கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சர்வதேச நாடுகளிடையே பெரும்பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாம் மருத்துவர்கள், செவிலியர்களின் முக்கியத்துவத்தை இத்தருணத்தில் அறிந்துள்ளோம்.
மருத்துவத்துறையில் மருத்துவர்கள் மருந்துகளின் மூலம் பாதி நோயைத்தான் குணமாக்குகிறார்கள். நோயாளிகள் உடலளவில் மட்டுமல்லாது மனதளவிலும் முழுமையாக குணம் பெறுவது என்பது, மருத்துவமனையில் அவர்களுக்கு தேவையான பணிவிடைகளை மேற்கொள்ளும் செவிலியர்கள் ( நர்ஸ்கள்) மூலமாகத்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.
அத்தகைய சிறப்பு கொண்ட செவிலியர்களை போற்றும் வகையில், அவர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட கைவிளக்கேந்திய காரிகை என நமது பள்ளிப்பாடநூல்களில் படிக்கப்பட்ட புளோரென்ஸ் நைட்டிங்கேலை நாம் இந்நேரம் நினைவுகூர்வோம்.
புளோரென்ஸ் நைட்டிங்கேலின் 200வது பிறந்தநாள், வரும் மே 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளை, நாம் இதுவரை கோலாகலமாக கொண்டாடாத நிலையில், இந்தாண்டு நாம் இந்நாளை சிறப்புடன் கொண்டாட கடமைப்பட்டுள்ளோம்.
புளோரென்ஸ் நைட்டிங்கேல் (1820-1910), அவரது கணிதத்திறமையால் மக்களிடையே அறியப்பட்டார். அந்த கணிதத்திறமையின் உதவியால், நோய்ப்பாதிப்பை கணக்கிட்டு மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கைகழுவுதல் என்ற நிகழ்வே, நைட்டிங்கேலின் முதன்மையான விழிப்புணர்வு அறிவுரையாக இருந்துவந்ததை யாரும் மறந்துவிட இயலாது. இவர் தொடர்பான சிலைகள், ஆவணங்கள் உள்ளிட்டவைகள் லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பினும் அதை சென்றுபார்க்காதவர்கள் அந்தளவில் இல்லை என்பதே உண்மை. இந்நிலையில், சர்வதேச அளவிலான கொரோனா பாதிப்பு, நைட்டிங்கேலின் அருமையை மீண்டும் மக்களுக்கு அறிய வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளது.
நைட்டிங்கேல், 1840ம் ஆண்டு கணிதம் படிக்க அனுமதி கோரி தனது பெற்றோரிடம் கேட்டிருந்தார். அதற்கு அவரது அம்மா அனுமதி அளிக்கவில்லை. அவளது பெற்றோர்., 1851ம் ஆண்டில் நர்சிங் படிப்பில் அவளை சேர்த்துவிட்டனர். செவிலியர் சேவைக்கு உள்ள மதிப்பை, நைட்டிங்கேல் போகப்போக உணரத்துவங்கினார். பின் மிகுந்த ஈடுபாட்டுடன் இந்த துறையில் புலமை பெற்று அடுத்த நிலைக்கு உயர்ந்தார்.
1854-56ம் ஆண்டு காலகட்டத்தில் நிகழ்ந்த கிரைமிய போரின் போது, துருக்கியில் உள்ள பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த போரில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சையளிக்கும் பொருட்டு செவிலியர்கள் பலரை பணிக்கு அமர்த்தினார். தலைமை அதிகாரியாக இருந்தபோதிலும், தினமும் இரவு, கையில் விளக்கு ஏந்தி, நோயாளிகளின் படுக்கைக்கே சென்று அவர்களிடம் உடல்நலம் குறித்து விசாரிப்பார். அவர்களுக்கு போதிய ஆறுதல் அளித்து வந்ததால், பொதுமக்களிடையேயும் அவருக்கு ஆதரவு பெருகியது.
செவிலியர் துறையில், புள்ளிவிவரங்களின் உதவியால், நோயின் தீவிரத்தன்மையை ஆராய்ந்து அதற்கேற்ப நோய்ச்சிகிச்சை வழிமுறைகளை வகுத்து நோயின் பாதிப்பை கட்டுப்படுத்திய இவரது திறமை அனைவராலும் பாராட்டப்பட்டது.
நைட்டிங்கேல் பணியில் இருந்த சமயத்தில், காலரா, டைபாய்டு உள்ளிட்டவைகளின் தொற்று அதிகமாக பரவியது. நோய்த்தொற்று, பாதிப்பு உள்ளிட்டவைகளின் விபரங்களை சேகரித்தார். இறப்பு விகிதம் குறித்த தகவல்களை திரட்டினார். சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டது மற்றும் அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியதன் மூலம் மரணவிகிதத்தின் அளவு கணிசமாக குறைந்தது. 1855ம் ஆண்டில், 60 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் 42.7 சதவீதமாக குறைந்ததாக, செயின்ட் ஆண்ட்ரூஸ் மருத்துவ ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைட்டிங்கேல், சேகரித்த நோய் பாதிப்பு தகவல்களை கொண்டு கிராபிக்ஸ் உதவியுடன், வரைபடங்களை உருவாக்குகிறார். அந்த வரைபடத்தில், இறப்பு விகிதத்தை நீலநிறத்திலும் வரையறுத்துள்ளார். நோயுற்றதன் காரணமாக நிகழும் இறப்புகள், காயம்பட்டவர்களின் விகிதங்கள் உள்ளிட்டவைகள் இந்த வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.
நைட்டிங்கேல் குறித்த Florence Nightingale: Avenging Angel என்ற புத்தகத்தை எழுதிய ஹியூக் ஸ்மால், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளதாவது, நைட்டிங்கேல், இரண்டு வகையான ஸ்டாட்டிஸ்டிக்ஸ் அனாலிசிஸை மேற்கொண்டிருந்தார். அதில் முதலாவது, ஒரு நோய்த்தொற்று ஏற்படும்போது மருத்துவமனைகளிலேயே அதிகளவில் மரணங்கள் ஏற்படுகின்றன. இதற்கு அந்தந்த மருத்துவமனைகளில் உள்ள உட்புற காரணிகளே முக்கியபங்கு வகிக்கின்றன.
இரண்டாவதாக, மருத்துவனையில் சுகாதாரம் மேம்படுத்தப்படின் அதாவது அங்குள்ள உட்புற காரணிகளின் தூய்மை அதிகரிக்கப்படின், நோயாளிகளின் உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்தார்.
கொரோனா விவகாரத்தில், நைட்டிங்கேலின் இந்த ஸ்டாட்டிஸ்டிக்ஸ் அனாலிசிஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனாவால் சர்வதேச நாடுகளில் நிகழ்ந்துள்ள அதிகப்படியான மரணங்கள், அதில் மேற்கொள்ளப்பட்ட அனாலிசிஸ், நாடுகள் தங்களது மருத்துவமனைகளில் மேற்கொண்டிருந்த தவறான நடைமுறைகளினாலேயே இந்தளவிற்கு மரணங்கள் அதிகரித்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ள புளோரென்ஸ் நைட்டிங்கேல் அருங்காட்சியகம், செயின்ட் தாமஸ் மருத்துவமனையின் உட்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் பெவிலியன்களாக அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும்வகையில் இந்த 3 பெவிலியன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2020ம் ஆண்டு நைட்டிங்கேலின் 200வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், இந்த அருங்காட்சியகம் முழுவதும் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இவருக்கு பெருமை சேர்க்கும் பொருட்டு, ஆண்டுதோறும் மே 12ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியககத்தில் இந்தாண்டு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்த தேதிகள் குறிக்கப்பட்டடிருந்தன. கொரோனா பீதி காரணமாக, இந்த அருங்காட்சியகம், கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளதால், இதன்மூலம் பயன்பெற்று வந்த பல்வேறு சிறிய அமைப்புகள் கடுமையாக நிதிநெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மக்கள் தாராளமாக நன்கொடைகளை அளிக்க முன்வர வேண்டும் என்று அருங்காட்சியகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தின் மூலம் கிடைக்கும் நிதியுதவியால், பல்வேறு உயிர்கள் 1875ம் ஆண்டு முதல் காப்பாற்றப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் தற்போது இந்த அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளதால், பலர் மருத்துவ சிகிச்சைகளை பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.
பிரிட்டனில் உள்ள சேரிப்பகுதி மக்களிடையே சுகாதாரத்தின் மகத்துவத்தை வலியுறுத்தும் வகையில் புதிய சட்டதிட்டங்களை நைட்டிங்கேல் உருவாக்கியதோடு மட்டுமல்லாது அதனை மக்கள் கடைபிடிப்பதற்கான வழிவகைககளை மேற்கொண்டார். ராணுவத்தில், தனிநபர் சுகாதாரத்தை வலியுறுத்தி அவர்களை கடைப்பிடிக்க செய்ததன் பலனாக, மரண விகிதம் கணிசமான அளவு சரிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க