Free online repository of 2 million research papers: கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் கொரோனா குறித்த ஆய்வு கட்டுரைகளில் தொடர்ந்து “bioRxiv” மற்றும் “medRxiv” என்ற வார்த்தைகளையும், “preprint servers” என்ற வாக்கியத்தையும் படித்திருப்பீர்கள். கொரோனா சம்பந்தமாக உலகம் முழுவதும் நடைபெற்று வரும் ஆய்வுகள், ஆய்வு முடிவுகள் தொடர்பான பல்வேறு கட்டுரைகளில் இந்த மூன்று வாக்கியங்களையும் உங்களால் காண முடியும்.
தற்போது கொரோனா வைரஸ் தொடர்பான முடிவுகளை உடனே அறிந்து கொள்ள அது தொடர்பான கொள்கை ரீதியான மாற்றங்களை மேற்கொள்ள, உதாரணமாக ஊரடங்கு அறிவிக்க, ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பணிகளை துரிதப்படுத்த, மருத்துமனைகள் மற்றும் மருத்துவர்களை தயார் நிலையில் வைக்க என்று பல முக்கிய முடிவுகளை எடுக்க “bioRxiv” மற்றும் “medRxiv” என்ற வார்த்தைகளும் அதன் பின்னால் அமைந்திருக்கும் இணையங்களும் பெரும் பங்காற்றியுள்ளது.
20 லட்சம் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு, உண்மையான ப்ரீப்ரிண்ட் செர்வராக செயல்பட்டு வந்த arXiv.org தளத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு இந்த தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. arXiv.org இணையத்தில் Affine Iterations and Wrapping Effect: Various Approaches என்ற ஒரு ஆராய்ச்சி முடிவு இந்த மாத துவக்கத்தில் வெளியிடப்பட்டது.
arXiv என்பதை (Archive) ஆர்கைவ் என்று உச்சரிக்க வேண்டும். ஏன் என்றால் X என்பது Chi ஒலியமைப்புடன் பயன்படுத்தப்பட வேண்டும். இது கிரேக்க மொழியின் 22வது எழுத்தாகும். இயற்பியலாளர்கள், வானியல் வல்லுநர்கள், கணினி விஞ்ஞானிகள் மற்றும் கணிதவியலாளர்களுக்கு தற்போது கிடைத்துள்ள மாபெரும் ஆன்லைன் ஆராய்ச்சிக் களஞ்சியமாக இந்த இணையம் செயல்பட்டு வருகிறது.
30 ஆண்டுகளாக சேவையை வழங்கும் arXiv
ஜனவரி 10ம் தேதி அன்று சயின்டிஃபிக் அமெரிக்கன் இதழில் இந்த இணையம் குறித்து வெளியிடப்பட்டிருந்த கட்டுரையில், ஆர்கைவ் 1989ம் ஆண்டு ஒரு சில கோட்பாட்டளர்களுக்கான மின்னஞ்சல் பட்டியலாக இது துவங்கப்பட்டது. 1991ம் ஆண்டு லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகத்தில் தொழில்நுட்ப ஊழியராக இருந்த இயற்பியலாளர் பால் கின்ஸ்பார்க், தனது சக ஊழியர் ஜோன் கோனின் மின்னஞ்சல் பட்டியலை ஆட்டோமேட்டட் செய்தார். அந்த பட்டியலை எவரும் அணுகவும் தங்களின் கட்டுரைகளை சமர்பிக்கவும் வகையிலான களஞ்சியமாக அதை மாற்றினார் என்று கூறியுள்ளது.
இவ்வாறு பிறந்த arXiv இணையத்தில் 2008ம் ஆண்டு வரை 5 லட்சம் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. 2014ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்தது. 7 ஆண்டுகளில் 20 லட்சம் கட்டுரைகளாக அது வளர்ச்சி பெற்றுள்ளது.
கின்ஸ்பெர்க் தற்போது கார்னெல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். சட்டப்பூர்வமாக ஆர்கைவ் அங்கே உருவாக்கப்பட்டுள்ளது. கையெழுத்துப் பிரதிகளை பரிமாற்றம் செய்து கொள்ள ஏதுவான ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையை தூண்டிய கோன் தற்போது UC பெர்க்லியில் உள்ளார்.
ஒமிக்ரானுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது கோவாக்சின் – பாரத் பயோடெக்கின் ஆராய்ச்சி முடிவுகள்
வேகமாகவும் இலவசமாகவும் பதிவேற்ற முடியும்
ஆர்கைவ் மதிப்பாய்வு செய்து கட்டுரைகளை இங்கே வெளியிடவில்லை என்ற போதும் மதிப்பாய்விற்காக காத்திருக்கும் ஆராய்ச்சியாளார்களின் கட்டுரைகளை அவர்கள் மிக வேகமாக இங்கே பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம்ம் செய்த ஒரே நாளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் தளத்தில் வெளியிடப்படும். மற்ற முக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டு நிறுவனங்களில் பாரம்பரிய, மெதுவான, முறையோடு ஒப்பிடுகையில் இது சிறப்பாகவே செயல்படுகிறது. உயிர் அறிவியல் முன்அச்சு சேவையகங்களான bioRxiv மற்றும் medRxiv ஆகியவற்றிலும் இதே நிலை தொடரப்படுகிறது. பெருந்தொற்றின் வாழ்வா சாவா போராட்டத்தில் உண்மையாகவே மருத்துவ ஆராய்ச்சிகளை வேகப்படுத்த இந்த தளங்கள் பெரும் பங்காற்றியுள்ளது.
“இது எங்கள் துறைக்கு முதுகெலும்பு போன்றது” என்று CERN அறிவியல் தகவல் சேவை மையத்தின் தலைவர் அலெக்ஸ் கோல்ஸ் தி சயன்டிஃபிக் இதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது இயற்பியலாளர்கள் மற்றும் கணினி விஞ்ஞானிகளுக்கான ஒரு கருவி மட்டுமல்ல. இது ஒட்டுமொத்த அறிவார்ந்த தகவல்தொடர்பு செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்கைவில் அதிகம் தேடப்பட்ட கட்டுரைகளை எழுதிய ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் லானு கிம்மின் பணிகளை குறிப்பிட்டுள்ளது சயின்டிஃபிக் அமெரிக்கன் இதழ். மற்ற பாரம்பரிய இதழ்களில் தங்களின் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுவதில் பெரிதும் ஆர்வமற்றதாக இருக்கிறது கிம் குழு. பத்திரிக்கைகள், ஆராய்ச்சி முடிவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் கூட அவர்கள் ஆராய்ச்சியை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் மீடியமாக இருப்பதை விட அதிக அளவு க்யூரேட்டர்களாகவே இருக்கின்றனர் என்று கிம் குழு நம்புவதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கவலை அளிக்கும் சில காரணிகள்
இந்த ஆர்கைவில் சில பிரச்சனைகளும் உள்ளன. நியூயார்க் நகரத்தை தளமாகக் கொண்ட சைமன்ஸ் அறக்கட்டளை மற்றும் உலகெங்கிலும் உள்ள ஏராளமான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆதரவை பெற்றுள்ளோம் என்று ஆர்கைவ் தளம் ஒப்புக் கொள்கிறது. ஆனாலும்ம் சில தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றது. சயின்டிஃபிக் அமெரிக்கன் கட்டுரையின்படி, ஒரு சிறிய ஊதியம் பெறும் ஊழியர்கள் தன்னார்வ மதிப்பீட்டாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் 1,200 கட்டுரைகளை சமர்பிக்க உதவுகின்றார்கள். நாங்கள் குறைவான பணியாளர்களுடன் போதுமான நிதி உதவியின்றி தவிக்கின்றோம் என்று ஆர்கைவ் இதழின் இயக்குநர் ஸ்டெய்ன் சிகுர்த்சன் கூறியுள்ளார்.
ஆர்கைவில் பின்பற்றப்படும் கொள்கைகள் குறித்தும் தங்களின் கவலைகளை வெளியிட்டிருந்தது சயின்டிஃபிக் அமெரிக்கன் இதழ். அவர்கள் முன் அச்சிடப்பட்ட சேவையகத்தின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதற்கு எதிராகச் செயல்படுவது போல் தெரிகிறது. சீரற்ற நிதானம் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாமை ஆகியவற்றையும் சுட்டிக் காட்டியது அந்த கட்டுரை என்று கர்நாடகாவின் சூரத் கல்லில் அமைந்திருக்கும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் இயற்பியலாளர் தீபக் வைத் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil