Explained: Why Haryana BJP is going all out to regain lost ground in state: மத்திய அரசின் மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக விமர்சனங்களை எதிர்கொண்ட பின்னர் மாநிலத்தின் கிராமப்புற மக்களை அமைதிப்படுத்தும் முயற்சியில், ஹரியானா பாஜக இழந்த இடத்தை மீண்டும் பெற தீவிரமாக முயற்சித்து வருகிறது. திரங்கா யாத்ரா முதல் குறிப்பாக கிராமப்புறங்களில் வீடு வீடாக தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரங்கள், அரசு மட்டத்தில் கிராமம் சார்ந்த திட்டங்களை வெளியிடுவது அல்லது நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வரவிருக்கும் பிறந்தநாளைக் கொண்டாடுவது என மாநில வாக்காளர்களில் பெரும் பகுதியினராக உள்ள கிராமப்புற மக்களிடையே நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்காக மாநில பாஜக அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்துகிறது. மாநிலத்தின் கிராமப்புற மக்களை அமைதிப்படுத்த அனைத்துக் கட்சிகளும் விரும்புவது ஏன்? அதற்காக கட்சிகள் என்ன செய்து வருகின்றன? என்பதை நாங்கள் விளக்குகிறோம்.
கிராமப்புற மக்களை அமைதிப்படுத்த பாஜக என்ன செய்து கொண்டிருக்கிறது?
மாநிலத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பெரிய அளவிலான போராட்டங்கள் நடந்துள்ள நிலையில், ஹரியானாவில் பாஜக ஒரு சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகள் போராட்டங்களுக்கு மத்தியில், 2021 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு திரங்கா யாத்திரையை பாஜக ஏற்பாடு செய்திருந்தது. இந்த யாத்திரை மாநில இளைஞர்களிடையே தேசபக்தியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது என்று பாஜக கூறியது. இது கட்சியால் நன்கு கணக்கிடப்பட்ட நடவடிக்கையாகக் கருதப்பட்டது, ஏனெனில் விவசாயிகள் அல்லது எதிர்க்கட்சிகள் கூட திரங்கா யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ அல்லது விமர்சிக்கவோ முடியாது. மறுபுறம், இதன் மூலம் பாஜக தனது கேடரை விரிவுபடுத்த முடிந்தது, அதாவது மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் கட்சி அளவிலான எந்த நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்ய முடியாது என்ற விவசாயிகளின் அச்சுறுத்தலை தவிர்க்க முடிந்தது.
பாஜக-ஜேஜேபி கூட்டணி மாநில அரசு, விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை அதிகரிப்பதற்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக கிராமப்புறங்களை குறிவைத்து பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது. தற்போது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாளை கொண்டாட கட்சி தனது தொண்டர்களை தயார்படுத்தி வருகிறது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளைக் கொண்டாட பாஜகவின் திட்டங்கள் என்ன?
நேதாஜியின் ஆசாத் ஹிந்த் ஃபவுஜின் 2,715 வீரர்கள் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பாஜக மாநிலத் தலைவர் ஓம் பிரகாஷ் தங்கர், ஹரியானாவில் 7,500 இடங்களில் அவரது பிறந்தநாளைக் கொண்டாட ஒவ்வொரு இடத்திலும் 75 கட்சித் தொண்டர்கள் கூடுவார்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்ச்சிகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று அவர் கூறினார். இந்த நிகழ்வை மாபெரும் வெற்றியடையச் செய்ய மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கட்சித் தொண்டர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களின் கூட்டங்களை ஏற்கனவே தங்கர் நடத்தியுள்ளார். கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களின் மாவட்ட பிரிவு தலைவர்களுக்கும் அந்தந்த தொகுதிகள் மற்றும் மாவட்டங்களில் நிகழ்ச்சிகளை நடத்த குறிப்பிட்ட பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. "1943 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-3 தேதிகளில் சிங்கப்பூரில் நேதாஜியை வரவேற்க ஆசாத் ஹிந்த் ஃபவுஜின் வீரர்கள் மற்றும் பிற குடிமக்கள் பாடல்களைப் பாடியுள்ளனர். இவற்றில் இரண்டு பாடல்கள் ஹரியானாவின் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து மற்றும் வார்டுகளிலும் ஜனவரி 23 அன்று பாடப்படும். அவரது பிறந்தநாள் பராக்ரம் திவாஸ் ஆக கொண்டாடப்படும், ”என்று தங்கர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
கிராமப்புற மக்கள் மீது பாஜக ஏன் அதிக கவனம் செலுத்துகிறது?
கடந்த ஓராண்டாக விவசாயப் போராட்டங்களால் ஏற்பட்ட இமேஜ் இழப்புடன், விரைவில் மாநிலம் பஞ்சாயத்துத் தேர்தலை சந்திக்க உள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் இடஒதுக்கீடு விதிமுறைகள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு காரணமாக தேர்தலை இன்னும் நடத்த முடியவில்லை என்றாலும், விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று மாநில அரசு எதிர்பார்க்கிறது. இந்தத் தேர்தல்களில் அக்கட்சி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினால், 2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
துணை முதல்வரும், ஜே.ஜே.பி., தலைவருமான துஷ்யந்த் சவுதாலா கூறும்போது, “பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, பஞ்சாயத்து தேர்தலை நடத்த அரசு எதிர்பார்த்து வருகிறது. இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்” என்றார். பஞ்சாயத்துத் தேர்தல்கள் பாஜக மற்றும் ஜேஜேபி ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரு அக்னிப் பரீட்சையாக இருக்கும், அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அரசுக்கு எதிராக விவசாயிகளின் கோபத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கும். ஆம் ஆத்மி கட்சியும் வரும் பஞ்சாயத்து தேர்தல் மூலம் மாநில அரசியலில் முறைப்படி நுழையப்போவதாக அறிவித்துள்ளது.
கிராமப்புற மக்களை சமாதானப்படுத்தும் பாஜகவின் முயற்சிகளை எதிர்க்கட்சிகள் எவ்வாறு பார்க்கின்றன?
“இது நகர்ப்புற அல்லது கிராமப்புற மக்களைப் பற்றியது அல்ல, சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் இந்தக் கூட்டணி அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். விவசாயிகளுக்கு அவர்களின் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை, அவர்கள் தங்கள் வயலுக்கு உரம் பெற வரிசையில் நிற்க வைக்கப்படுகிறார்கள், குறைந்தப்பட்ச ஆதரவு விலைக்கு (MSP) உத்தரவாதம் இல்லை…” என்று எதிர்கட்சித் தலைவரும் ஹரியானாவின் முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா பதிலளித்தார். கடந்த ஆண்டு ஆட்சியில் இருக்கும் போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி நினைக்காத இந்த அரசு ஏன் இப்போது அவரைப் பற்றி நினைக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.