சிங்கின் அரசாங்கம், ஓபிசி மற்றும் தலித்துகளை பிரிக்க "இடஒதுக்கீட்டிற்குள் இடஒதுக்கீடு" என்ற யோசனையை கொண்டு வந்தது.

ஜூன் 2001 இல் ராஜ்நாத்தின் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சமூக நீதிக் குழு ஆகஸ்ட் மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் நோக்கம் யாதவர்களை மற்ற ஓபிசி சாதிகளிலிருந்தும், ஜாதவர்களை மற்ற எஸ்சி சாதிகளிலிருந்தும் அந்நியப்படுத்துவதாகக் காணப்பட்டது. ஹுகும் சிங் தலைமையிலான குழு, பட்டியல் சாதியினருக்கான 21% இட ஒதுக்கீட்டை ஜாதவ்கள் (10%) மற்றும் மீதமுள்ள 65 SC சாதிகள் (11%) எனப் பிரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. 27% OBC ஒதுக்கீட்டில், யாதவர்களின் பங்கை 5% ஆக வைத்திருக்க வேண்டும் என்றும், 9% மற்ற எட்டு சாதிகளுக்கும், மீதமுள்ள 13% பிற 70 சாதிகளுக்கும் எனக் குழு பரிந்துரைத்தது.

இந்தத் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது, 2002 தேர்தலில், பாஜக மொத்தமுள்ள 403 இடங்களில் 88 இடங்களில் மட்டுமே வென்றது.

2002க்குப் பிந்தைய OBC அரசியல்

அடையாள அரசியலின் வெற்றி பல தலைவர்களை தங்களுக்கும் தங்கள் சமூகங்களுக்கும் அங்கீகாரம் தேட தூண்டியது. முன்னதாக BSP உடன் இருந்த ஒரு குர்மி தலைவர் சோனெலால் படேல், 1995 இல் அப்னா தளத்தை உருவாக்கினார். 2002 இல், அவர் 59 குர்மிகள் உட்பட 351 வேட்பாளர்களை நிறுத்தினார், மேலும் மூன்று இடங்களில் வெற்றி பெற்றார்; இருப்பினும், மூன்று எம்எல்ஏக்களும் பின்னர் சமாஜ்வாதி கட்சிக்கு மாறினர்.

இதையும் படியுங்கள்: ஜப்போரிஜியா அணுமின் உற்பத்தி நிலையத்தில் ரஷ்யாவின் தாக்குதல் எத்தனை ஆபத்தானது?

அக்டோபர் 2002 இல், மற்றொரு முன்னாள் பிஎஸ்பி தலைவரான ஓம் பிரகாஷ் ராஜ்பார், ராஜ்பார் சமூகத்தின் அடித்தளத்துடன் சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியை (SBSP) உருவாக்கினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2016 இல், சஞ்சய் நிஷாத், நிஷாத் சமூகத்தின் ஆதரவைக் கூறி நிர்பால் இந்தியன் ஷோஷித் ஹமாரா ஆம் தளத்தை (நிஷாத்) உருவாக்கினார்.

சோனேலால் படேலின் மரணத்திற்குப் பிறகு, அவரது மகள்கள் தனித்தனியாகச் சென்றனர். அனுப்ரியா பட்டேல் தலைமையிலான அணி பா.ஜ.க.வுடன் கூட்டணியிலும், பல்லவி பட்டேல் தலைமையிலான மற்றொரு அணி சமாஜ்வாதி கட்சியுடனும் கூட்டணி அமைத்துள்ளது. ராஜ்பார் தற்போது சமாஜவாதிக் கட்சி கூட்டணியிலும், நிஷாத் பிஜேபியிலும் உள்ளனர்.

மோடி-யோகி காலம்

2014 லோக்சபா தேர்தலுக்கு முன், நரேந்திர மோடி சமூக பொறியியலில் அதிக கவனம் செலுத்தினார். உ.பி.யில், பாஜகவுக்குத் திரும்பிய கல்யாண் சிங்கின் உதவியுடன், மோடியும் அமித் ஷாவும் மக்களவை தேர்தலில் கட்சியை 80-ல் 73 இடங்களைக் கொண்டுவரும் வியூகத்தை வகுத்தனர், மேலும் இரண்டு இடங்கள் அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளத்திற்குச் சென்றது.

உ.பி.யில் அமித் ஷா முகாமிட்டதும், கேசவ் பிரசாத் மவுரியா பிஜேபியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதும், 2017 சட்டமன்ற தேர்தலில் இந்த வியூகம் மீண்டும் பலனளித்தது. கட்சி 312 இடங்களை வென்றது, அதன் கூட்டணிக் கட்சிகளான அப்னா தளம் மற்றும் எஸ்பிஎஸ்பி (அப்போது பாஜகவுடன் இருந்தது) முறையே 9 மற்றும் 4 இடங்களைப் பெற்றன. ஒரு சில ஓபிசி ஜாதிகளைத் தவிர, பெரும்பாலானவர்கள் கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர் என்பதை பாஜகவின் முழுமையான வெற்றி சுட்டிக்காட்டுகிறது.

யாதவ் அல்லாத ஓபிசி தலைவர்கள் பா.ஜ.க.வில் குவிந்தனர். ஒரு காலத்தில் மாயாவதியின் நம்பகமான லெப்டினன்டாக இருந்த சுவாமி பிரசாத் மௌரியாவுடன் கேசவ் மௌரியாவும் இணைந்தார்; பாபு சிங் குஷ்வாஹா ஏற்கனவே வெளியேறியதால், பிஎஸ்பி அதன் ஓபிசி வாக்கு வங்கியின் பெரும்பகுதியை பிஜேபியிடம் இழந்தது. நோனியா தலைவர் தாரா சிங் சவுகானும் பாஜக பக்கம் வந்தார். சமாஜ்வாதி கட்சி, யாதவர்கள் மற்றும் முஸ்லிம்களை மட்டுமே கவனித்துக் கொள்ளும் கட்சி என்று முத்திரை குத்துவதற்கான பிரச்சாரத்தை BJP தொடங்கியது, முலாயம் சிங்கிற்கு பின்னர் மோசமாகப் பிளவுபட்ட சமாஜ்வாதி கட்சி இந்த பிரச்சாரத்தை எதிர்கொள்ளத் தவறிவிட்டது.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் SP மற்றும் BSP கைகோர்த்தது, ஆனால் பாஜக 62 இடங்களையும், அப்னா தளம் 2 இடங்களையும் வென்றன. 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் OBC களின் துணைப்பிரிவுகளுக்கான ஒதுக்கீட்டை பாஜக உறுதியளித்தது, மேலும் நீதிபதி ஜி ரோஹினி தலைமையிலான ஆணையம் அக்டோபர் 2017 முதல் இந்த பிரச்சினையை கவனித்து வருகிறது. நீதிபதி ராகவேந்திர குமார் தலைமையிலான மாநில அரசாங்கத்தின் தனி குழு அதன் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.

சுவாமி பிரசாத் மவுரியாவும், சவுகானும் இப்போது பாஜகவில் இல்லை. 2022 தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இருந்து விலகிய ஒவ்வொரு ஓபிசி தலைவர்களும் யோகி ஆதித்யநாத் அரசு இந்த சமூகங்களுக்கு அநீதி இழைத்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். மறுபுறம், SP தலைவர் அகிலேஷ் யாதவ் பல தேர்தல் வாக்குறுதிகளுடன் யாதவ் அல்லாத OBC களையும் கவர்ந்து வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Uttar Pradesh Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment