scorecardresearch

டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்துவது ஏன்?

டெல்லியில் மீண்டும் கூடும் விவசாயிகள்; குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்; அஜய்மிஸ்ரா பதவி நீக்கம்; விவசாயிகள் விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்துவது ஏன்?

Explained: Why are protesting farmers back in Delhi?: திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியின் மையத்தில் உள்ள ஜந்தர் மந்தரை அடைய முற்பட்டதால், திக்ரி, சிங்கு மற்றும் காஜிபூர் உள்ளிட்ட பல எல்லை நுழைவுப் புள்ளிகள் நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், பயணிகளை விலகி இருக்குமாறும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

முக்கியமாக பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து 5,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்கு வர முயற்சிப்பார்கள் என்று போலீசார் எதிர்பார்த்தனர். பிற்பகலில், போராட்டக்காரர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நகருக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாக விவசாயத் தலைவர்கள் குற்றம் சாட்டினர்; எவ்வாறாயினும், “சரிபார்ப்பு” செய்த பின்னர் அவர்கள் தொடர அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்: இளைஞர்களை அதிகமாக மது குடிக்க சொல்லும் ஜப்பான்; காரணம் என்ன?

மூன்று வேளாண்ச் சட்டங்களைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வற்புறுத்திய விவசாயிகள் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு ஏன் மீண்டும் போராட்டம் நடத்துகிறார்கள்?

பாரதிய கிசான் யூனியனின் (BKU) இளைஞர் தலைவரான சுமித் சாஸ்திரியின் கூற்றுப்படி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும், உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், சிறையில் உள்ள விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோருகின்றனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP): ஏழு தானியங்கள் (நெல், கோதுமை, மக்காச்சோளம், திணை, சோளம், கேழ்வரகு மற்றும் பார்லி), ஐந்து பருப்பு வகைகள் (கொண்டைக்கடலை, துவரம் பருப்பு, பாசி பருப்பு, உளுந்து, மற்றும் மசூர்), ஏழு எண்ணெய் வித்துக்கள் (கடுகு- ராப்சீட், நிலக்கடலை, சோயாபீன், சூரியகாந்தி, எள், குங்குமப்பூ மற்றும் நைகர்சீட்) மற்றும் நான்கு வணிகப் பயிர்கள் (கரும்பு, பருத்தி, கொப்பரை மற்றும் சணல்) உட்பட 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

MSP என்பது ஒரு அடையாள விலை; அதற்கு சட்டப்பூர்வ ஆதரவு இல்லை, மேலும் விவசாயிகள் MSPயை உரிமையாகக் கோர முடியாது. இந்தியாவின் பெரும்பகுதி முழுவதும் பயிரிடப்படும் பெரும்பாலான பயிர்களில், விவசாயிகள் பெறும் விலைகள், குறிப்பாக அறுவடை நேரத்தில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட MSPகளுக்குக் குறைவாகவே உள்ளது.

நவம்பர் 2021 வரை விவசாயச் சங்கங்கள் கோரிய மூன்று வேளாண்ச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதைத் தவிர, MSP ஒரு குறிகாட்டியாக அல்லது விரும்பிய விலையாக இருக்க அனுமதிப்பதை விட, MSPக்கு கட்டாய அந்தஸ்து வழங்கும் சட்டத்தை மோடி அரசாங்கம் இயற்ற வேண்டும் என்று விவசாயிகள் விரும்பினர்.

நவம்பர் 19, 2021 அன்று மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் அறிவித்தாலும், MSP சட்டப்பூர்வ உரிமையாக மாற்றுவதற்கான அழுத்தத்தை அரசாங்கம் எதிர்த்துள்ளது. கடந்த மாதம், பாராளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த அரசாங்கம், இது தொடர்பாக போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு எந்த உத்தரவாதமும் வழங்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியது. பிரதமரின் நவம்பர் 2021 அறிவிப்பைத் தொடர்ந்து ஜூலையில் விவசாய அமைச்சகம் அமைத்த குழுவின் குறிப்பு விதிமுறைகள் MSPக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தைக் குறிப்பிடவில்லை. MSPயை “மிகவும் திறம்பட மற்றும் வெளிப்படையானதாக” மாற்ற வேண்டும் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஜய் மிஸ்ரா: கடந்த ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி, உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் நடந்த போராட்டத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சருக்குச் சொந்தமான மஹிந்திரா தார் உட்பட மூன்று எஸ்.யூ.வி.,களின் கான்வாய், விவசாயிகள் மீது மோதி நான்கு விவசாயிகளையும் ஒரு பத்திரிகையாளரையும் கொன்றது.

அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில், கார் ஓட்டுநர் மற்றும் இரண்டு உள்ளூர் பா.ஜ.க தலைவர்கள் கொல்லப்பட்டனர். அமைச்சர் மிஸ்ராவின் மகன் மோனு என்ற ஆஷிஷ் மிஸ்ரா சம்பவ இடத்தில் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன, மேலும் அவர் கடந்த ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழு ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பிப்ரவரியில், ஆஷிஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அஜய் மிஸ்ராவை நீக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்கள் இந்த சம்பவம் குறித்து சுதந்திரமான நீதி விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர், மேலும் கடந்த வாரம் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மூன்று நாள் தர்ணா நடத்தினர். லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நான்கு விவசாய சங்க பிரதிநிதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் விரும்புகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Explained why are protesting farmers back in delhi