Explained: The Booker Prize, one of the most coveted literary awards in the world: எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீயின் இந்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நாவலான டோம்ப் ஆஃப் சாண்ட், சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மொழி புத்தகம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
2018 ஆம் ஆண்டில் வெளியான ‘ரெட் சமாதி’ என்ற நாவல், டெய்சி ராக்வெல் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு 2021 இல் ‘டோம்ப் ஆஃப் சாண்ட்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
புக்கர் பரிசு அறக்கட்டளையால் ஆண்டுதோறும் வழங்கப்படும் இரண்டு இலக்கிய விருதுகளில் இந்த பரிசும் ஒன்றாகும், அதன் நோக்கம் “பொது நலனுக்காக இலக்கியத்தின் கலை மற்றும் மதிப்பை மேம்படுத்துவது” என்று கூறப்பட்டுள்ளது.
அறக்கட்டளையின் இணையதளத்தில், ”படைப்பு முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் (புக்கர் பரிசு) அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் (சர்வதேச புக்கர் பரிசு), உலகளாவிய அடிப்படையில் புனைகதைகளை கௌரவிக்கும் வகையில் விருதுகள் ஒரே மதிப்பில் வழங்கப்படுகினறன” என குறிப்பிடப்பட்டுள்ளது.
புக்கர் பரிசு என்றால் என்ன?
புக்கர் பரிசு என்பது நாவல்கள் மற்றும் சிறுகதைகளின் தொகுப்புகள் உட்பட ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புனைகதைக்களுக்கு வழங்கப்படும் சிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றாகும். இது முதன்முதலில் 1969 இல் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் நடுவர்கள் குழு அந்த ஆண்டின் சிறந்த படைப்பைத் தீர்மானிக்கிறது. அந்த படைப்பு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் மற்றும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இந்த நீதிபதிகள் குழுவில் புகழ்பெற்ற கலாச்சார வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் நாவலாசிரியர்கள் மற்றும் தொடர்புடைய துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இடம்பெறுவர். இந்த ஆண்டு குழுவில் ஐந்து நீதிபதிகள் இருந்தனர்.
புக்கர் பரிசு பெறும் வெற்றியாளர் £50,000 தொகையைப் பெறுகிறார். முன்னதாக வெளியிடப்படும் நீண்ட பட்டியலில் சுமார் 12 படைப்புகள் இடம்பெறும். தி ‘புக்கர் டசன்’ என்றும் அழைக்கப்படும் இந்த நீண்ட பட்டியல் இந்த ஆண்டின் ஜூலையில் அறிவிக்கப்படும், பின்னர் ஆறு புத்தகங்களின் குறுகிய பட்டியல் செப்டம்பரில் அறிவிக்கப்படும். வெற்றியாளர் நவம்பர் 2022 இல் அறிவிக்கப்படுவார்.
சர்வதேச புக்கர் பரிசு என்பது என்ன?
சர்வதேச புக்கர் பரிசு 2005 இல் தொடங்கி வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் பரிசு, பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகள் உட்பட பல படைப்புகளுக்கு வழங்கப்பட்டது, ஆலிஸ் மன்ரோ, லிடியா டேவிஸ் மற்றும் பிலிப் ரோத் ஆகியோர் ஆரம்பகால வெற்றியாளர்களில் சிலர். 2015 ஆம் ஆண்டில், சர்வதேச புக்கர் பரிசின் விதிகள் அதை வருடாந்திர பரிசாக மாற்றியது. புதிய விதிகள் மற்றொரு மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளில், ஆண்டுதோறும் ஒரு சிறந்த புத்தகத்திற்கு வழங்கப்படும் என குறிப்பிடுகிறது. £50,000 பரிசுத் தொகை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: பாலியல் தொழிலாளிகள் குறித்து உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? வழக்கு கடந்து வந்த பாதை
இது ஏன் ‘புக்கர்’ என்று அழைக்கப்படுகிறது?
புக்கர் பரிசு, 1969 முதல் 2001 வரை, அதன் ஆரம்ப ஸ்பான்சராக இருந்த பிரிட்டிஷ் உணவு மொத்த விற்பனை ஆபரேட்டரான புக்கர் குரூப் லிமிடெட்டின் பெயரால் பெயரிடப்பட்டு வழங்கப்பட்டது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட முதலீட்டு மேலாண்மை நிறுவனமான மேன் குரூப், 2002 இல் பரிசுக்கு நிதியுதவி செய்யத் தொடங்கியது, இதனால் அது மேன் புக்கர் பரிசு என்று அறியப்பட்டது. மேன் குரூப் அவர்களின் ஸ்பான்சர்ஷிப்பை 2019 இல் முடித்துக்கொண்டது. அதன் பிறகு அமெரிக்க தொண்டு நிறுவனமான கிராங்க்ஸ்டார்ட் ஸ்பான்சராக இருந்து வருகிறது. அதிலிருந்து பரிசுப் பெயர் மீண்டும் ‘புக்கர்’ என மாறிவிட்டது.
சில முக்கிய வெற்றியாளர்கள் யார்?
மார்கரெட் அட்வுட் (‘தி டெஸ்டமென்ட்ஸ்’), யான் மார்டெல் (‘லைஃப் ஆஃப் பை’) மற்றும் ஜூலியன் பார்ன்ஸ் (‘தி சென்ஸ் ஆஃப் எ என்டிங்’) ஆகியோர் விரும்பத்தக்க பரிசின் முக்கிய வெற்றியாளர்களில் அடங்குவர். அருந்ததி ராய் (‘தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’), சல்மான் ருஷ்டி (‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’), கிரண் தேசாய் (’தி இன்ஹெரிட்டன்ஸ் ஆஃப் லாஸ்) மற்றும் அரவிந்த் அடிகா (‘தி ஒயிட் டைகர்’) போன்ற பல இந்திய வம்சாவளி எழுத்தாளர்கள் கடந்த காலங்களில் புக்கர் பரிசை வென்றுள்ளனர். சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியராக தற்போது கீதாஞ்சலி ஸ்ரீ உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil