பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளின் ஏறக்குறைய ஒரு ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, சர்ச்சைக்குரிய மூன்று வேளாண்ச் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அறிவித்தார். விவசாயிகள் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020; அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தம்) சட்டம், 2020; மற்றும் விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020, ஆகிய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த புதிய சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) ஒழிக்க வழிவகுக்கும் மற்றும் பெரிய கார்ப்பரேட்களின் கைகளில் விவசாயத்தை விட்டுவிடும் என்று விவசாய அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், 2020
இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு, "எவருக்கும் எங்கும் விற்கும் சுதந்திரத்தை" வழங்கும் என்று அரசாங்கம் கூறியது. விவசாய விளைபொருட்களின் பெரும்பகுதி ஏற்கனவே ஏபிஎம்சி (விவசாய விளைபொருள் சந்தைக் குழு) போன்ற ஒழுங்குபடுத்தப்பட்ட யார்டுகளுக்கு வெளியே விற்கப்படுவதால் சட்டத்தில் புதிதாக எதுவும் இல்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், APMC சந்தை யார்டுகள், தினசரி ஏலங்கள் மூலம் தரநிலை விகிதங்களை நிர்ணயித்து, விவசாயிகளுக்கு நம்பகமான விலை சமிக்ஞைகளை வழங்குகின்றன.
இந்தச் சட்டம் இரண்டு சந்தைகளுக்கும், இரண்டு வெவ்வேறு விதிமுறைகளுக்கும் வழிவகுக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இரண்டு வெவ்வேறு சட்டங்கள், வெவ்வேறு சந்தைக் கட்டண விதிகள் மற்றும் பல்வேறு விதிகளுக்கு உட்பட்டு ஏபிஎம்சி மார்க்கெட் யார்டுகளில் ஏற்கனவே இருக்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையை தாண்டி, "வர்த்தகப் பகுதியில்" நடைமுறையில் கட்டுப்பாடற்ற சந்தையை உருவாக்கி விளைபொருட்களின் விலை, எடை, தரம் மற்றும் ஈரப்பதம் அளவீடு போன்ற பிரச்சனைகளில் விவசாயிகளை சுரண்டுவதற்கு வழிவகுக்கும் என்பதுதான் இந்தச் சட்டத்தின் முக்கிய பிரச்சனை என விவசாய சங்கங்கள் கூறுகின்றன.
இந்தச் சட்டத்தில் வணிகர்களை ஒழுங்குபடுத்துவதற்கான எந்த ஏற்பாடும் இல்லை. பான் எண் (நிரந்தர கணக்கு எண்) உள்ள எந்தவொரு நபரும் சந்தைகளில் இருந்து தானியங்களை தங்கள் சொந்த விலையில் கொள்முதல் செய்து விளைபொருட்களை பதுக்கி வைக்க தகுதியுடையவர். வணிகர்களை ஒழுங்குபடுத்துவதற்கு பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பதிலாக, முன்மொழியப்பட்ட திருத்தங்களில் மத்திய அரசு வணிகர்களை ஒழுங்குபடுத்துவதை மாநில அரசுகளிடம் விட முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதனை மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் விவசாய சங்கள் எடுத்துரைத்தனர். உத்தேச சட்டத் திருத்தத்தில் கூட சந்தைப் பகுதி தெளிவாக வரையறுக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
“தனியார்கள் மண்டிகளை உருவாக்கினால், தற்போதுள்ள ஏபிஎம்சிகள் போய்விடும் என்றும், குறைந்தப்பட்ச ஆதரவு விலையின் கீழ் அரசு பொது கொள்முதல் முறையை ஒழித்துவிடும் என்றும், அனைத்தும் பெரிய கார்ப்பரேட்கள் மற்றும் பெரிய விவசாயிகளால் கட்டுப்படுத்தப்படும் என்றும் விவசாயிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது,” என்றார் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் (PAU), முதன்மை பொருளாதார நிபுணர், (மார்க்கெட்டிங்) பேராசிரியர் சுக்பால் சிங். மத்திய அரசு மாநில அரசாங்கங்களின் பங்கை "குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது" என்றும் அவர் கூறினார்.
வணிகர்களால் ஏதேனும் மோசடி நடந்தால் விவசாயிகள் நீதிமன்றத்தை அணுகுவதற்கான எந்த விதியும் இல்லை. அவர்கள் SDM அல்லது துணை ஆணையரை மட்டுமே அணுக முடியும். பின்னர், விவசாயிகள் சிவில் நீதிமன்றத்தை அணுகும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முன்வந்தது.
விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், 2020
இந்தச் சட்டம் விவசாயத்தில் இருந்து இடைத்தரகர்களை அகற்றும் என்று அரசு கூறியது. பஞ்சாபில், அர்தியாக்கள் (கமிஷன் முகவர்கள்) தங்கள் விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்காக அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையே இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர். எவ்வாறாயினும், புதிய சட்டம் புதிய அமைப்பில் பல இடைத்தரகர்களைக் கொண்டுவரும் என்று வாதிட்ட விவசாய அமைப்புகள், இந்த சட்டம் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவில்லை என்று கூறியது.
சட்டத்தின் பிரிவுகள் 2 (g), (ii) Sec.2 (d) ,Sec.3 (1) (b), Sec 4(1), 4(3), மற்றும் 4(4) ஆகியவை பல்வேறு இடைத்தரகர்களின் வகைகளை உள்ளடக்கும் என்றார்கள்.
எடுத்துக்காட்டாக, பிரிவு 2 (g) கூறுகிறது: "ஒரு பண்ணை ஒப்பந்தம் என்பது ஒரு விவசாயி மற்றும் ஒரு ஸ்பான்சர் அல்லது ஒரு ஸ்பான்சர் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு இடையேயான ஒப்பந்தமாக இருக்க வேண்டும். ஸ்பான்சர் அத்தகைய விவசாயப் பொருட்களை விவசாயியிடமிருந்து வாங்குவதற்கும் விவசாய சேவைகளை வழங்குவதற்கும் ஒப்புக்கொள்கிறார். இந்தப் பிரிவில் மூன்றாம் தரப்பினர் குறித்து சரியாக வரையறுக்கப்படாமல் விடப்பட்டுள்ளதாகவும், அது எந்த நபராகவோ அல்லது இடைத்தரகராகவோ இருக்கலாம் என்றும், அத்தகைய சூழ்நிலையில் வணிக முகவர்கள், அர்ஹதியாக்கள் மற்றும் கிராம டவுட்டுகள் போன்ற பல இடைத்தரகர்கள் உருவாக வழிவகுக்கும் என்றும் விவசாயிகள் வாதிட்டனர்.
பிரிவு 2 (g) (ii) இல் உள்ள “ஸ்பான்சர்” மற்றும் பிரிவு 3 (1) (b) இல் உள்ள “பண்ணை சேவை வழங்குநர்” ஆகிய வார்த்தைகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் கூறினர். மேலும், பிரிவு 4 (1) & பிரிவு 4 (3) போன்றவை அமைப்பினுள் மற்ற இடைத்தரகர்களை உருவாக்க வழிவகுக்கும் பல வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளது.
"பிரிவு 10, 'ஒரு அக்ரிகேட்டர் அல்லது பண்ணை சேவை வழங்குநர் விவசாய ஒப்பந்தத்தில் ஒரு பிரிவாக இருக்கலாம்' என்று கூறுகிறது. "அக்ரிகேட்டர்' என்பது ஒரு விவசாயி அல்லது விவசாயிகளின் குழுவிற்கும் ஸ்பான்சருக்கும் இடையில் ஒரு இடைத்தரகராகச் செயல்படும் மற்றும் விவசாயிகள் மற்றும் ஸ்பான்சர் ஆகிய இருவருக்கும் ஒருங்கிணைப்பு தொடர்பான சேவைகளை வழங்கும் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு (FPO) உட்பட எந்தவொரு நிறுவனத்தையும் குறிக்கிறது" என்று விவசாய சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
பீகாரில், ஏபிஎம்சி சட்டத்தை நீக்கியதைத் தொடர்ந்து, பல கிராம அளவிலான டவுட்டுகள் மற்றும் சிறு மற்றும் பெரிய வணிகர்கள் விவசாயிகளிடமிருந்து பயிர் கொள்முதலைக் கட்டுப்படுத்தத் தொடங்கினர் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்தன.
அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தம்) சட்டம், 2020
இச்சட்டம் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, மனிதர்களுக்கும், ஏழைகளுக்கும், நுகர்வோருக்கும் எதிரானது என விவசாயிகள் தெரிவித்தனர். அதை அமல்படுத்தினால் மக்கள் பட்டினியால் சாவார்கள் என்றார்கள். கடந்த ஓராண்டில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது இந்தச் சட்டத்தின் விதிகளை மத்திய அரசு கூட "புறக்கணித்தது" என்று குறிப்பிட்டனர்.
இந்தச் சட்டத்தின் முன்னுரை, "விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது" என்று கூறுகிறது, ஏனெனில் அத்தியாவசியப் பொருட்கள் (EC) சட்டம் 1955 விவசாயிகளைப் பற்றியோ அவர்களின் வருமானத்தைப் பற்றியோ பேசவில்லை. விவசாயிகள் அல்லது எஃப்பிஓக்கள் விளைபொருட்களை சேமித்து வைப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் ECA இன் கீழ் எந்த தடையும் இல்லை. ஆனால், விவசாயிகளின் விளைபொருட்களை இருப்பு வைக்கும் விவசாய வணிக நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
"தற்போதைய சட்டத்தில், அனைத்து உணவுப் பொருட்களுக்கும் இத்தகைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன, இது வணிகர்களுக்கு எந்த அளவிலும் வாங்குவதற்கும் சேமித்து வைப்பதற்கும் சுதந்திரத்தை அளித்தது, எனவே இது பதுக்கலுக்கு வழிவகுக்கிறது. எனவே இது ‘உணவு பதுக்கல் (கார்ப்பரேட்களுக்கான சுதந்திரம்) சட்டம்’ என்று அழைக்கப்பட வேண்டும்,” என்று அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC) கூறியது, மேலும், இது பெரிய நிறுவனங்களின் முழுமையான சந்தை ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும், அந்த நிறுவனங்கள் விவசாயிகளுக்கு விதிமுறைகளை ஆணையிடும் என்று குழு கூறியது.
"சில்லறை சந்தையில் விலை உயர்வு ஏற்படும் போது, குறைந்த விலைக்கு விற்கும் விவசாயிகளுக்கு பலன் வழங்கப்படுவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. பொருட்களின் விலை உயர்வு இறுதியில் நுகர்வோரை பாதிக்கிறது, ”என்று விவசாய அமைப்புகள் கூறுகின்றன. தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் வரம்பற்ற இருப்பு வைக்கும்போது, நுகர்வோர் விலை கிடுகிடுவென உயரும் என்று விவசாய அமைப்புகள் கூறுகின்றன.
ஜக்மோகன் சிங் பாட்டியாலா, பார்தி கிசான் யூனியன் (பிகேயு) ஏக்தா (டகவுண்டா) பொதுச் செயலாளர் ஜக்மோகன் சிங் பாட்டியாலா கூறுகையில், பொது விநியோகத் திட்டத்தின் (பிடிஎஸ்) கீழ் தானியங்களைப் பெறும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழை நுகர்வோரை இந்த சட்டம் பாதிக்கிறது. “இதைச் செயல்படுத்தினால் மக்கள் பட்டினியால் சாவார்கள். தற்போதுள்ள MSP முறையின் கீழான கொள்முதலுக்கும் புதிய வேளாண் சட்டங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால், EC திருத்தச் சட்டத்தில், இந்தச் சட்டத்தின் கீழ் அல்லது வேறு எந்தச் சட்டத்தின் கீழும் அரசாங்கத்தால் தற்போது அமலில் உள்ள PDS அல்லது PDS (TPDS), தொடர்பான எந்த உத்தரவுக்கும் 'இந்த துணைப்பிரிவில் உள்ள எதுவும் பொருந்தாது.' என்று அவர் கூறினார், மேலும் PDS தொடரும் என்று சட்டம் கூறவில்லை என்றார்.
மேலும், இச்சட்டம் "தற்போதைக்கு அமலில் உள்ள PDS மற்றும் TPDS க்கு பொருந்தாத தன்மையை" தருகிறது, மேலும் தற்போது அமலில் உள்ளதை இன்னும் மோசமாக்கும், என்றும் ஜக்மோகன் சிங் கூறினார்.
"PDS மூலம் தானியங்களைப் பெறும் மக்களுக்கு, சந்தையில் இருந்து பொருட்களை வாங்குவதற்கு அரசாங்கம் கொஞ்சம் பணம் கொடுத்தாலும், விலை ஏற்ற இறக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் அது சரி வராது," என்று ஜக்மோகன் சிங் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.