குரங்கு அம்மை பாதித்த நோயாளியின் முதல் மரணத்தை இந்தியா பதிவு செய்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளாவுக்கு வந்த இளைஞர் திருச்சூரில் சனிக்கிழமை (ஜூலை 30) இறந்தார். அவர் வெளிநாட்டில் இருந்தபோது தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்ததாக மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) தெரிவித்தார்.
இது புதியது – மேலும் கேரளாவில் முன்னர் கண்டறியப்பட்ட மூன்று பாதிப்புகளில் இருந்து வேறுபட்டது. முந்தைய மூன்று பாதிப்புகளில் ஒருவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், மற்ற இருவரும் சீரான நிலையில் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.
டெல்லியிலும் குரங்கு அம்மையின் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால் நோயாளிக்கு வெளிநாட்டு பயண வரலாறு இல்லாததால் டெல்லி பாதிப்பு வேறுபட்டது. கேரளாவில் உள்ள அனைத்து பாதிப்புகளும், இறந்தவர் உட்பட, மத்திய கிழக்கிலிருந்து மாநிலத்திற்கு வந்தவர்கள்.
கேரளாவில் இறந்த இந்த நோயாளி யார்?
திருச்சூரில் உள்ள புண்ணியூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பிய சில நாட்களில் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, கேரள சுகாதாரத் துறை அவரது மாதிரிகளை, ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தின் கேரளப் பிரிவுக்கு அனுப்பியது.
இளைஞர் வெளிநாட்டில் இருந்தபோது குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டதாகவும், ஆனால் அவரது குடும்பத்தினர் சனிக்கிழமை அன்றுதான் திருச்சூரில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்ததாகவும் அமைச்சர் ஜார்ஜ் கூறினார்.
அந்த இளைஞர் ஜூலை 22 ஆம் தேதி கேரளாவுக்கு வந்ததாகவும், ஜூலை 26 ஆம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்குச் சென்றதாகவும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் பின்னர் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் சனிக்கிழமை பிற்பகல் இறந்தார்.
குரங்கு அம்மை ஒரு "கொலையாளி" நோயா?
அப்படி இல்லை. இறந்த இளைஞர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதால், அவர் வைரஸால் இறந்தார் என்று அர்த்தமல்ல. மரணத்திற்கான பிற காரணங்களும் இருக்கலாம், இது நிபுணர்கள் அவரது நிலையை பகுப்பாய்வு செய்த பின்னரே தெரியவரும்.
"குரங்கு அம்மையால் நிகழும் இறப்பு விகிதம் மிகக் குறைவு என்பதால் மரணம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும்" என்று சுகாதார அமைச்சர் கூறினார்.
நேர்மறை சோதனை செய்த போதிலும், நோயாளி நோயின் அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை என்றும் ஜார்ஜ் கூறினார். “இளைஞருக்கு குரங்கு அம்மையின் அறிகுறிகள் எதுவும் இல்லை. அவர் மூளை அழற்சி மற்றும் சோர்வு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உறவினர்கள் யுஏஇயில் நடத்தப்பட்ட சோதனை முடிவை சனிக்கிழமை தான் ஒப்படைத்தனர், ”என்று அவர் கூறினார்.
குரங்கு அம்மை பாதித்த எத்தனை பேர் இதுவரை இறந்துள்ளனர்?
மே மாதம் முதல் பல நாடுகளில் பரவிய இந்த நோய் இதுவரை 78 நாடுகளில் 20,000க்கும் அதிகமானோரை பாதித்துள்ளது. எவ்வாறாயினும், இறப்புகளில் பெரும்பகுதி ஆப்பிரிக்காவில் உள்ளது, அங்கு குரங்கு அம்மை வெடிப்புகள் பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகின்றன, மேலும் வைரஸின் மிகவும் வீரியமான திரிபு பரவுவதாக நம்பப்படுகிறது. மொத்தத்தில், ஆப்பிரிக்காவில் 75 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
ஆப்பிரிக்காவுக்கு வெளியே, கேரளா இல்லாமல், மூன்று இறப்புகள் மட்டுமே நடந்துள்ளன.
ஆப்பிரிக்க கண்டத்திற்கு வெளியே குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட முதல் மரணம் பிரேசிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 29) பதிவாகியுள்ளது. வெள்ளியன்று, ஸ்பெயினின் வலென்சியா பிராந்தியத்தில் ஒரு மரணம் நிகழ்ந்தது, சனிக்கிழமையன்று, நாட்டின் அண்டலூசியா பகுதியில் ஒரு நோயாளி இறந்தார். ஸ்பெயினில் ஏற்பட்ட இரண்டு மரணங்கள் ஐரோப்பாவின் முதல் குரங்கு அம்மை தொடர்பான மரணங்கள் ஆகும்.
இருப்பினும், பிரேசிலில் இறந்தவர் லிம்போமா மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தால் பாதிக்கப்பட்ட 41 வயதுடையவர். எனவே இணை நோய்கள் அவரது நிலையை மோசமாக்கியது.
மேலும் ஸ்பெயினில் உள்ள இரு நோயாளிகளும், அவர்கள் இறப்பதற்கு முந்தைய நாட்களில் மூளையைத் தாக்கிய நோய்த்தொற்றுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்களின் மரணங்கள் ஏற்கனவே இருக்கும் நிலைமைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இறப்பு ஆபத்து 1 சதவீதத்துக்கும் கீழ் மிகக் குறைவு. இந்த மதிப்பீடு கூட ஆப்பிரிக்காவின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது.
இதுவரை, பல நாடுகளின் வெடிப்பில், ஆப்பிரிக்காவிற்கு வெளியே இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை, இருப்பினும் பாதிப்புகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. புள்ளிவிவரப்படி, இறப்பு விகிதம் மிக மிகக் குறைவு, ”என்று இந்தியாவின் தலைசிறந்த தொற்றுநோயியல் நிபுணர்களில் ஒருவரான மருத்துவர் ஆர் கங்காகேத்கர் இந்த வார தொடக்கத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் (பிரேசில் மற்றும் ஸ்பெயினில் இறப்புகள் பதிவாகும் முன்) கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.