/indian-express-tamil/media/media_files/2025/05/12/M6uQ06ZCMRt5ZofCy4UA.jpg)
பாகிஸ்தானை பதற விட்ட பிரம்மோஸ் ஏவுகணை!
2001 ஜூன் 12-ல் முதன்முதலாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட பிரம்மோஸ் அதிவேக கப்பல் ஏவுகணை, ஆபரேஷன் சிந்துரில் தான் முதன்முறையாக போர்ச் சூழ்நிலையில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சனிக்கிழமை அதிகாலை (மே 10) பாகிஸ்தான் இராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட பதிலடி துல்லியத் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, இந்திய ஆயுதப் படைகள் HAMMER (அதிக துல்லியத்துடன் கூடிய நீண்டதூர வெடிபொருள்), ஒரு வான்-தரை துல்லிய வழிகாட்டல் வெடிபொருள் மற்றும் SCALP ஒரு வான்வழி கப்பல் ஏவுகணை போன்ற ஏவுகணைகளையும் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
ஞாயிற்றுக்கிழமை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவில் பிரம்மோஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதி மையத்தை காணொலி மூலம் திறந்துவைத்தார். அப்போது பேசியவர், இந்த ஏவுகணை இந்தியா மற்றும் ரஷ்யாவின் உயர்தர பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் சங்கமம் என்று குறிப்பிட்டார். இந்த ஏவுகணை "உலகின் அதிவேக சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணைகளில் ஒன்று மட்டுமல்ல, இந்திய ஆயுதப் படைகளின் வலிமையின் செய்தி, எதிரிகளுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி மற்றும் நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதில் தேசத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டின் செய்தி" என்றும் புகழாரம் சூட்டினார்.
பிரம்மோஸ் ஏவுகணை மிகவும் பல்துறை திறன் கொண்ட 'மறைந்து தாக்கும்' வகை ஏவுகணையாகக் கருதப்படுகிறது. தரை அடிப்படையிலான, கப்பல் அடிப்படையிலான, வான்வழி, நீர்மூழ்கிக் கப்பல் அடிப்படையிலான அதன் அனைத்து வகைகளிலும் தனது திறன்களை நிரூபித்துள்ளது பிரம்மோஸ்!
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Story of BrahMos
பிரம்மோஸ் ஏன் உருவாக்கப்பட்டது?
1980-களில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் முக்கியப் பங்காற்றிய இந்தியாவின் ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டம் (IGMDP), அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட அக்னி ஏவுகணைத் தொடரை உருவாக்கத் தொடங்கியது. இந்த திட்டம், தரை-வானில் தாக்கும் ஆகாஷ் ஏவுகணை, தரை-தரை குறுகிய தூரபாலிஸ்டிக் ஏவுகணை பிருத்வி மற்றும் டாங்கி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணை நாக் உள்ளிட்ட பலதரப்பட்ட திறனுள்ள ஏவுகணைகளை உருவாக்கியது.
1990களில், இந்திய கொள்கை வகுப்பாளர்கள் ஆயுதப்படைகளை குறிவைத்து தாக்கும் திறன் கொண்ட கிரூஸ் ஏவுகணை தேவை உள்ளதாக உணர்ந்தனர். இந்த வகையான ஏவுகணைகள் பெரும்பாலான பறக்கும் பாதையையும் ஒரே மாதிரியான வேகத்தில் கடந்து, அதிக துல்லியத்துடன் வெடிகுண்டுகளை வழங்கும் திறன் கொண்டவை. இந்த ஏவுகணைகள் பாலிஸ்டிக் ஏவுகணைகளிலிருந்து வேறுபடுகின்றன. பாலிஸ்டிக் ஏவுகணைகள் நீண்ட தூரங்களுக்கு போர்வெடிப்புகளை கொண்டு செல்ல பயன்படுகின்றன. 1991 ஆம் ஆண்டில் நடந்த வளைகுடா போர் (Gulf War) நேரத்தில் கிரூஸ் ஏவுகணைகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட நிகழ்வு, அவற்றின் தேவையை மேலும் வலியுறுத்தியது.
ரஷ்யாவுடன் ஆரம்ப கலந்துரையாடலுக்குப் பிறகு, 1998 ஆம் ஆண்டு பிப்ரவரியில் மாஸ்கோவில் நடந்த நிகழ்வில், பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் (DRDO) தலைவர் அப்துல்கலாம் மற்றும் ரஷ்யாவின் துணைப்பாதுகாப்பு அமைச்சர் என்.வி. மிகைலோவ் ஆகியோர் இடையிலான இந்திய-ரஷ்ய அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவின் DRDO மற்றும் ரஷ்யாவின் NPO மஷினோஸ்ட்ரோயெனியா (NPOM) ஆகிய இரு அமைப்புகளுக்கிடையில் 'பிரமோஸ் ஏரோஸ்பேஸ்' எனும் கூட்டு முயற்சி நிறுவப்பட்டது. ‘பிரமோஸ்’ என்ற பெயர், இந்தியாவின் பிரமபுத்திரா நதியும், ரஷ்யாவின் மாஸ்கோவா நதியும் இணைந்தே உருவானது. இந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின்கீழ் ஒர் அதிவேக, மிகுந்த துல்லியத்துடன் குறிவைக்கும் கிரூஸ் ஏவுகணை, அதன் பல்வேறு வடிவங்களை வடிவமைத்தல், உருவாக்கல் மற்றும் உற்பத்தி செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்த கூட்டு நிறுவனத்தில் இந்தியா 50.5% பங்கையும், ரஷ்யா 49.5% பங்கையும் வைத்துள்ளது. இந்த ஏவுகணையின் முதல் வெற்றிகரமான சோதனை 2001 ஜூன் 12-ம் தேதி, ஒடிஷாவின் சந்திபூர் கரையோரத்தில் அமைந்த ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தரை அடிப்படையிலான ஏவுதளத்தில் இருந்து நடத்தப்பட்டது.
பிரம்மோஸ் ஏவுகணையின் கட்டமைப்பு:
பிரம்மோஸ் ஒரு இரு-நிலை ஏவுகணை ஆகும். இதில் திட எரிபொருள் பூஸ்டர் எஞ்சின் முதல் நிலையில் உள்ளது. இந்த முதல் நிலை ஏவுகணையை ஒலியின் வேகத்தை விட அதிகமான அதிவேகத்திற்கு கொண்டு செல்கிறது, பின்னர் பிரிந்து விடுகிறது. திரவ ராம்ஜெட் எனப்படும் 2-வது நிலை செயல்பட்டு, ஏவுகணையை அதன் பயணத்தின்போது ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு வேகத்தில் நகரச் செய்கிறது. திரவ ராம்ஜெட் என்பது திரவ எரிபொருளைப் பயன்படுத்தும் ஒரு காற்று-சுவாசிக்கும் ஜெட் எஞ்சின் ஆகும். இதில், எரிபொருள் அதிவேக காற்று ஓட்டத்தில் செலுத்தப்பட்டு, பற்றவைக்கப்பட்டு உந்துதல் உருவாகிறது. பிரமோஸ் ஏவுகணை தீப்பற்றி மறைந்துவிடும் வகையை சேர்ந்தது. அதாவது, ஒருமுறை ஏவப்பட்ட பின், அதனை வழிநடத்த எந்த வெளிப்புற கட்டுப்பாடும் தேவையில்லை. பிரமோஸ் 15 கி.மீ. உயரத்தில் பயணிக்க முடியும். இலக்கை தாக்கும் இறுதிகட்டத்தில், வெறும் 10 மீ. உயரத்திலேயே பறக்கிறது. இதனால் எதிரியின் கண்டுபிடிப்பு, எதிர்வினையைத் தவிர்க்க முடிகிறது. இவை எதிரியின் தற்காப்பு தாக்குதலிலிருந்து தப்பிக்க போதுமான தூரத்தில் இருந்து ஏவப்படுகின்றன. இந்த ஆயுதங்கள் உலகின் பெரும்பாலான பெரிய இராணுவங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ளன.
தற்போது மேம்படுத்தப்பட்ட தூரத்தில் சோதனை செய்யப்படும் பிரம்மோஸ் ஏவுகணையின் வகைகள், அதன் அசல் தூரமான 290 கி.மீ. ஒப்பிடும்போது 350 கி.மீ. வரை உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன்கொண்டவை. மேலும் 800 கி.மீ. வரை அதிக தூரம் மற்றும் ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அதிகமான ஹைப்பர்சோனிக் வேகம் ஆகியவை எதிர்காலத்தில் சாத்தியமாகலாம் என்று கூறப்படுகிறது. ஒலியின் வேகத்தை விடக் குறைவான வேகத்தில் செல்லும் கப்பல் ஏவுகணைகளுடன் ஒப்பிடும்போது, பிரம்மோஸ் 3 மடங்கு வேகம், 2.5 மடங்கு அதிக பறக்கும் தூரம் மற்றும் இலக்கு கண்டறியும் வரம்பு ஆகியவற்றைக் கொண்டு உள்ளது. இதன் விளைவாக அதிக துல்லியம் மற்றும் 9 மடங்கு அதிக இயக்க ஆற்றல் கிடைக்கிறது.
பிரம்மோஸ் ஏவுகணை வகைகள்:
சந்திப்பூர் சோதனைத் தளத்தில் முதல் வெற்றிகரமான ஏவுதலுக்குப் பிறகு, பிரம்மோஸ் 2005-ல் இந்திய கடற்படையிலும், 2007 -ல் இந்திய ராணுவத்திலும், 2017-ல் இந்திய விமான படையிலும் இணைக்கப்பட்டது. சுகோய்-30 MKI போர் விமானத்துடன் முதல் வெற்றிகரமான பயணத்தையும் மேற்கொண்டது. தரை, வான், கடல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை ஏவுகணையின் பரந்த வகைப்பாடுகளாக இருந்தாலும், கடந்த 24 ஆண்டுகளில் மேம்பட்ட உணர்வு திறன்கள் (evolving sensing capabilities) மற்றும் வேகத்திலும் துல்லியத்திலும் மேம்படுத்தப்பட்ட பல பதிப்புகள் சோதிக்கப்பட்டும், உபயோகத்திற்கும் வந்துள்ளன.
1. கப்பல்களிலிருந்து ஏவப்படும் பிரமோஸ்:
நவீன கடற்படை தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இந்த பிரம்மோஸ் ஏவுகணையை, நிமிர்ந்த (Vertical) அல்லது சாய்ந்த (Inclined) முறையில் ஏவலாம். நகரும் (moving) மற்றும் நிலைத்த (static) கடற்படை தளங்கள் இரண்டிலிருந்தும் இயக்கக் கூடியது. கடல்-கடல் (sea-to-sea) மற்றும் கடல்-தரை(sea-to-land) ஆகிய 2 முறைகளிலும் பலமுறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்: பிரமோஸ் ஏவுகணையை தனி ஒன்றாகவோ அல்லது தொடர்ச்சியாக 8 முறை(salvo), ஒவ்வொன்றும் 2.5 விநாடிகள் இடைவெளியில் ஏவலாம். இப்படியான சல்வோக்கள், நவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் கொண்ட கப்பல்களின் குழுவையேத் தாக்கி அழிக்கக்கூடியவை. இந்த ஏவுகணை நீண்ட தூரத்தில் இருக்கும் கடற்படை மேற்பரப்பு இலக்குகளைத் தாக்குவதற்கான முக்கியமான தாக்கத் ஆயுதமாக (prime strike weapon) செயல்படுகிறது. இது இந்திய கடற்படையின் தாக்கும் திறனைப் பலமடங்கு உயர்த்துகிறது.
இந்தியக் கடற்படை, 2005 முதல் தனது முன்னணி போர் கப்பல்களில் (frontline warships) பிரமோஸ் ஏவுகணைகளை நிறுவியது. ரடார் அப்பால் (beyond the radar horizon) உள்ள இலக்குகளையும் மிகுந்த துல்லியத்துடன் பிரமோஸால் தாக்க முடியும். இந்திய கடற்படையின் முக்கிய கப்பல்களில் ஒன்றான INS ராஜ்புத், பிரமோஸ் ஏவுகணையை முதலில் பயன்படுத்திய கப்பல் ஆகும். இதன்பின், பிரம்மோஸ் மற்ற பல போர்க் கப்பல்களிலும் நிறுவப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது. இந்த வளர்ச்சி, இந்தியக் கடற்படையின் நீண்ட தூர தாக்குதல் திறனையும், எதிரி தடுப்பு அமைப்புகளைக் கடந்த தாக்கவியலையும் மேம்படுத்தி உள்ளன.
2. தரை அடிப்படையிலான பிரம்மோஸ்: தரை அடிப்படையிலான பிரம்மோஸ் தொகுப்பில் 4 முதல் 6 வரை நகரும் தன்னாட்சி ஏவுதளங்கள் உள்ளன. ஒவ்வொரு ஏவுதளத்திலும் 3 ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றை கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் 3 வெவ்வேறு இலக்குகளை நோக்கி, வெவ்வேறு அமைப்புகளில் ஏவ முடியும். பிரம்மோஸ் அமைப்புகளின் பல பிரிவுகள் இந்தியாவின் தரை எல்லைகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. பிரம்மோஸின் தரை தாக்குதல் பதிப்பு, மணிக்கு 2.8 மாக் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. மேம்படுத்தல்களுக்குப் பிறகு, இது 400 கி.மீ. வரையிலான இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் திறன் பெற்றுள்ளது. 1,000 கி.மீ. அதிகமான தூரம் மற்றும் 5 மாக் வரை வேகத்தில் செல்லும் மேம்பட்ட பதிப்புகள் உருவாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பிரம்மோஸின் தரை அமைப்புகள் அணு, உயிரியல் மற்றும் இரசாயன (NBC) பாதுகாப்பு கொண்ட குளிரூட்டப்பட்ட அறையுடன் வருகின்றன. பிரம்மோஸின் தரை தாக்குதல் பதிப்பு 2007 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த ஏவுகணைகள் 3 வெவ்வேறு கட்டமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட பிளாக் I, அதிவேகத்தில் தாழ்வாகப் பாய்ந்து இலக்கைப் பாகுபடுத்தி தாக்கும் திறன் கொண்ட பிளாக் II மற்றும் மலைப்பகுதி போருக்கான திறன் கொண்ட பிளாக் III.
3. வான்வழி பிரம்மோஸ்: பிரம்மோஸ் வான்வழி கப்பல் ஏவுகணை (ALCM), இந்தியாவின் முன்னணி போர் விமானமான சுகோய்-30 MKI-ல் பொருத்தப்பட்ட மிக கனமான ஏவுகணையாகும். நவ.2017-ல், பிரம்மோஸ் முதன்முறையாக வங்காள விரிகுடாவில் உள்ள கடல்சார் இலக்கை நோக்கி IAF-ன் முன்னணி போர் விமானத்திலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் பலமுறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
வானில் எரிபொருள் நிரப்பாமல் தொடர்ச்சியாக 1,500 கி.மீ. தூரம் வரை பறக்கும் திறன் கொண்ட பிரம்மோஸ் பொருத்தப்பட்ட சுகோய்-30 விமானங்கள், எல்லைகளிலும், முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் எதிரிகளுக்கு ஒரு முக்கியமான தடுப்பு சக்தியாகக் கருதப்படுகிறது.
4. நீர்மூழ்கிக் கப்பல் பிரம்மோஸ்: நீரின் மேற்பரப்பில் இருந்து சுமார் 50 மீட்டர் ஆழத்தில் இருந்து ஏவ முடியும். கொள்கலனில் சேமிக்கப்பட்ட ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலின் அழுத்தத் தாங்கும் பகுதியிலிருந்து செங்குத்தாக ஏவப்படுகிறது. மேலும், நீருக்கடியில் மற்றும் நீருக்கு வெளியே உள்ள பயணங்களுக்கு வெவ்வேறு அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. இந்த பதிப்பு முதன்முதலில் மார்ச் 2013-ல் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகே உள்ள மூழ்கிய தளத்திலிருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
5. எதிர்கால பிரம்மோஸ்-NG: பிரம்மோஸின் எதிர்கால பதிப்பான NG (நெக்ஸ்ட் ஜெனரேஷன்) முக்கியமாக வான் மற்றும் கடற்படை பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பதிப்பு குறைக்கப்பட்ட பரிமாணங்களையும் எடையையும் கொண்டிருக்கும், அடுத்த தலைமுறை மறைந்து தாக்கும் அம்சங்கள், மின்னணு எதிர்-எதிர் நடவடிக்கைகளுக்கு (ECCM) எதிராக அதிக செயல்திறன், நீர்மூழ்கி போர் மற்றும் டார்பிடோ குழாயிலிருந்து ஏவும் திறன் போன்ற அதிக பல்துறை திறன்களை கொண்டிருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.