இந்தியாவில் பப்ஜி ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட்டதற்கு பிறகு, Battlegrounds Mobile India (BGMI) என்று புதுப்பிக்கப்பட்ட பப்ஜி வெர்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், பிஜிஎம்ஐ பப்ஜிக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்தும் பப்ஜி செயலி நீக்கப்பட்டுள்ளது.
கொரியாவை சேர்ந்த பிஜிஎம்ஐ பப்ஜி வெளியீட்டு நிறுவனம் கிராஃப்டன் செய்திதொடர்பாளர் கூறுகையில், கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து பப்ஜி நீக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்டு வருகிறோம் என்று கூறினார்.
கூகுள் நிறுவனம் கூறுகையில், இந்திய அரசின் உத்தரவை தொடர்ந்து கிராஃப்டன் நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டு, இந்தியாவில் கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து பப்ஜி செயலி நீக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய அரசு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
திடீரென செயலி நீக்க காரணம்?
கடந்த சில நாட்களுக்கு முன், தாய் பப்ஜி விளையாட கூடாது எனக் கூறியதால் ஆத்திரமடைந்த 16 வயது சிறுவன் தாயை சுட்டுக் கொன்றான். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. பப்ஜி விளையாட்டால் குற்றங்கள் நிகழ்ந்துள்ளது. தொழில்நுட்பத் துறை அமைச்சகம் பப்ஜி விளையாட்டிற்கு தடை விதிப்பது போன்ற ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என மாநிலங்களை எம்பி விஜயசாய் ரெட்டி கேள்வி எழுப்பினார்.
இதற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்து பேசினார். அப்போது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட செயலிகள், மீண்டும் புதுப்பிக்கப்பட்டு புது வெர்ஷனில், அதே மாறியான பெயரில், அதே செயல்பாட்டுடன் வருவதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இவை அனைத்தையும், உள்துறை அமைச்சக்கத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
16 வயது சிறுவன் குறித்த சம்பவம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது. பப்ஜி செயலி 2020ஆம் ஆண்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார்.
பப்ஜி செயலி இரண்டாவது முறையாக இந்தியாவில் கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக சீனாவைச் சேர்ந்த நிறுவனமான டென்சென்ட் கேம்ஸ் இந்தியாவில் பப்ஜி செயலியை வெளியிட்டது. 2020ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் பப்ஜி, டிக்டாக் உள்பட 117 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்தியா, சீனா எல்லை பிரச்சனை கடுமையான இருந்த நேரத்தில் சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.