அனைத்து நாடுகளில் இருந்தும் 41% எஃப்-1 விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இது 2014 நிதியாண்டின் நிராகரிப்பு விகிதத்தை விட 2 மடங்கு அதிகம் என தி இந்தியன் எக்ஸ்பிரஸின் வெளியுறவுத்துறை தரவுகளின் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
2023-24ம் ஆண்டில் (அமெரிக்க அரசின் நிதியாண்டு அக்டோபர் 1 முதல் செப்டம்பர் 30 வரை), அமெரிக்கா எஃப்-1 விசாக்களுக்கான மொத்தம் 6.79 லட்சம் விண்ணப்பங்களைப் பெற்றது, அவற்றில் 2.79 லட்சம் (41%) நிராகரிக்கப்பட்டன. இது 2022-23ம் ஆண்டில் மொத்தம் 6.99 லட்சத்தில் 2.53 லட்சம் விண்ணப்பங்கள் (36%) நிராகரிக்கப்பட்டதை விட அதிகமாகும்.
அமெரிக்க வெளியுறவுத்துறை எஃப்-1 விசாக்களுக்கான நாடு வாரியான மறுப்பு விகிதம் குறித்த தரவைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், 2024-ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மாணவர் விசாக்களின் எண்ணிக்கை 2023-ம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 38% குறைந்துள்ளதாக கடந்த ஆண்டு டிச.9-ல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து நாடுகளிலிருந்தும் விண்ணப்பங்களின் முழுமையான எண்ணிக்கை குறைந்த போதிலும், மாணவர் விசா மறுப்புகளின் சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில், 2014-15ம் ஆண்டில் மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 8.56 லட்சமாக உயர்ந்தது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் நிலையான சரிவைக் கண்டது. 2019-2020-ம் ஆண்டு கொரோனா தொற்றின்போது இது 1.62 லட்சமாக குறைந்தபட்சமாக இருந்தது.
கொரோனாவிற்குப் பிறகு, விண்ணப்பங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தாலும், 2022-23ல் 6.99 லட்சத்திலிருந்து 2023-24ல் 6.79 லட்சமாக(3%) குறைந்தது. இதன் விளைவாக கடந்த நிதியாண்டில் விசா மறுப்புகளின் முழுமையான எண்ணிக்கை (2.79 லட்சம்) குறைந்தது.2023-24ம் ஆண்டில் மொத்தம் 4.01 லட்சம் எஃப்-1 விசாக்கள் வழங்கப்பட்டன. இது முந்தைய ஆண்டு 4.45 லட்சமாக இருந்தது. அமெரிக்காவில் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கான குடியேற்றம் அல்லாத வகையாக எஃப்-1 விசா உள்ளது.
எஃப்-1 விசா நிராகரிப்புக்கு காரணம் என்ன?
தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: அனைத்து விசா மீதான முடிவுகளும் குடிவரவு மற்றும் தேசிய சட்டம் (INA)மற்றும் கூட்டாட்சி விதிமுறைகளின்படி தீர்மானிக்கப்படுகின்றன என்றார். நாடு வாரியாக எஃப்-1 விசாக்கள் நிராகரிக்கப்படும் விகிதம் குறித்த தரவை வெளியுறவுத்துறைபகிர்ந்து கொள்ளவில்லை. மேலும் அவர்கள் "கோரப்பட்ட துல்லியமான தரவை வெளியிடுவதில்லை" என்றும் அவர் கூறினார். 2019 நிதியாண்டிலிருந்து விசா தரவை கணக்கிடுவதற்கான "முறையில் மாற்றம்" இருப்பதையும் செய்தித் தொடர்பாளர் சுட்டிக் காட்டினார்.
2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 64,008 இந்திய மாணவர்களுக்கு விசாக்கள் வழங்கப்பட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த டிசம்பரில் செய்தி வெளியிட்டிருந்தது. இது 2023-ல் இதே காலகட்டத்தில் 1.03 லட்சமாக இருந்தது. மார்ச்-செப்டம்பர் மாதங்களுக்கான மாதாந்திர அறிக்கைகள் டிச.2024-ல் புதுப்பிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை தற்போது கூறுகிறது. இதன்மூலம், ஜனவரி-செப்டம்பர் வரையிலான 9 மாதங்களுக்கான மொத்த எண்ணிக்கை 63,973-ஆக சற்று குறைவாக உள்ளது. தரவுகளின்படி, 2021-ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 65,235 விசாக்களும், 2022 ஆம் ஆண்டில் 93,181 விசாக்களும் வழங்கப்பட்டன.
அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர் குழுவில் இந்திய மாணவர்கள் கணிசமான விகிதத்தில் உள்ளனர். ஓபன் டோர்ஸ் 2024 அறிக்கை, 2023-24ம் ஆண்டில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சீனர்களை விட அதிகமாக இருந்தது. இதனால் இந்தியர்கள் அமெரிக்காவில் மிகப் பெரிய சர்வதேச மாணவர் குழுவாக (சர்வதேச மாணவர்களில் 29.4%) மாறினர். ஓபன் டோர்ஸ் தரவுகளின்படி, 2023-24ம் ஆண்டில் அமெரிக்காவில் 3.31 லட்சம் இந்திய மாணவர்கள் இருந்தனர்.
சில நாடுகள் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முயலும் நிலையில், எஃப்-1 நிராகரிப்புகளின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச மாணவர்களில் இந்தியர்கள் 2வது பெரிய ஆதாரமாக இருக்கும் நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் இங்கிலாந்து கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் விளைவாக, பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர் சேர்க்கை 40% வரை குறைந்துள்ளது.