பாகிஸ்தானில் அதிகரித்த பொருளாதார நெருக்கடி; ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்கள் வெடித்தது ஏன்?
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு; பிராந்தியத்தை பாதிக்கும் பிற பிரச்சனைகளுக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு; பிராந்தியத்தை பாதிக்கும் பிற பிரச்சனைகளுக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) வெள்ளிக்கிழமை (மே 10) முதல் வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார் மற்றும் 90 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிகரித்து வரும் உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை எதிர்த்து நடந்த வேலைநிறுத்த போராட்டத்தின் போது, பிராந்தியத்தில் வணிகர்கள் தலைமையிலான கூட்டு அவாமி நடவடிக்கைக் குழுவின் சுமார் 70 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து வன்முறை வெடித்தது. பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி மற்றும் உயர் பணவீக்கம் அதன் மக்களுக்கு கஷ்டங்களை விளைவித்துள்ளது, மேலும் இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்துவதால் வர்த்தகர்களில் ஒரு பகுதியினர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisment
Advertisements
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்கள்
மின்சாரம் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து வணிகர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 2023 ஆகஸ்டிலும் அதிக மின் கட்டணத்திற்கு எதிராக இதேபோன்ற போராட்டங்கள் நடந்தன.
பொது போக்குவரத்து, கடைகள், சந்தைகள் மற்றும் வணிகங்கள் மூடப்பட்டதால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரமான முசாபராபாத்தில் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. மிர்பூர் மற்றும் முசாபராபாத் பிரிவுகளில் ஏராளமான போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்து போலீசாருடன் மோதிக்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை, சட்டமன்றம் மற்றும் நீதிமன்றங்கள் போன்ற அரசாங்க கட்டிடங்களை பாதுகாக்க துணை ராணுவ ரேஞ்சர்கள் அழைக்கப்பட்டனர்.
அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள் காரணமாக பாகிஸ்தானின் பொருளாதாரம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மிக அதிக பணவீக்கம் மற்றும் மோசமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. நுகர்வோர் பணவீக்கம் மே 2022 முதல் 20% க்கு மேல் உள்ளது, மேலும் மே 2023 இல் 38% ஐ தொட்டது என்று டான் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
பாரபட்சம் காட்டப்படுகிறது
அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதில் பாகிஸ்தான் அரசாங்கம் பாகுபாடு காட்டுவதாகக் கூறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். நீலம்-ஜீலம் திட்டத்தால் உற்பத்தி செய்யப்படும் 2,600 மெகாவாட் நீர்மின்சாரத்தில் நியாயமான பங்கைப் பெறவில்லை என்று பிராந்தியத்தின் முதல்வர் சௌத்ரி அன்வருல் ஹக் புகார் அளித்ததாக டான் செய்தித்தள் தெரிவித்துள்ளது.
அண்மைய வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஆதாரங்களுக்கான தனது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றும், அவர்களுக்கான ஊதியத்தை வழங்குவதற்காக மேம்பாட்டு நிதியை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் முதல்வர் ஹக் கூறியுள்ளார்.
இந்திய வர்த்தகத்தின் சரிவு
பிப்ரவரி 2019 புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, உலர் பேரீச்சம்பழம், கல் உப்பு, சிமென்ட் மற்றும் ஜிப்சம் போன்ற பாகிஸ்தானின் பொருட்களுக்கு 200% சுங்க வரியை இந்தியா உயர்த்தியதால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன் விளைவாக, இந்தியாவுக்கான பாகிஸ்தானின் ஏற்றுமதி சராசரியாக குறைந்தது. 2018 இல் மாதத்திற்கு $45 மில்லியன் என இருந்தநிலையில், மார்ச் மற்றும் ஜூலை 2019 க்கு இடையில் மாதத்திற்கு $2.5 மில்லியன் மட்டுமே ஏற்றுமதி இருந்தது என டான் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 2019 இல் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்தியா மேற்கொண்ட அரசியலமைப்பு மாற்றங்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்திய பின்னர் நிலைமை மிகவும் கடினமாகிவிட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் வர்த்தகம் ஆண்டுக்கு 2 பில்லியன் டாலராக குறைந்துள்ளது, இது உலக வங்கியால் மதிப்பிடப்பட்ட $37 பில்லியன் வர்த்தக திறனில் ஒரு சிறிய பகுதியே.
பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி
ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு உலகளாவிய உணவு மற்றும் எரிபொருள் விலைகள் உயர்ந்ததிலிருந்து பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. 2022-23 இல் இதேபோன்ற அந்திய செலாவணி சமநிலை நெருக்கடி இலங்கையையும் முடக்கியது, மேலும் இந்தியா ஆதரவு நடவடிக்கைகளை நீட்டிக்க வழிவகுத்தது.
பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 2021 இல் $ 20.1 பில்லியனில் இருந்து பிப்ரவரி 2023 இல் $ 2.9 பில்லியனாக குறைந்தது, இது ஒரு மாத இறக்குமதியை மட்டுமே ஈடுசெய்ய போதுமானது. பாகிஸ்தான் அதன் மொத்த முதன்மை எரிசக்தி விநியோகத்தில் கிட்டத்தட்ட 40% இறக்குமதி செய்கிறது.
பாகிஸ்தானின் பெரும்பாலும் உதவி சார்ந்த பொருளாதாரம் வளர்ச்சியடையாத தனியார் துறையைக் கொண்டுள்ளது, மேலும் அதன் பங்குச் சந்தை பல ஆண்டுகளாக மிகக் குறைந்த வளர்ச்சியைக் காட்டுகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) FY23 இல் 0.17% குறைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் $123 பில்லியன் மதிப்புள்ள மொத்த நிதி தேவை என்றும், 2024-25 நிதியாண்டில் $21 பில்லியன் மற்றும் 2025-26ல் $23 பில்லியனை பாகிஸ்தான் எதிர்பார்க்கும் என்றும் கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“